search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக முதலமைச்சர்"

    • தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார்.
    • விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

    அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.

    பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.
    • உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுமைமை ஆக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் கருணாநிதி படைத்துள்ளார்கள்.

    தனியொரு மனிதரால் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என எண்ணும் வண்ணம் கலைஞர் சாதனை படைத்துள்ளார்.

    கலைஞரின் இந்த நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படும்.

    தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.
    • தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை.

    தமிழக சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.

    போதைப் பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை.

    தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் 'தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937'-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    • 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
    • 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம்.

    சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.

    நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர்.
    • அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    தமிழக முன்னாள் அமைச்சரான ஆர்.எம். வீரப்பன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவிதுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

    அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆர்.எம்.வீ. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர்.

    எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

    பின்னாளில் எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

    எம்.ஜி.ஆர்-ன் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.

    அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

    ஆர்.எம்.வீரப்பனின் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம். வீரப்பன் புகழும் நிலைத்திருக்கும்!

    இவ்வாறு இரங்கல் செய்தில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
    • திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவர் சந்தைக்கு சென்றார்.

    அப்போது, உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.

    தொடர்ந்து, முதலமைச்சருடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது
    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (மார்ச் 2) முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், பேராட்டக் குழுவைக் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும். இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை 22-5-2018 அன்று நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

    அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

    இச்சந்திப்பின்போது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது.
    • எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!

    எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு.
    • திராவிட மாடல் போன்ற வாக்கியங்களை குறிப்பிடவில்லை என அவருக்கு எதிராக தீர்மானம்.

    தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை கவர்னர் அப்படியே வாசிப்பதுதான் நடைமுறை.

    ஆனால் ஜனவரி 9-ந்தேதி சட்டசபை கூடியதும் கவர்னர் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல் ஆகிய வாசகங்களை வாசிக்கவில்லை. இதை உன்னிப்பாக கவனித்த துரைமுருகன் உடனடியாக ஒரு தீர்மான அறிக்கையை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

    கவர்னர் முழு உரையையும் வாசித்தபின், சபாநாயகர் தமிழ் உரையை வாசிப்பார். அதன்பின் தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடையும்.

     சபாநாயகர் தமிழ் உரையை வாசித்த முடித்த உடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அந்த தீர்மானத்தில் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து பகுிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரை இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனக் கூறியதும், அவை முடிவடையும் முன்னதாகவே ஆளுநர் ஆர்.என். ரவி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    • மிச்சாங் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள்
    • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    புயல் பாதிப்பிற்குள்ளான பலர்/வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

    அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம்.

    எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    ×