search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"

    • வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.
    • அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.

    இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
    • பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

    இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.

    • விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அதற்கு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி அதிமுக நிர்வாகிகள் துணைநிற்போம். வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தஒரு இடைஞ்சல் ஏற்பட்டாலும் அதை போக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். யார் வதந்தியை பரப்பினாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அம்மா அவர்களின் ஆட்சியிலும், எடப்பாடியாரின் ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட வதந்தி கிளப்பினால் தொழிலாளர்கள் முதல் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். யார் இதை செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு இந்தியாவுக்கே வேலை தரும் அளவுக்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தான். ஈரோடு தேர்தல் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. அதிமுக எடப்பாடியாரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியார் தான் நிரந்தர பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டதை போல, விரைவில் இந்த திமுக அரசு 100 யூனிட் இலவச மின்சாரத்தை கைவிட தான் இந்த பணிகளை செய்து வருகிறது. மின்சார கட்டணத்தை ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். தண்ணீர் வரி, வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். இதனால் வீட்டு வாடகை உயர்ந்திருக்கிறது. திமுகவின் செயலாளர் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, தம்பி மனோகரன், , எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, கருணாகரன் ,ரத்தினகுமார், திலகர் நகர் சுப்பு, பாசறை சந்திரசேகர், ஹரிஹரசுதன் சுதன், விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வலைத்தளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை வெளியிட்டதாக ஆவடி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலி வீடியோக்களை மேலும் யாரும் பரப்புகிறார்களா? என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்கள் பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழு தமிழகத்தில் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிந்தது.

    இதில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதியானது.

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்திய பீகார் அதிகாரிகள் இன்று சென்னையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி கருத்து கேட்டு வருகிறார்கள்.

    வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் போலியான வீடியோக்கள் மற்றும் தகவல்களை பரப்புவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூரில் 3 வழக்குகளும், கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் தலா ஒரு வழக்குகளும் என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் தொடர்புடையவர்களை பிடிக்க டெல்லி, பீகாருக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

    வெளிமாவட்டங்களை போன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வடமாநிலத்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். கட்டிட பணி, ஓட்டல் தொழில் உள்பட அனைத்து வேலைகளிலும் வடமாநிலத்தவர் ஈடுபட்டுள்ளதால் சென்னையிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    போலி வீடியோக்களை பரப்புவதில் வடமாநிலத்தவர்களே அதிகம் ஈடுபட்டிருப்பதால் இதுபோன்ற கண்கணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியான மறைமலைநகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான புதிய வீடியோ ஒன்று பரப்பப்படுவது தெரியவந்தது. இதையடுத்து இந்த வீடியோவை பரப்புபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    இதன்படி குறிப்பிட்ட வீடியோவை கண்டறிந்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த வீடியோவில் வெளிமாநிலத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து குறிப்பிட்ட வீடியோவை பரப்பியவர் யார்? என்பது பற்றிய அதிரடி விசாணையில் போலீசார் இறங்கினர்.

    அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற வாலிபர் இந்த போலி வீடியோவை தனது செல்போன் மூலமாக பரப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து யாதவ் எங்கு தங்கி இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர் தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி இருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மனோஜ் யாதவை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பகைமையை உருவாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் மனோஜ் யாதவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

    மனோஜ் யாதவுடன் வெளிமாநிலங்களை சேர்ந்த 15 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த போலி வீடியோவை பரப்பிய விவகாரத்தில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதன் முடிவில் போலி வீடியோவை பரப்பியது தெரிய வந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

    இதற்கிடையே வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை வெளியிட்டதாக ஆவடி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். "ஒபின் இண்டியா டாட் காம்' என்ற இணைய தளம் மூலமாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக சூர்ய பிரகாஷ் என்பவர் திருநின்றவூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் அந்த இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ரூசன், எடிட்டர் நுபுர்சர்மா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    153ஏ, 505 1(பி), 505(2) ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் 2 பேரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ராகுல் ரூசன், நுபுர்சர்மா இருவரும் நடத்தி வரும் இணைய தள முகவரியை வைத்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆவடி கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது போன்ற போலி வீடியோக்களை மேலும் யாரும் பரப்புகிறார்களா? என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கிருந்து ரெயில்களில் வருகிறார்கள்.

    மிக குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலைபார்ப்பதாலும் அடிக்கடி லீவு எடுப்பது இல்லை என்பதாலும் பல நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன.

