search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்பூர் விபத்து"

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.
    • பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி காவேரி. தம்பதியினரின் மகள்கள் கார்த்திகா ஸ்ரீ (வயது 9), பேரரசி (6), இளவரசி.

    ஆங்கில புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பரந்தாமன் முடிவு செய்தார். அதன்படி பரந்தாமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றார்.

    அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் இடது பக்கமாக திடீரென திருப்பினார்.

    அப்போது பரந்தாமன் சென்ற பைக் லாரியில் மோதியது. அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது கார்த்திகா ஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

    தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த 2 சிறுமிகளின் பிணத்தையுய் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர்:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.

    படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

    • சாலையின் நடுவில் இருந்த தடுப்புகள் மீது மோதியதில் லாரியில் இருந்த கண்டெய்னர் சாலையில் விழுந்தது.
    • எதிரே வந்த தண்டபாணி பைக் மீது லாரி மோதியது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வீரன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி அனுராதா. தம்பதிக்கு ஜெயஸ்ரீ (வயது 17), வர்ஷா ஸ்ரீ (12) என 2 மகள்கள் இருந்தனர். இருவரும் ஆம்பூர் அருகே உள்ள புது கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ பிளஸ்-2, வர்ஷா ஸ்ரீ 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    மாணவிகள் இருவரும் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை தாமதமாக வந்ததால் பள்ளி பஸ் சென்று விட்டது. இதையடுத்து தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். ஆம்பூர் ஏ ஆர் தியேட்டர் அருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்புகள் மீது மோதியதில் லாரியில் இருந்த கண்டெய்னர் சாலையில் விழுந்தது. எதிரே வந்த தண்டபாணி பைக் மீது லாரி மோதியது. இதில் பைக் பின்னால் அமர்ந்து வந்த ஜெயஸ்ரீ வருஷா ஸ்ரீ இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தண்டபாணி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த மாணவிகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் லாரியில் சிக்கி பலியான சம்பவம் ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது.
    • சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    ஆம்பூர்:

    சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சண்முகி (22), நெல்லுரை சேர்ந்த நித்தின், கேரளாவை சேர்ந்த சுப்ரீத் (19), ரிஷாந்த் அகமது (20), அந்தமானை சேர்ந்த சுஜான்(18), ஆலினா (18) ஆகியோர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். ரிஷாந்த் அகமது காரை ஒட்டி வந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மாணவி சண்முகி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×