search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240268"

    • பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்படும்.
    • சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கல்யாணசுந்தரம் எம்.பி., அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

    இதை ஏற்று மேற்கண்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடந்தது. இதில் சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராமலிங்கம் எம்.பி., தமிழக அரசின் தலைமை கொறடா செழியன், சண்முகம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அய்யாராசு, அரசு வக்கீல் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் நன்றி கூறினார்.

    இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல், சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    • திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார்.
    • ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.

    அமைவிடம் :

    திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.

    தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.

    மலையின் சிறப்புகள் :

    திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.

    மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

    "குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

    தலச்சிறப்புகள் :

    இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.

    இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

    திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

    வள்ளலாரும், முருகப்பெருமானும் :

    வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

    திருவிழாக்கள் விவரம் :

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது.
    • சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    தந்தைக்கே குருவான கதை :

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி :

    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி :

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    இயற்கையான மலை அல்ல :

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

    மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச்செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண்கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

    திருவிழாக்கள் விவரம் :

    இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    • அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.
    • தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வள்ளிநாயகி திருமண நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 2-ம் ஆண்டாக நேற்று வள்ளி நாயகி, முருகப்பெருமான் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, குன்றக்குறவர் இன மேலப்பாடி வள்ளிநாயகிக்கும், குறவேடன் காவடி முருகப்பெருமானுக்கும் தாய் வீட்டு திருமண சீர்வரிசை குன்றக்குறவர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குன்ற குறவர் வள்ளி நாயகிக்கு குன்ற குறவர் இனத்தாரின் தாய் வீட்டு சார்பில் 30 வகையான பழங்கள், சீர்வரிசை, பட்டுப்புடவை, வேஷ்டி, துண்டு ஆகியவற்றை மேளதாளங்கள் முழங்க, சிலம்பம் விளையாட்டு, வில் அம்புடன் வாணவேடிக்கையுடன் காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து, தாய் வீட்டு திருமண சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பூர்வீக உணவான தேனும், தினையும் வழங்கப்பட்டது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் இவாஸ் நலச்சங்கம், கும்பகோணம் ரத்ததான டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தெப்பக்குளத்தில் முடிவடைந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விபத்தில்லா பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் சுலைமான் சேட்டு, இவாஸ் நல சங்க நிர்வாகக்குழு அப்துல் மாலிக் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடந்த ஜனவரி 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

    தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமா, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

    இதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் அயலக பிரிவான இந்தியன் வெல்பேர் போரம் அமைப்பின் சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முஹம்மது மேற்பார்வையில் ரியாத் மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா, சமூக நலத்துறை இணைச் செயலாளர் அறந்தை சித்திக் மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாகீர் பேக் ஆகியோர் மாரிமுத்து வேலை செய்த நிறுவனம் மற்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான பணிகளை முடித்து மாரிமுத்து உடலை சவூதி அரேபியா ரியாத்திலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    சென்னை வந்த மாரிமுத்துவின் உடலை அவரது மகன் கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலமாக மாரிமுத்து உடலை நாகக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்து அவர் குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர்.

    இறுதிச் சடங்கு நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, பாபநாசம் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் முஹம்மது ரிபாயி, சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி, முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 29 தேதி முதல் 1ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
    • கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோ விலில் திருக்கார்த்திகை திருவிழா வருகின்ற 27ந் தேதிதொடங்கி 8-ந் தேதி வரை 12 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு வருகின்ற 27 ஆம் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கப்பட்டு 28ஆம் தேதி காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மறுநாள் 29 தேதி முதல் 1ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து 2 - ந் தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற உள்ளது. மறுநாள் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும் இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மறுநாள் ஏழாம் தேதி அன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என முன்னெச்சரிக்கையாக காவல்துறை, சுகாதா ரத்துறை, பேரூராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, மற்றும் தொலைதொடர்புத் துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் கலந்து பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்ய முன்னேற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
    • சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

    இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஆஸ்கார் மீடியாஸ் மேனேஜிங் டைரக்டர் சாய்மோகன் பாலாஜி, மீனாட்சி பாலாஜி மற்றும் குடும்பத்தினர் உணவு வழங்கினர்.

    • ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் ஆறுபடை வீடுகளின் நான்காம் படை வீடாக திகழக்கூடிய சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகோவிலில் ஆடி மாதம் கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக இரவு பகல் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொ ரோனா காலத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு முருக பக்தர்கள் மகிழ்ச்சி யுடன் திருவிழாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    ×