search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார்.

    புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை வாங்கி கொடுத்து விடியலை கொடுக்க முடியவில்லை. இப்போது இந்தியாவுக்கு விடியல் கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். அதை கேட்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கும் கூட்டணி யாகத்தான் இருக்கிறார்கள். கர்நாடக முதல்- மந்திரியிடம் பேசி காவிரி தண்ணீரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்து விடியல் தர முடியாதவர்களால் இந்தியாவுக்கே எப்படி விடியலை கொடுக்க முடியும்.

    மும்பையில் கூடி ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார். முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்ற பனியனை தான் அணிந்து கொண்டு இருந்தார்கள். இப்போதும் அப்படியே அணிந்து தான் மும்பைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்படி பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்துக்களை பார்க்கும்போது 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்றானாம்' என்ற கதையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் நாங்களெல்லாம் சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று கைகோர்த்து இருக்கிறார்கள்.

    • அணை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
    • திறப்பதற்கான சாவியும் அவர்களிடம்தான் இருக்கிறது.

    காவிரி தண்ணீரை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக இல்லை.

    ஆனால் பா.ஜனதா தண்ணீர் திறக்கக்கூடாது என்று அரசியல் செய்வதால்தான் அரசும் தயங்குகிறது. அங்குள்ள பா.ஜனதாவை இங்குள்ள அண்ணாமலை ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறை கூறினார்.

    இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது பலமாக சிரித்துவிட்டார். அணை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. திறப்பதற்கான சாவியும் அவர்களிடம்தான் இருக்கிறது. ஆனால் திறக்காததற்கு காரணம் நாங்கள் தான் என்றால் மக்கள் நம்புவார்களா? என்றார்.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    • எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்துள்ளார்.

    சந்திரயான் விண்கலம் நிலவில் சரியாக லேன்ட் ஆனதும் நாடே உற்சாகமானது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமியிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகளிடம் ஒருவர் நாமும் சரியான நேரத்தில் சரியாக லேன்ட் ஆகியிருக்கோம்னே என்று மதுரை மாநாட்டை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார்.

    அதை கேட்டு எடப்பாடி பழனிசாமியும் உற்சாகம் அடைந்துள்ளார். மாநாட்டு திடலில் 85 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்ததாம். திரண்டவர்கள் எண்ணிக்கை 2½ லட்சத்துக்கு குறையாது என்று மத்திய உளவுத்துறையும் டெல்லிக்கு அனுப்பி இருக்கிறாம்.

    நம்முடைய பலத்தை காட்டி விட்டோம். இனி கூட்டணி, தொகுதி பங்கீடு எதிலும் பா.ஜனதா நெருக்கடி கொடுக்காது என்பதே எடப்பாடி பழனிசாமியின் உற்சாகத்துக்கு காரணம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

    • வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும்.
    • குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வருத்தத்துடன் கூறியதாவது:-

    "வேங்கைவயல் கொடூரம், நாங்குநேரி வன்முறை இரண்டையுமே தமிழகத்தின் அவமானச் சின்னங்களாகவே பார்க்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், சமூகநீதிக்குச் சவால்விடும் சம்பவம் இது. அமைச்சர்கள் அங்கு சென்றிருந்தாலும், முதல்வர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்திருக்க வேண்டும். அப்போதுதான், சாதியவாதிகளுக்கு இதுபோல் செய்வதற்குத் துணிச்சல் வராது. முதல்வர் நேரில் அங்கு செல்லாதது வருத்தம்தான்!"

    • தேர்தல் நெருங்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க. தலைமை விட்டு பிடிக்கிறது.
    • பா.ம.க. தி.மு.க. பக்கம் சாய முயற்சிப்பதை அறிந்த அ.தி.மு.க. வறுத்தெடுக்கிறது பா.ம.க.வை!

    பாராளுமன்ற தேர்தலில் எந்தப் பக்கம்? என்று முடிவு செய்வதற்காக தூதுவிடும் பணியில் பா.ம.க. தீவிரமாக உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணிக்காக விடப்பட்ட தூதுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் என்ன நினைக்குமோ? தேர்தல் நெருங்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க. தலைமை விட்டு பிடிக்கிறது.

    இதற்கிடையில் பா.ம.க. தி.மு.க. பக்கம் சாய முயற்சிப்பதை அறிந்த அ.தி.மு.க. வறுத்தெடுக்கிறது பா.ம.க.வை!

    இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. அணியில் புதிதாக இணைய இருப்பதால் கடந்த தேர்தலில் ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு கொடுத்த ஒரு சீட்டை கமலுக்கு கொடுக்க தி.மு.க. தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் கமல் விரும்பும் தென்சென்னை தொகுதியை கொடுக்க தி.மு.க. யோசிக்கிறது.

    தி.மு.க. இளைஞர் அணியில் வாரிசுகளை தவிர்த்து முழுக்க முழுக்க புதுமுகங்களை களத்துக்கு கொண்டு வருவதில் சின்னவர் தீவிரமாக உள்ளார். அமைச்சர்கள் துரை முருகன், காந்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரது வாரிசுகள் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.

    • கைகுலுக்க வந்த இளைஞர்களில் சிலர் ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் முடிவெட்டி இருந்தார்கள்.
    • மாணவர்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் முதற்கட்ட பாத யாத்திரை திருநெல்வேலியில் முடிவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது அவரிடம் கைகுலுக்குவதற்காக இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் முண்டியடித்தபடி சென்றார்கள். முடிந்தவரை சளைக்காமல் எல்லோரிடமும் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    அவ்வாறு கைகுலுக்க வந்த இளைஞர்களில் சிலர் 'புள்ளிங்கோ' ஸ்டைலில் முடிவெட்டி இருந்தார்கள். அதை கவனித்த அண்ணாமலை அவர்களை அருகில் அழைத்து தம்பிங்களா... முடிவெட்டு வித்தியாசமாக இருக்கு... இது என்ன கட்டிங்...? என்றதும் அவர்களும் உற்சாகமாக 'பாக்ஸ் கட்டிங்' என்றார்கள். அதை கேட்டதும் அண்ணாமலையோ போலீசுக்கே உரித்தான கெத்துடன் 'தம்பி நீங்க பள்ளிக்கு தானே போறீங்க? அங்கு புள்ளிங்கோ தேவையா? என்று கேட்டாதும் அந்த மாணவர்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    • புதிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது இதை சுட்டிக்காட்டினார்.
    • புதிய நிர்வாகிகளுக்கு 6 மாதம் கண்காணிப்பு காலமாம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சமீபத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவில் 144 பேருக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் 16 பேர் தலித் அல்லாதவர்கள். 14 பேர் பெண்கள்.

    புதிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது இதை சுட்டிக்காட்டினார். இதன்பிறகுமா எங்களை சாதி கட்சி நடத்துவதாக கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

    புதிய நிர்வாகிகளுக்கு 6 மாதம் கண்காணிப்பு காலமாம். இந்த காலக்கட்டத்துக்குள் பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட சில செயல்திட்டங்களை திருமாவளவன் கொடுத்துள்ளார். அந்த பணிகளை திருப்திகரமாக செய்து முடித்தால்தான் மாவட்ட செயலாளர் பதவியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் பதவி பறிக்கப்படுமாம்.

    • அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.
    • எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து காங்கிரசிலும் உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பவர். காங்கிரசுக்குள் எதிர்ப்புகளை சமாளித்து வளர்வது சாமானியமல்ல.

    இப்போதும் மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டதும் அவருக்கு அந்த பொறுப்பை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    அதே நேரம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும் போது, "எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் நட்பு வேறு. நட்பு ரீதியாக நாங்கள் பேசிக் கொள்வோம். அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.

    எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொறுப்புக்கும் வரும் போது இப்படித்தான் எதிர்ப்பு வரும். இது பழகிப் போனதுதான்.

    ஆனால் சொந்த கட்சிக்காரர்களே சொந்த கட்சிக்காரர்களை எதிர்ப்பதுதான் கஷ்டமாக உள்ளது. எல்லோரும் செயல்படுங்கள். தேவைகளை கட்சி தலைமையிடம் கேளுங்கள். அதற்கு உரிமை இருக்கிறது.

    ராஜீவை பற்றி, ராகுலை பற்றி சீமான் விமர்சித்தபோது காங்கிரஸ்காரர்கள் எதிர்த்து குரல் கொடுக்க முன்வர வில்லை. ஆனால் சொந்தக் கட்சி காரர்களுக்கு எதிராக குரல் கொடுக்க மட்டும் நான் முந்தி... நீ முந்தி என்று வந்து விடுகிறார்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?" என்றார்.

    • எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர்.
    • டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

    ஆட்சிக்கு போட்டி போடுகிறார்களோ இல்லையோ கட்சியில் பதவிக்கு போட்டி போடுவதில் முன்னணியில் நிற்பது தமிழக காங்கிரஸ் கட்சி.

