search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது.
    • தினமும் மாலையில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.

    கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலையில் அங்குள்ள கல்யாணசுந்தரவல்லி தாயார் சன்னதியில் தொடங்குகிறது. இதில் சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும். மேலும் தினமும் அதே மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் தாயார் காட்சி தருவார்.

    இதையொட்டி அந்த மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந்தேதி முடிய இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக தினமும் மாலையில் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நவராத்திரி கலை விழா நடைபெறுகிறது.

    இதில் இன்று மாலையில் நாதஸ்வர நிகழ்ச்சியும், 27-ந் தேதி பரத நாட்டியம், மிருதங்க கச்சேரி, 28-ந் தேதி கோவிந்த நாம சங்கீர்த்தனம், 29-ந் தேதி கர்நாடக சங்கீர்த்தனம், 30-ந் தேதி சங்கீர்த்தனம், 1-ந் தேதி பரத நாட்டியம், 2, 3, 4-ந் தேதி ஆகிய 3 நாட்களும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது.
    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதற்காக கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு முருகபெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிகால பூஜையில் காப்பு கட்டப்பட்டது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது. 10 நாட்களும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும். மேலும் கோவில் வளாகத்திலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி அன்று முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் கொலு கண்காட்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மேலும் வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

    • அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’.
    • நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

    26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்

    சிவனை வழிபட ஒரு ராத்திரி, 'சிவராத்திரி'. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் 'நவராத்திரி'. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

    * நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் அனைவரும், விரதம் இருந்து கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    * நவராத்திரி பூஜையின் ஒன்பது நாட்களும், ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை காண்பவர்களுக்கு, நவராத்திரி பூஜை செய்ததற்கான பலன் முழுமையாக கிடைக்கும்.

    * அம்பாள் ஒரு சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், அம்பாளை சிறப்பிக்கும் வகையிலான பாடல்களில் ஒன்றையாவது பாட வேண்டும்.

    * நவராத்திரி நாட்களில் பகல் வேளையில் சிவபெருமானையும், இரவு நேரத்தில் அம்பிகையையும் பூஜை செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவில்லாத பலன்களைப் பெறலாம்.

    * இன்றைய காலகட்டத்தில் வீட்டில் கோலமிடும் பலரும், சுண்ணாம்பு மாவைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரியின் ஒன்பது தினங்களில் மட்டுமாவது அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து அருள்வாள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    * நவராத்திரி ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் நைவேத்தியம் படைப்பது அவசியம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

    * நவராத்திரி காலத்தில் முடிந்தவரை தேவியின் நாமத்தை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். 'ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ' என்று நூற்றியெட்டு முறை சொன்னாலே போதும். சிறப்பான பலன் கிடைக்கும்.

    * நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.

    * நவராத்திரியில் வரும் திங்கட்கிழமை, லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    * தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, பலர் கூட்டாக சேர்ந்து மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் ஏராளமான பேர்களுக்கு தானமாக அளிப்பது நன்மைகளை வழங்கும்.

    * நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதிஅன்று ஹயக்கிரீவரை வழிபட்டால் ஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தையும் ஓதுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    * விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

    • ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை அக்டோபர் 2-ந்தேதி நடக்கிறது.
    • 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான நாளை பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைகிறார்.

    இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறுகிறது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 1-ந் தேதி மற்றும் 8-ம் திருநாளான 3-ந் தேதி ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 2-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.

    விழாவின் 9-ம் நாளான 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.
    • 4-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும் 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நாளை (திங்கட்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. அதோடு பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் 9-ம் நாளான அடுத்த (அக்டோபர்) மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • நவராத்திரி நாட்களில் தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவின் முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது.
    • 15 அரங்குகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் நடைபெறுகி்ன்றன.

    இந்த ஆண்டுக்்கான நவராத்திரி உற்சவ விழா நாளை(26-ந்தேதி) தொடங்கி அடுத்தமாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடக்கிறது.

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரமாகி கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும். மேலும் சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

    அதன்படி 26-ந் தேதி (நாளை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் நடைபெற்று, சிறப்பு பூஜை நடக்கிறது.

    சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கொலு பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள் உள்ளிட்ட இதர பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. இதுதவிர சுவாமியின் வாகனங்களும் கொலு சுவாடிகளில் இடம் பெறும். பக்தர்கள் அதனை தரிசிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் திருவிழாவையொட்டி பொற்றாமரைகுளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக இசை நிகழ்்ச்சி,, தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்றவையும் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் சென்னையில் துர்கா சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
    • சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு திறந்த வெளியில் துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    நவராத்திரி விழாவையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி வீடுகள், பொது இடங்களில் பொதுமக்கள் துர்க்கை அம்மன் சிலைகளை பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். இதையொட்டி சென்னையி ல் விதவிதமான துர்கை அம்மன் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா அனைத்து பகுதிகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதையொட்டி நூற்றுக்கணக்கான பல்வேறு விதமான துர்க்கை அம்மன் சிலைகள் சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. 2 அடி முதல் 10 அடி வரையிலான துர்க்கை அம்மன் சிலைகள் பலவித வண்ணங்களில் தயாராகி வருகிறது.

