search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் கைது"

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.

    இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரும் கடந்த மாதம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு அங்குள்ள இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிபந்தனையுடன் அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ராமேசுவரம் வருகை தந்தார். 20-ந்தேதி பிற்பகலில் வந்த அவர் அன்று இரவு ராமேசுவரத்திலேயே தங்கினார். மறுநாள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பிரதமரின் பயணம் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.

    ஆனாலும் விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக் கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து, இரண்டு விசைப்படகுகளுடன் 6 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் தவிக்கும் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
    • விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    ராமேசுவரம்:

    கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார்.

    இதனை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.
    • ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.


    இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருகின்றனர்.
    • கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர்.

    இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா அல்லது கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

    • விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.
    • உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற போது 10 விசைப்படகுகள் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 64 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ரெயில் மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் கலெக்டர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்ககோரி இன்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தங்கச்சிமடம் வலசைதெரு பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். தலைவர்கள் சகாயம், எமரிட், ஆல்வின் சைமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மோட்சம், மெல்டன், பீட்டர், சாம்சன், தங்கச்சிமடம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வல்லப கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இன்று தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டம் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.
    • இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துரமலிங்கதேவரின் நினைவிடத்தில் அவரது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். அப்போது தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து கொடுத்ததும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடத்தை புதுப்பித்து கொடுத்ததும், ரூ.9 லட்சத்தில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி அமைத்து கொடுத்ததும், ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சத்தில் முடியிறக்கும் மண்டபம், ரூ.5 லட்சத்தில் பால்வள மண்டபம், ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் இப்படி அனைத்தையும் அமைத்து கொடுத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்தான்.

    தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    அதுமட்டுமல்லாமல் மதுரையில் கம்பீரமாக தேவர் சிலை அமைந்துள்ளது என்றால் பி.கே.மூக்கையா தேவர் முயற்சியால் அமைக்கப்பட்டு அந்த சிலை திறப்பு விழாவுக்கு அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியை அழைத்து வந்து கலைஞர் தலைமையில் அரசு விழாவாக நடத்தியவர் தலைவர் கலைஞர்.

    மேலும் மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கதேவர் பாலம் என பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்தான். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளையை உருவாக்கியவர் கலைஞர். மேலும் கழக ஆட்சி முதன் முதலாக உருவானதும் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் சமூக மக்களின் வசதிக்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டனர்.

    அதனை உருவாக்க அனுமதி அளித்ததும் நமது கழக அரசுதான். அதன்படி கமுதி, உசிலம்பட்டி, மேல நீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். இதில் மேலநீலிதநல்லூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த கல்லூரியை 2021-ம் ஆண்டு கழக அரசு அமைந்ததும் அதனை கைப்பற்றி மீட்டு கொடுத்துள்ளோம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ரூ.1.5 கோடியில் 2 நிரந்தர மண்டபங்கள் அமைக்கப்படும் என நான் வெளியிட்டு இருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    1989-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு கொள்கையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    ஆகவே முத்துராமலிங்கத் தேவர் வீரராகவே பிறந்தார். வீரராகவே வாழ்ந்தார். வீரராகவே மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகும் வீரராகவே போற்றப்படுகிறார். இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியுள்ளார். எனவே அவரது சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தேவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறோம். மேலும் வெளியுறவுதுறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் பேசி அவ்வப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை இது தொடர்பாக பேச டெல்லிக்கு அனுப்பி உள்ளேன். இதுகுறித்து அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவார். மேலும் ராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று இப்பிரச்சனை தொடர்பாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே தெருவில் தான் வீசப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் காண்பித்து உண்மையை வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகை பாரதிய கட்சி அலுவலகமாக மாறி உள்ளது. இது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
    • இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717, IND-TN-10-MM-917 மற்றும் IND- TN-10-MM-972 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனவர், இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

    இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள். நம் மீனவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாம் விரும்புகிறோம்.

    பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

    2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும். தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்கிறது.

    எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14-ந் தேதி தான் சிங்களக் கடற்படை கைது செய்தது.
    • இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை அவர்களின் 5 படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாரை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14-ந் தேதி தான் சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டு, நேற்று தான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே அவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல் ஆகும்.

    ஒருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் என இருமுனைத் தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களையும், புதுச்சேரி காரைக்காலையும் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளூர் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது. தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக 14 மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்தது.
    • மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.

    நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    கடந்த 15-ந்தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையை சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 27-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைதாண்டியதாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட னர். பின்னர் கைது செய்யப்பட்டு 32 மீனவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். டீகோ கார்சியா தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×