search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலத்தொழுவு ஊராட்சி"

    • சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
    • பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும்

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு முத்தூர் - கொடுமுடி - காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    சமீபத்தில் குடிநீர் பாதையில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு தொடர்ந்து 15 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் எதுவும் செய்ய–வில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கான பொது–மக்கள் காலி குடங்களுடன் கடந்த 23-ந் தேதி சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் ஆலமரம் என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், ஊராட்சி பகுதிக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் தெருவிளக்குள் எதுவும் எரிவதில்லை. அதனால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் குறித்து பேசி நல்ல முடிவு எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சு–வார்த்தை நடத்துவதற்காக ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மாவட்ட ஊராட்சிகள் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ கூறுகையில், பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்றும், அதுவரை மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோல் தெருவிளக்கு பிரச்சனைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    அதேபோல் மாவட்ட ஊராட்சிகளின் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் பேசுகையில், குடிநீர் பிரச்சனைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதேபோல் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கவேல் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×