search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணியசுவாமி"

    • அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.
    • இன்று ஏராளமான பக்தர்கள் நாழிக்கிணற்றில் இலவசமாக புனிதநீராடினர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    பக்தர்கள் தரிசனம்

    இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதியை போன்று

    பக்தர்கள் வசதிக்காக திருப்பதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி ரூ. 200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மூத்தகுடிமக்கள்

    ஏற்கனவே அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திரள்வதால் சுவாமி தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தனிவரிசை

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கையால் மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மூத்தகுடிமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் அமல்

    60 வயதை கடந்த மூத்தகுடிமக்கள் இந்தவழியாக சென்று தரிசனம் செய்யலாம். இந்தநடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

    மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை பாதையை இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    அதன்படி இவர்கள் வயதை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை கோவிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து சென்றனர். அவர்களுக்கு உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்தனர்.

    மாற்றுத்திறனாளிகள்

    மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சக்கர நாற்காலி வசதி தகவல் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு வாசல் வழி–யாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான 'ரேம்ப்' வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சன்னதி வழியாக சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்யும் வசதி செயல் படுத்தப்பட்டு உள்ளது.

    இலவசம்

    கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் செய்வதற்கும் ரூ.1 அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி இன்று முதல் பக்தர்கள் நாழிக்கிணற்றில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஏராளமான பக்தர்கள் நாழிக்கிணற்றில் இலவசமாக புனிதநீராடினர். திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.     

    ×