search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின மக்கள்"

    • அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
    • மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.

    இதனால் அந்த குடியிருப்புகளில் தங்கமுடியாமல் சுமார் 10 குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்குகளில் வசித்து வருகின்றனர். மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    இந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் வனப்பகுதியில் தேன் மற்றும் மூலிகைகளை சேகரித்து நகர்பகுதியில் விற்று வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    தற்போது இந்த மலைக்குகையில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் 3 வேளை உணவுகூட கிடைக்கவில்லை என அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அரசு எங்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் சில நாட்கள் மட்டுமே வசித்து வந்தோம். அதன்பிறகு எங்களை ஒருதரப்பினர் அடித்து விரட்டிவிட்டனர். இதனால் கடந்த 6 மாதங்களாக மலைக்குகையில்தான் வசித்து வருகிறோம். இங்கு வானமே கூரையாக எங்கள் வீடு உள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் குழந்தைகளை காப்பாற்ற தூக்கம் இல்லாமல் விலங்குகளை விரட்டி வருகிறோம்.

    பகல் நேரத்தில் நாங்கள் விறகு எடுத்துவர செல்கிறோம். அதனை வைத்து உணவு சமைத்து வருகிறோம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து மருத்துவம் செய்கிறோம். நாங்கள் குடியிருந்த வீடுகளில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார் எண் கூட கிடையாது.அதனால்தான் மின்இணைப்பு கொடுக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு தேவையான உண்ணஉணவு, உடுத்த உடை, இருப்பிடம் ஆகிய 3-ம் எங்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

    எனவே அதிகாரிகள் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வசதி மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராம்கோ குழுமத்தின் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் ஏற்பாட்டில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரின் அறிவுறுத்தலில் செயலர் நீதிபதி இருதய ராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பழங்குடியின சாதி சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006-ன் படி இண்டு நார் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    பின்னர் நீதிபதி இருதய ராணி கூறியதாவது:-

    'ஒவ்வொரு பழங்குடியின கிராமமாக சென்று அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அழைத்து வருகிற 24-ந் தேதி கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோ சிக்கப்படும். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர்.
    • பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனி பகுதியில் குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புலி கடித்து கொன்றது.

    இதனால் பழங்குடி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் அடுத்தடுத்து அந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை புலி கடித்து குதறியது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    சிற்றார் சிலோன் காலனி உட்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிலோன் காலனி குடியிருப்பு பகுதியில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. எலைட் படையினரும் மருத்துவ குழுவினரும் அங்கேயே முகாமிட்டு தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

    கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர். இருப்பினும் குமரி மாவட்ட வனத்துறையினர் சிலோன் காலனி பகுதியில் கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆறுகாணி அருகே ஒரு நூறாம் வயல் கீழ்மலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்து கொன்றது பழங்குடி மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளை புலி கடித்துக் கொன்றது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இரண்டு குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்துக் கொன்றிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டை யின் காரணமாக புலி ஒரு நூறான் வயல் கீழ் மழை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக புலி தென்படவில்லை. ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. புலி நடமாட்டம் தென்படாததால் தேடுதல் பணியில் ஈடுபட்ட படையினர் திரும்பி சென்றனர். தற்போது ஒரு நூறான் வயல் கீழ்மலை பகுதியில் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்துள்ளது.

    அந்த பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் ஆடுகளை கட்டும்போது அந்த பகுதியில் தீ வைத்திருந்தால் புலி அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியும். புலியை பிடிக்க பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • அரசு வழங்குகின்ற எந்த சலுகையாக இருந்தாலும், சிட்டா, அடங்கள் இல்லாததால் பெற முடிவதில்லை.
    • இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் கூட வழங்கப்பட வில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சக்கிலிநத்தம் கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்த 350-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

    ஆனால் இங்குள்ள மக்களுக்கு இதுவரை அரசு வழங்குகின்ற எந்த சலுகைகளும் எட்டப்படுவதில்லை. மேலும் மூன்று தலைமுறையாக அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசுக்கு சொந்தமான நிலங்களும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    இதனால் அரசின் மூலம் வழங்கப்படுகின்ற சலுகை களைப் பெற சிட்டா, அடங்கள் தர வேண்டும் என்பதால், பட்டா இல்லாத இடங்களுக்கு வருவாய் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.

