search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிக வளாகத்துக்கு"

    • சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிா்காலத்தில் இயற்கைப் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையிலும் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
    • கடந்த 1999-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியாா் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிா்காலத்தில் இயற்கைப் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையிலும் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

    குறிப்பாக, 1993ஆம் ஆண்டு மாஸ்டா் பிளான் சட்டப்படி 7 மீட்டருக்கு மேல் கட்டடங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டது.

    இதன் பின்னா் நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டுமெனில் நகராட்சி நிா்வாகத்திடம் இருந்து மட்டுமல்லாமல் வனத் துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

    ஊட்டியில் கேசினோ சந்திப்பில் கடந்த 1999-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியாா் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் அந்தக் கட்டிடத்துக்கு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தனா்.

    இதனை எதிர்த்து, தனியாா் வணிக வளாகத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டடத்தை இடிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், வணிக வளாகம் காலி செய்யப்ப–டவில்லை. இதைத் தொடா்ந்து, அந்த வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்க நகராட்சி ஆணையா் காந்திராஜனின் உத்தரவின்பேரில், நகரமைப்பு திட்ட அதிகாரி ஜெயவேல், நகரமைப்பு திட்ட ஆய்வாளா் மீனாட்சி தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனா்.

    இதற்கிடையே வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் தற்போது வழிபாட்டு தலம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டுத் தலத்துக்கு இடையூறு ஏற்படும் என தகவல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு திரண்டனா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் பிலிப், செந்தில்குமாா் தலைமையில் போலீசாா் குவிக்கப்பட்டனா். பின்னா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

    இதில் வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்படும் எனவும், வழிபாட்டுத் தலத்துக்கு 'சீல்' வைக்கப்படாது என்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் வணிக வளாகத்தில் உள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த கடைகளுக்கு 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினா்.

    ×