    கட்டுமான பணிகள், ஓட்டல்கள், அழகு நிலையங்கள், பின்னலாடை நிறுவனங்கள், தென்னந்தோப்பு பணிகள், விவசாய பணிகள், மளிகை கடை, காய்கறி மார்க்கெட் வேலைகள், மூட்டை தூக்குபவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என பல்வேறு நிறுவனங்களிலும் இவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, சேலம், நீலகிரி உள்பட பல மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பீகார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல சமூக ஊடகங்களில் போலியான வீடியோ சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து பதட்டமான சூழல் உருவாகி உள்ளது.

    பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும், போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து உண்மை நிலையை அறிந்து வருகின்றனர்.

    இந்த சூழலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தமிழகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், '6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் இருப்பதாகவும், சரியான புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ள கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், திருமழிசை, மப்பேடு, பொன்னேரி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள மகேந்திராசிட்டி, மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அமைப்புசார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் பணி அமர்த்துநர்கள் மேற்படி தொழிலாளர்கள் குறித்த விவரங்களை www.labour.tn.gov.in/ISM என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நலன்காத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் பயணங்களின் போதும், இதர தருணங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது குறைகள், புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அணுமின் நிலையத்தில் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • போட்டியில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மாநில புலம்பெயர் தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    அண்மையில் திருப்பூரில் வாட்ஸ் அப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து வட மாநில தொழிலாளர்களுக்கு பாது காப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், புலம்பெயர் தொழி லாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்தும் அச்சம் தவிர்த்தும் அறிவுரை வழங்கினார்

    இந்நிலையில் கூடங்குளத்தில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும், அச்ச உணர்வை தவிர்க்கும் விதமாக கைப்பந்து போட்டி நடத்தினர்.

    இதில் காவல்துறை அணியும், வடமாநில தொழிலாளர்கள் அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அணிகளுக்கு டி.எஸ்.பி.யோகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு குறித்து பேசிய கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ எந்த நேரமும் தொடர்பு கொள்ள தொடர்பு செல்போன் எண் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், இரண்டாம் நிலை காவலர் பாலகிருஷ்ணன்,போலீஸ் ஏட்டு முத்துபாண்டி, குற்ற புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர், உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார்.
    • நிறுவனத்தில் 147 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இன்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடி சென்ற போது காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார்.

    அங்கு 147 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வழக்கம்போல் தாங்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம்.
    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கான பாதுகாப்பினையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    தனி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்கள், தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு, அக்குழுக்கள் மூலம் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை ஆய்வு செய்து சரியான பணிச் சூழல் நிலவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் உடன் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி 1800 599 7626 மற்றும் வாட்ஸ்அப் எண். 9444317862-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொழிலாளர் நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு உரிய உத்தரவிடப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர்.

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூரில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தொடர்பு கொண்டு இது போலியான வீடியோக்கள் என்றும் உடனடியாக ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கம் செய்யவும் அறிவுறுத்தினர். ஆனால் ரூபேஷ் குமார் அதனை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    பீகாரில் இருந்து வெளியேறிய ரூபேஷ்குமார் தெலுங்கானாவில் பதுங்கி இருந்தார் அவரது செல்போன் எண்ணைக் கொண்டு அவர் இருந்த இடத்தை அறிந்த தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து அவரை கைது செய்தனர் தற்பொழுது அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

    ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த 185 போ் உள்பட 950 வடமாநில தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனா்.

    அவ்வாறு பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டியின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டா் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக இங்கு பணிபுரிவதாலும், பாதுகாப்பு உணா்வுடன் இருப்பதாலும் தான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அவா்களது 1,250 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியா் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரி உள்பட பலா் உடனிருந்தனா்.

    • தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர்.
    • நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுைர, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் மில்கள் செல்பட்டு வருகின்றன.

    இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சர்ச்சை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தனியார் மில்களுக்கு சென்று வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோவை நம்பி  யாரும் அச்சமடைய வேண்டாம். இங்கு உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. உங்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.

    வேடசந்தூர் பகுதியில் உங்களுக்கு நூற்பாலை நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார். இதுகுறித்து வடமாநில தொழிலாளியான அசாம் மாநிலம் நல்வாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்லாம் என்பவர் கூறுகையில்,

    நான் கடந்த 8 ஆண்டு காலமாக இங்கு பணியாற்றி வருகிறேன். தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர். அவர்களின் ஊர்களில் நடந்த திருவிழாவின்போது அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர் சரவணன், தொழிலாளர் மேற்பார்வையாளர் பிரகாஷ், தொழிலாளர் பொறுப்பாளர் வீரமணி, விடுதி காப்பாளர் சுப்பிரமணி, நிர்வாக விசாரணை அதிகாரி பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து மில்களுக்கும் சென்று இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×