    இதுகுறித்து சென்னை பிரபாசி கலாச்சார சங்கத்தைச் சேர்ந்த சுபாஜித் பத்ரா கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக துர்கா பூஜையை பெரிதாகக் கொண்டாட முடியவில்லை. அதனால், இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் பொது இடங்களில் பெரிய வகையிலான துர்க்கை அம்மன் சிலைகள் பூஜையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட உள்ளது. துர்கா பூஜை விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் வசிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிப்லாப் பக்தா கூறியதாவது:-

    கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் சென்னையில் துர்கா சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இந்த பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டோம். பலவித வண்ணங்களில் துர்க்கை அம்மன் சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக சிறந்த சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    துர்க்கை நடன, நாடகத்துக்காக கொல்கத்தாவில் இருந்து புரோஹித், தோல் தாஷா மற்றும் போக் தயாரிப்பவர்களைக் கூட அழைத்து வருகிறோம். துர்கா பூஜை விழாவில் மிஷ்டி, ரஸ்குல்லா, மிஷித்தோய் உள்ளிட்ட வங்காள உணவு வகைகளை பக்தர்களுக்கு வழங்குகிறோம்.

    சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு திறந்த வெளியில் துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு பந்தல், கூடார வேலைகள் நடந்து வருகிறது. பூஜையில் வைக்க சிறப்பு துர்கா சிலைகள் தயாராகி வருகிறது. வருகிற 30- ந்தேதி சிறப்பாக துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • நாளை சாமி சிலைகள் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டைக்கு சென்றடைகிறது.

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி விக்ரகங்கள் ஆண்டு தோறும் பங்கேற்பது வழக்கம்.

    இதற்காக இந்த சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து யானை மற்றும் பல்லக்குகளில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு 26-ந்தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கடந்த 22-ந்தேதி ஊர்வலமாக புறப்பட்டார்.

    வழிநெடுக பக்தர்கள் கொடுத்த வரவேற்புக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து குமார கோவில் முருகன், தேவார கட்டு சரசுவதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் வந்ததும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழகம் மற்றும் கேரள இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அங்கிருந்து சரஸ்வதி தேவி யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் குமார கோவில் முருகன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கிலும் ஊர்வலமாக புறப்பட்டது.

    இரவில் சாமி சிலைகள் குழித்துறை வந்தடைந்தது. இதில் சுவாமி சிலைகள் குழித்துறை மகாதேவர் ஆலயம் மற்றும் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை குழித்துறை சாமுண்டே ஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஊர்வலம் தொடங்கியது. பக்தர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் அரசடி விநாயகர் ஆலய பக்தர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக வந்த சாமி சிலைகளை பக்தர்கள் வழி நெடுக நின்று குலவை சப்தம் முழங்க வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ் குமார், பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் சசி குமார், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் ரத்தின மணி, பிஜு, பா. ஜனதா முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சாமி விக்ரகங்கள் இன்று குழித்துறை, திருத்துவபுரம், படந்தாலு மூடு வழியாக குமரி-கேரள எல்லை ப்பகுதியான களியக்காவிளையை சென்றடைகிறது. அங்கு தமிழக இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், கேரள இந்து அறநிலைய துறை அதிகாரியிடம் பாரம்பரிய முறைப்படி சாமி விக்கிரகங்களை ஒப்படைக்கின்றனர்.

    அதன் பின்னர் இந்த விக்ரகங்கள் இன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்க வைக்கப்படுகின்றன. நாளை (25-ந் தேதி) காலை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சாமி சிலைகள் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் கிழக்கு கோட்டைக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் சாமி விக்கிரகங்கள் தனித்தனியாக நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் 26-ந்தேதியில் இருந்து 10 நாட்கள் கொலு மண்டபத்தில் நவராத்திரி விழாவிற்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    • ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.
    • கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 26-ந்தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது.

    விழாவையொட்டி கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை பகுதிக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வண்ணமிகு அழகான கண்களை கவரும் வகையில் கொழு பொம்மைகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதில் ஈடுபட்டுள்ள தங்கமணி கூறியதாவது:-

    கொழு பொம்மைகள் அனைத்தும் களி மண்ணால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம், மதுரை மீனாட்சி கோவில், திருப்பதி பிரமோத்சவம் போன்ற பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகள், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன் குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.

    இதுதவிர கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, ரூ. 50 முதல், ரூ. 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புபோல் ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை.

    வழக்கமான வியாபாரிகளை, பொம்மை தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பொம்மைகளை அனுப்புகின்றனர். இருந்தும், நவராத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளததையடுத்து எதிர்பார்த்த விற்பனை தொடர்ந்து மந்தமாக உள்ளது.

    செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்வார்கள். ஆனால் 2 ஆண்டுகளாக ஆர்டர்கள் கிடைக்காமல் தற்போது விற்பனை மந்தமாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×