    மேலும் சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்கின்ற இடத்திற்கு தனி தனியாக பட்டா வழங்க வேண்டும்.

    விவசாய நிலங்களை அவர் அவருக்கு சொந்தமான இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளனர். இதுவரை இந்த கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக 100 க்கு மேற்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த காலங்களில் பல்வேறு அரசு அதிகாரிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அரசு வழங்குகின்ற எந்த சலுகையாக இருந்தாலும், சிட்டா, அடங்கள் இல்லாததால் பெற முடிவதில்லை. மேலும் இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் கூட வழங்கப்பட வில்லை.

    இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 5 மாதத்திற்கு முன்பே மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து, தற்போது மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

    அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ப்போவதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் வீடுகளில் கருப்பு கொடி யேற்றி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என கிராமமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    • பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர்.

    சென்னை:

    சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர். பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறிய அவர்கள், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

    சமீபத்தில் ரோகிணி திரையரங்கிற்கு 'பத்து தல' படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர்.
    • பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அனந்தகிரி மண்டலம் காசி பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் உள்ள புளிய மரத்தில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

    மலை கிராமத்தை சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புளியம் பழங்களை சேகரித்து மூங்கில் கூடைகளில் அடைத்து டோலி கட்டி மலையிலிருந்து கீழே கொண்டுவந்து சந்தை மைதானத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

    சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர். இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புளி வியாபாரம் செய்து வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    • தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
    • சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. பழங்குடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும்.விலங்குகள் சரணாலயம், யானைகள் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பூர்வீக பழங்குடி அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.

    தனியார் காடுகள் சட்டத்தில் சில பகுதிகளை நீக்க வேண்டும். சூழல் தாங்கு மண்டல பகுதிகள் என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு குமரி மாவட்ட குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.செயலாளர் வேலப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பினு குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மணி,ராஜேந்திரன், சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது. ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் .இதனால் போலீசாருக்கும் பழங்குடி மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து மனு அளித்தனர்.

    • பாரம்பரிய பாடலுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தை காக்கும் வகையில் வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    இதில், வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் நடும் விழாவை தொடக்கி வைத்தாா்.

    தொடா்ந்து படுக இன மக்கள் தங்களின் பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மரம் வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

    விழாவில் 2022 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.ஒவ்வொரு மரத்தையும் தங்களின் குழந்தைகளின் பெயா் சூட்டி வளா்க்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மரத்தினால் ஏற்படும் நன்மைகள், வனங்கள் ஏன் காப்பாற்றபட வேண்டும் என்பது குறித்து நாக்கு பெட்டா சங்கம், ஈஷா அறக்கட்டளை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவா் சச்சின் துக்காராம் போஸ்லே மற்றும் வன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கடந்த 6 மாதமாக இங்கு பி.எஸ்.என்.எல் சிக்னல் போதிய அளவில் கிடைப்பது இல்லை.
    • காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை பகுதி உள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடை மூலம் கெம்மாரம்பாளையம், நெல்லித்துறை ஊராட்சிகளுக்குட்பட்ட சேத்துமடை, கொடியூர், நெல்லிமரத்தூர், பூச்சிமரத்தூர், செங்கலூர், திட்டுக்குலை, குண்டையூர், கடம்பன்கோம்பை, நீராடி, பில்லூர், கீழ் பில்லூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதமாக இங்கு பி.எஸ்.என்.எல் சிக்னல் போதிய அளவில் கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் மக்கள் செல்போனே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ரேசன் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு கடையில் குடும்ப அட்டை தாரர்களிடம் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மலை கிராமங்களில் இருந்து வரும் குடும்ப அட்டைதாரர்கள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதிலும் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டுமே ரேசன் வழங்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் பழங்குடியின மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் டவர் ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ரேசன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் மழையில் நனைந்தபடி காத்திருந்த நிலையில் கைரேகை பதிவு செய்யும் எந்திரத்தில் இணையவழி சேவை கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் பில்லூர் அணை பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போதிய இணையதள வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் தனியாக டவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுதொடர்பாக தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மானார் பகுதியில் தற்போது பி.எஸ்.என்.எல் டவர் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அப்பகுதியில் ஏற்கனவே ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க்குகள் முழுமையாக கிடைத்து வருகின்றன. எனவே மானார் பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ள பி.எஸ்.என்.எல் டவரை பில்லூர் அணை பகுதியில் ஏற்படுத்தினால் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் பயன் பெறுவர் என கூறினர்.  

    • வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள கோடமூளா என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் பெட்டகுரும்பா இனத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கி இருக்கும் வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இவர்களுக்கு 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 46 வீடுகள் கட்டப்படுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடு கட்டும் பணி

    தொடங்கியது.வீடு கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும், இதுவரை 10 வீடுகள் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வீடுகள் முழுமையடையாமலும், மேற்கூரை அமைக்கப்படாமலும் பாதியிலேயே நிற்கிறது.

    இதனால் புதிய வீடுகளில் குடியேறலாம் என்று நினைத்த பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் ஒழுகும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தார்பாய்கள், பிளாஸ்டிக் தாள்களை வைத்து மறைத்து வீடுகளில் வசித்து வருகிறோம். இது தொடர்பாக கூடலூர் நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பாதியில் நிற்கும் வீடுகளை கட்டி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசு மாடுகள் பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
    • இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள பசுமை நிறைந்த, இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியே பச்சைமலை ஆகும். இங்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வண்ணாடு, கோம்பை ஊராட்சியும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தென்புறநாடு ஊராட்சியும் என மொத்தம் 3 ஊராட்சிகள் உள்ளன. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் இந்த மலைசூழ் பகுதியில் பழங்குடியின மக்களே அதிகளவில் வசிக்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்கு, முந்திரி, நெல், பலா இவற்றின் மூலம் வருகின்ற வருமானமே இவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி பொருளாதாரத்தைப் பெருக்குகின்ற வகையில், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இங்குள்ள மக்களுக்கு கறவைப் பசுக்கள் வழங்குதல், உழவுக்கு காளை மாடுகள் வழங்குதல், முந்திரியினை பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்றிட ஏற்பாடு செய்தல், தேனீ வளர்ப்பினை ஊக்குவித்து தேன் உற்பத்தியின் மூலம் தனி அடையாளத்தைக் கொண்ட தேனை விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் 10 ஆயிரம் தேனீப் பெட்டிகள் வழங்குதல்,

    மரவள்ளிக் கிழங்கினை நல்ல முறையில் சந்தைப் படுத்துதல், மிளகு பயிரிடுதல், மிளகாய், காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உற்பத்தி செய்து தனி அடையாளத்துடன் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

    இதன் முதற்கட்டமாக, பச்சை மலையில் வாழும் பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாகவும், நேர்த்திக்கடனாகவும் வரப்பெற்ற மாடுகளை வழங்கி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தித் திட்டத்தினை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கடந்த 27-ந்தேதி தொடங்கி வைத்தனர்.

    47 பயனாளிகளுக்கு பசுவும் கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுமாடும், 5 பயனாளிகளுக்கு தலா 2 காளை மாடுகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    பசுமாட்டினைப் பெற்ற டாப்செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இந்திரா தெரிக்கையில், எனது பெயர் இந்திரா, எனது கணவர் பெயர் குமார். நாங்கள் பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் வசித்து வருகிறோம்.

    நாங்கள் மலைவாழ் மக்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    என்னுடைய குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து எனது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றேன். தமிழக முதலமைச்சர் மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படையச் செய்திடும் வகையில் இத்திட்டத்தினால் எங்களுக்கு பசுமாடு கிடைத்துள்ளது.

    இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    பச்சமலையைச் சேர்ந்த முத்துலெட்சுமி கூறுகையில், எனது பெயர் முத்துலெட்சுமி, எனது கணவர் பெயர் சரவணன். நாங்கள் வேலைக்குச் செல்பவர்கள். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் வயலில் வேலைபார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எங்கள் குடும்பம் மிகவும் ஏழைக்குடும்பம்.

    நாங்கள் மலைப்பகுதியில் வசிப்பதால் வெளியில் சென்று வேலைபார்க்கும் சூழ்நிலை இல்லை.

    விவசாயத்தையே நம்பி ஜீவனம் செய்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வழங்கிய பசு மாடுகள் எங்கள் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு மலைவாழ் மக்களின் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    ×