search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரத்தாழ்வார்"

    • சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார்.
    • திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

    சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார்.

    இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப் பெறுகிறார்.

    இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப் பெறுகிறார்.

    திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

    • சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் நீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதன் பிறகு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் நீரில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் இரவு கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

    வரலாறும் சிற்பக்கலையும்

    இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்க்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது. இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

    மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழமலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும்போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோவிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பாடல்கள்

    மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்

    என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

    வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

    ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

    ஆழியான் அத்தியூரான்.

    அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

    துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-

    மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

    இறையாவான் எங்கள் பிரான்.

    திருவிழாக்கள்

    வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    போக்குவரத்து

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரெயில்களும் உள்ளன.

    • ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    • தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

    சாளகிராமங்களில் சுதர்சன சாளகிராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளகிராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

    ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது.

    ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும். வியாழக்கிழமை விரதம் இருந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற் கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது. பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

    பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

    பிரம்மோற்சவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கென்று விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராதனைகள் விகசை என்ற மகா முனியால் ஏற்படுத்தப்பட்டவை. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

    • தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
    • பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

    கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    • தஞ்சை வடக்கு வீதியில் உள்ளது ராஜகோபாலசாமி கோவில்.
    • இந்த கோவில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எந்த ஒரு பெருமாள் கோயிலிலும் மூலவராக பெருமாளின் ஏதேனும் ஒரு திருமேனி அவதாரமாக தான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலய மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் உள்ளார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

    இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு அருளக்கூடிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் என கருதப்படுகிறது.

    மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    சித்திரை நட்சத்திரம் அன்று இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் அன்று மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபடுவார்கள்

    தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலும், தஞ்சை பெரிய கோயிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    • சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபட்டனர்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் திகழ்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு என அமைந்துள்ள கோவிலாக இது விளங்குகிறது. சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆவணி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றுகாலை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    நவகிரக தோஷம் போக்கும் சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரத்தன்று 9 அகல் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து சிவப்பு மலர்கள் சாற்றி அவல், கற்கண்டு, உலர்ந்த திராட்சை பழங்களை சமர்பித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர தினத்தையொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர தினத்தையொட்டி நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து, அதை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த புனிதநீரால் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்தனர்.

    மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • சக்கரத்தாழ்வார் ஆகமத்தில் சொல்லப்பட்டவாறு பரிபூரணமாக காட்சியளிப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
    • ஆனி சித்திரையை முன்னிட்டு மகா சுதர்சன யாகம் நடைபெற்றது.

    மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சித்திரையை முன்னிட்டு மகா சுதர்சன யாகம் நேற்று நடைபெற்றது. வழித்துணையாக, வந்த பெருமாள் என்று ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யதேசம் திருமோகூர் ஆகும். பெருமாளை தாயாக, தந்தையாக, நாயகி, நாயகனாக பாடிய ஆழ்வார்கள் திருமோகூர் கோவில் பெருமாளை மட்டும் நண்பனாக பாவித்து பாடியுள்ளனர்.

    இங்குள்ள சக்கரத்தாழ்வார் 16 கைகளும் அந்த பதினாறு கைகளிலும் பதினாறு விதமான திவ்யாயுதங்களுடன் அருள் செய்கிறார். மற்ற கோவில்களில் சக்கரத்தாழ்வார் இருந்தபோதிலும் மந்திர எழுத்துக்களுடனும், ஆகமத்தில் சொல்லப்பட்டவாறு பரிபூரணமாக காட்சியளிப்பது இந்த கோவிலில் மட்டும்தான். இந்தநிலையில் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பிறந்த தினமான நேற்று (சித்திரை நட்சத்திரம்) உலக நன்மை வேண்டியும் மகா சுதர்சன யாகம், அலங்காரம், திருமஞ்சனம், திருவாராதனை மற்றும் கோஷ்டி ஆகியவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்தனர்.
    • இன்று (வெள்ளிக்கிழமை) சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடக்கிறது.

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது. இதில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள், லட்சுமி, கல்யாண லட்சுமி, நரசிம்ம பெருமாள், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், நாச்சியார் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது.

    சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி பட்டர், வேங்கடநாதன் பட்டர் ஆகியோர் சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்தனர். பின்னர் பக்தி பாடல் பாடப்பட்டது. அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி அளவில் சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×