என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு போலீசார்"
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
- அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
- 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூர் :
தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீசாா் சோதனை நடத்தினா்.
இதில் பணியில் இருந்த பதிவாளா், சாா் பதிவாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
அதேபோல திருப்பூா் சிறுபூலுவபட்டியில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினா். மேலும், வஞ்சிபாளையம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சொந்தமான மையத்துக்குச் சென்று அங்கு பணியில் இருந்த வாகன ஆய்வாளா்கள், இடைத்தரகா்கள், வாகன ஓட்டிகளிடமும் சோதனை நடத்தினா்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.48 லட்சம் என மொத்தம் ரூ.2.09 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக ஆர்.டி.ஓ. மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சுமாா் 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
- சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
- வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.
- பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர்.
அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித பண்டல்களுக்கான இணைய வழி ஆவணங்களை செப்டம்பர் 13 என்ற தேதிக்கு பதிலாக, காகிதம் வாங்கிய தேதியான செப்டம்பர் 9-ந் தேதி என்று தவறுதலாகப் பதிவாகியுள்ளது. இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடாததால் அபராதம் விதிக்க வேண்டும், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து லாரி டிரைவர் சரவணன், உரிமையாளர் நாராயண சாமியை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் லாரியை விடுவிக்குமாறும் உரிமையாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.
இதில் லாரி டிரைவர் சரவணன் தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும் மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வணிக வரி அதிகாரிகள் லாரியை விடுவித்தனர். இந்த நிலையில் லாரி டிரைவர் சரவணன், வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தது உள்ளிட்ட அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உரிமையாளரிடம் அளித்திருந்தார்.
இதையடுத்து உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லாரி டிரைவர் சரவணனின் கைப்பேசியை பெற்று அதில் உள்ள பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- ரங்கசாமி பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை அவருக்கு தெரியாமல் விற்று விட்டார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மருங்காபுரி கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். பொறியியல் பட்டதாரியான இவர், சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரது வாகனத்தினை விராலிமலையைச் சேர்ந்த நண்பர் ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2001 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார். மேற்படி ரங்கசாமி பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை அவருக்கு தெரியாமல் விற்று விட்டார். இதனை அறிந்த பார்த்திபன், கடந்த 19.3.2022 அன்று ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்து தனது ஜேசிபி இயந்திரத்தை திரும்ப பெற இயலாத பார்த்திபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்றம் பார்த்திபனிடம் ரூ. 5 லட்சம் சொத்து மதிப்பு சான்றிதழ் மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு இயந்திரத்தை பெற்றுக்கொள்ளஉத்தரவு பிறப்பித்துள்ளது.
பார்த்திபன் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி அன்று விண்ணப்பம் செய்தார். அந்த மனுவானது கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானிடம் வரப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பார்த்திபன் நேற்று 24.7.23 காலை கண்ணூத்து கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்பு சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய கோரியுள்ளார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் ரூ.5000 கொடுத்தால் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர் வழங்கிய ஆலோசனைபடி வி.ஏ.ஓ. அமீர்கானிடம் பார்த்திபன் ரூ.5000 லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அமீர்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 86.87 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளை டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2019 - ம் ஆண்டு மார்க்கெட்டில் உள்ள கடைகளை டெண்டர் விட்டபோது உணவகம் அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடத்தை செந்தில்குமார் என்பவருக்கு பதிவு செய்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சி.எம்.டி.ஏ என்ஜினீயர் சீனிவாசராவ் உள்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 86.87 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை சாா்பதிவாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார்.
இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும், அதனை 'ஜி-பே', 'போன்-பே ' மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு விருத்தாசலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் இரவு வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுமனை விற்பனை நிறுவனத்தில் 10 மனைகள் வாங்குவதற்கு ரூ.45 லட்சம் முன்தொகை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அவர் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகளும் சிக்கியது.
இதையடுத்து சங்கீதாவையும், அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவு 1 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர்களை கடலூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்து வருகிறது.
- நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தினர்.
- சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப்பதிவாளர் மார்கலா ரஜனி. ஊழல் புகாரில் சிக்கியதற்காக இவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவை அனைத்தும் லஞ்சமாக வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
- 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.87,500யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
இந்த அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பரமேஸ்வரி (வயது56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் போலீசார் பத்திரப்பதிவுகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்பாக ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனையின் போது அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் இணை சார்பதிவாளர் பரமேஸ்வரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சப்ரிஜிஸ்டராக அருணா என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி மற்றும் போலீசார் நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் அலுவலகத்தின் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லக்கூடாது என கூறி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளிநபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது.
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் சோதனை செய்தனர். இரவில் 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது நள்ளிரவையும் தாண்டி இன்று காலையும் நீடித்தது. இன்று காலை 7.30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையானது நிறைவடைந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை மேற்கொண்டதில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை கேட்டு, அலுவலகத்தில் இருந்த சப்ரிஜிஸ்டரிம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை சோதனையை முடித்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்ரிஜிஸ்டர் அருணாவை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை அவர் ஆஜரானதும், மீண்டும் பணம் தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- சுமார் 4 மணி நேரமாக நடந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு மயிலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள், பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், இவர்களை தவிர இடைத்தரகர்களும் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர். உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர்.
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர். எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது என்பது குறித்த விவரங்களை சேகரித்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அதிகாரிகள் உரிய கணக்கு காண்பிக்காததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.
கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் கணேசன், வீர. அப்துல்லா, பால சுப்பிரமணியன், டிரைவர் சரவணன், புரோக்கர் செல்வம் உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.