search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்பவார்"

    • கர்நாடகாவில் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.

    மும்பை :

    கர்நாடகாவில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்குவோம்.

    கேரளாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பா.ஜனதா இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டேவின் புத்திசாலித்தனத்தால் அவர்களால் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

    மத்தியபிரதேசத்தில் கமல்நாத் முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

    ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய தலைவரை தேர்வு செய்ய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
    • சுப்ரியா சுலே தலைவர் பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை :

    82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர்.

    கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது, சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், தேவைப்பட்டால் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மேலும் பல தொண்டர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

    அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

    கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சரத்பவார் பதவி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார்.

    சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. அந்த பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சரத்பவாரின் அண்ணன் மகனும், மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் மற்றும் சரத்பவாரின் குடும்பம் சாராத சிலரும் கட்சி தலைவர் போட்டியில் உள்ளனர்.

    • 1999-ம் ஆண்டு சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
    • அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

    1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார்.

    அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.

    காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.

    இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.

    ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார்.

    அப்போது அவர், "சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை. 4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், "நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்" என்றார்.

    தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.

    2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

    இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.

    சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார். அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.

    • அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின.
    • பா.ஜனதாவுக்கு ஆதரவாக அஜித்பவார் பேசியிருந்தார்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின. இதை உறுதி படுத்தும் விதமாக பா.ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாராவது தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவில் இணைந்தாலும், ஒரு கட்சியாக தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காது" என சரத்பவார் கூறியதாக தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் தன்னை சுற்றி உலவும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்து இருந்தார்.

    அத்துடன் தனக்கு முதல்-மந்திரியாக 100 சதவீதம் விருப்பம் இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை, தற்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி உரிமை கோரலாம் என கூறி இருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார், "நாளை யாராவது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால், அது அவர்களது வியூகம். ஆனால் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்று இதை பற்றி பேசுவது முறையற்றது. ஏனென்றால் நாங்கள் இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது
    • எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகா விகாஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இவரின் பேச்சு கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்வியை எழுப்பியது.

    இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இது குறித்து நேற்று கூறியதாவது:-

    மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்கவே இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வருகிற மே 1-ந் தேதி அன்று மும்பையில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடக்கும். மகா விகாஸ் அகாடி மூத்த தலைவர்கள் அனைவரும் அந்த மேடையில் ஒன்று கூடுவார்கள்.

    மகா விகாஸ் கூட்டணியை உருவாக்குவதில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்துள்ளார். நாம் ஒன்றாக இருந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடித்து அதிக எண்ணிக்கையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று அவர் கருதுகிறார். அவரது பேச்சுகள் திரித்து கூறப்படுகிறது. மகா விகாஸ் அகாடி இணைந்து தேர்தலை சந்திக்கும்.

    மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அல்லது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என யாராக இருந்தாலும், பா.ஜனதாவை வலுப்படுத்த இந்த கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றன. அவர்களிடம் உண்மையானவர்கள்(ஒரிஜினல்) யாரும் இல்லை. எல்லாம் போலிகள் தான் உள்ளன. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஊழல்வாதிகளை நேர்மையானவர்களாக மாற்றும் வாஷிங் மெஷின் தொழிலை பா.ஜனதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    பா.ஜனதா விரும்பியதை செய்ய தவறியதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மாற்றுவதற்கான முயற்சி திரைக்கு பின்னால் நடந்து வருகிறது.

    எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு முதல்-மந்திரியாக, அவர் மராட்டியத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த தவறிவிட்டார். இந்த அரசை அமைத்ததில் இருந்து பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உண்மையான சிவசேனா யாருடையது என்று பாகிஸ்தானுக்கு கூட தெரியும் என்று கூறியதை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சிப்பவர்கள் தேர்தல் வெற்றி பெற பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்த கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரை எடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏக்நாத் ஷிண்டே அரசு 20 நாட்களுக்குள் கவிழ்ந்து விடும் என்று நேற்று முன்தினம் சஞ்சய் ராவத் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • சரத்பவார், கவுதம் அதானி சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
    • இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மும்பை :

    அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு, பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து கவுதம் அதானி பின்தங்க தொடங்கினார்.

    அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விவகாரத்தில் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் முடங்கியது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கவுதம் அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும் என்றார். அரசியல் காரணங்களுக்காக கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று சரத்பவார் பல்டி அடித்தார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று தொழில் அதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் 'சில்வர் ஓக்' இல்லத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    சரத்பவாரை கவுதம் அதானி சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறியிருந்தார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரசும் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கவுதம் அதானியுடன் தற்போது சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
    • சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    மும்பை :

    மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    கவுதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் கோரி வந்த நிலையில், அந்த குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் குழு விசாரணை தான் பயனுள்ளதாக இருக்கும் என்று சரத்பவார் கூறினார். அவரின் இந்த கருத்து காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவ்வப்போது காங்கிரசின் விமர்சனை கணைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் உள்ளாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரத்பவாரை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சஞ்சய் ராவத் எம்.பி. உடன் இருந்தார்.

    கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    சந்திப்பு குறித்து சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை குறித்து நானும், உத்தவ் தாக்கரேயும் ஆலோசித்தோம். கூட்டணி ஒற்றுமைக்காக சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடத்திய சந்திப்பில் இதற்காக உடன்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாவர்க்கரின் தியாகத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.
    • தற்போது நாடு பல முக்கிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாக்பூர் சென்றிருந்தார். அப்போது அங்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீட்டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    இதற்கிடையே நாக்பூர் பத்திரிகையாளர் மன்றத்தில் சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    சாவர்க்கர் நாட்டு சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அவரது தியாகத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதற்காக சாவர்க்கர் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவதை ஏற்க முடியாது.

    சாவர்க்கர் விவகாரம் புதிய பிரச்சினை அல்ல. நான் கூட விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அவரது இந்து மகா சபாவை பற்றி விமர்சித்து உள்ளேன்.

    இதபோல 32 வருடத்துக்கு முன் நாடாளுமன்றத்தில் சாவர்க்கரை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறேன். ரத்னகிரியில் சாவர்க்கர் வீடு கட்டினார். அதன் முன் சிறிய கோவில் கட்டினார். அந்த கோவிலில் வால்மீகி சமூகத்தை சேர்ந்தவரை பூசாரியாக நியமித்தார். இது அவரது முற்போக்கு சிந்தனையாக கருதுகிறேன்.

    தற்போது நாடு பல முக்கிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக 18 முதல் 20 கட்சிகள் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தினோம். அதிகாரத்தில் இருப்பவர்களால் நாடு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றி நான் எடுத்துரைத்தேன்.

    வெளிநாட்டு மண்ணில் இந்திய பிரச்சினைகளை பற்றி ராகுல்காந்தி பேசுவதாக கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு பேசப்பட்டு உள்ளன.

    நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல.
    • நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், 2-வது நாளாக நேற்று கோலாப்பூரில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2019-ம் ஆண்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜனதா 48 இடங்களிலும் வெற்றி பெறவேண்டும். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது.

    உத்தவ் தாக்கரே கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய கட்-அவுட்டுடன் தேர்தலை சந்தித்தார்.

    ஆனால் முடிவுகள் வெளியான பிறகு அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டார்.

    நாங்கள் அதிகார பேராசை கொண்டவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளை எதற்காகவும் தியாகம் செய்வது இல்லை.

    கடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் தலைமையில் தான் எங்கள் கூட்டணி போட்டியிட்டது. இதை நானும், பிரதமர் நரேந்திர மோடியும் பொதுக்கூட்டங்களின்போது வெளிப்படையாக தெரிவித்தோம். இருந்தபோதிலும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை பாராட்டுகிறேன். உத்தவ் தாக்கரே அணியினர் தற்போது பாடம் கற்றிருப்பார்கள்.

    வஞ்சகத்தால் நீங்கள் சில நாட்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றலாம். ஆனால் போர்க்களத்திற்கு வரும்போது வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு தைரியம் தேவை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
    • 2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இருவரும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் வில், அம்பு சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

    வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அவரது புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏக்நாத் ஷிண்டேக்கு கட்சி, சின்னம் வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் தலையிட நான் விரும்பவில்லை.

    2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
    • 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    மும்பை :

    மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    • பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
    • உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

    மும்பை

    மகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் 25 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்தன.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறில் அந்த கூட்டணி உடைந்தது.

    இதைதொடர்ந்து சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி கூட்டணி என அழைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். இதை தொடர்ந்து மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    இந்த அரசியல் பூகம்பத்துக்கு பின்னரும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி அமைத்தன.

    வஞ்சித் பகுஜன் அகாடியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என உத்தவ் தாக்கரே கூறினார். அதே நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு எதிராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியை கூட்டணியில் சேர்த்து கொள்வது பற்றி மகாவிகாஸ் அகாடியில் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என சரத்பவார் கூறி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கோலாப்பூரில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து மகாவிகாஸ் அகாடியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி நாங்கள் எதுவும் இதுவரை ஆலோசிக்கவில்லை. வர இருக்கும் தேர்தலை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சந்திக்கும். பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விரைவில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×