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைவர்கள் திட்டமிட்டதுதான் உண்டு.

    எனக்கு... உனக்கு... என்று மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர். யாரை நியமிப்பது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் டெல்லி தலைவர்கள் தமிழக தலைகளிடம் ஆலோசனை கேட்போமே என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

    அழைத்து கேட்டவர்கள் எல்லோருமே தனக்கு அந்த பதவியை தர வேண்டும் என்பதையே முதல் கோரிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் போய் ஆலோசனை கேட்டோமே என்று டெல்லி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள்.

    • கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
    • ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    நடிகர் கமல் திரையுலகில் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஜெயிக்க முடிந்தது. அதேபோல் அரசியலிலும் சாதித்து விடலாம் என்று போட்ட கணக்கு கிட்டத்தட்ட தப்பு கணக்காகவே மாறி போனது. இப்போது சினிமாவையும் விட முடியாமல் அரசியலையும் கைவிட முடியாமல் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

    சினிமாவை எப்படி ஓ.டி.டி. தளத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அதே போல் அரசியலையும் ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஜெயித்து பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ இப்போது அவர் எங்கிருந்தாலும் ஆன்லைன் வழியாக அரசியலையும் நடத்தி வருகிறார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னால் நேரடியாக முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடியாததால் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அருணாச்சலம் என்ற நிர்வாகியை நியமித்து உள்ளார். இப்போது கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார். அதேநேரம் நடந்தது என்ன? அடுத்த திட்டம் என்ன? என்று எல்லா விசயங்களையும் கமலுக்கு அப்டேட் செய்து விடுகிறாராம்.

    களத்தில் இறங்கி நடந்தும் ஓடியும் கூட அரசியலில் சாதிக்க முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில் ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    • ராமநாதபுரம் தொகுதியில் மோடி சொன்னதை செய்யவில்லை.
    • மோடி ஆட்சியில் மீனவர்கள் அதிக அளவில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் போட்டியிட்டால் எதிர்த்து நின்று சமாளிப்பதற்கான வியூகங்களை தி.மு.க. இப்போதே வகுக்க தொடங்கிவிட்டது.

    மீனவர்கள் மாநாடு, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை ராமநாதபுரம் தொகுதியில் நடத்தி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அத்துடன் ராமநாதபுரம் தொகுதியில் மோடி சொன்னதை செய்யவில்லை. மோடி ஆட்சியில் மீனவர்கள் அதிக அளவில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    கனிமொழி எம்.பி. பேசும்போது, "ராமநாதபுரம் கலைஞர் மனதில் இடம்பிடித்த தொகுதி. 1958-ல் உதயசூரியன் நாடகம் முதல் முதலில் இங்குதான் நடத்தப்பட்டது. அரங்கேறிய சில நாட்களிலேயே அதுவே கட்சியின் சின்னமாகவும் கிடைத்தது.

    இந்த தொகுதியில் டெல்லியில் இருந்து யாரோ போட்டியிட போகிறாராம். அவர் ஒரு வரலாற்றை புரிந்துக் கொள்ள வேண்டும். 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் இங்கு அரசராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    1957 தேர்தலில் அண்ணாவும், கலைஞரும், ராஜாவுக்கு எதிராக தங்கப்பன் என்ற வேட்பாளரை நிறுத்தினார்கள். அவர் அரண்மனை வாசலில் குதிரை வண்டி ஓட்டுபவராக இருந்த சாதாரண மனிதர். கடைசியில் ஜெயித்தது ராஜா அல்ல குதிரை வண்டிக்காரர்தான். அவரை வெற்றி பெற செய்தது தி.மு.க. எனவே இங்கே போட்டியிட நினைப்பவர்கள் இந்த வரலாறுகளை படிக்க வேண்டும்" என்றார்.

    • பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பெயர் வாங்கி வருகிறார்கள்.
    • கூட்டணி அடிப்படையில் ஏதாவது ஒன்றிரண்டு சீட்டுகள்தானே கிடைக்கும்.

    ஆட்சியில் இருந்த கட்சிகளும் சரி. ஆட்சியை பிடிக்க மல்லு கட்டும் கட்சிகளும் சரி தேர்தலில் ஜெயிக்க என்னதான் வியூகம் அமைத்தாலும் பல நேரங்களில் பலனற்று போவதால் தேர்தல் வியூகம் வகுப்பதற்காகவே வாடகைக்கு ஆள் பிடிக்கின்றன. இதற்காக கோடிக்கணக்கான பணத்தையும் வாரி கொடுக்கிறார்கள்.

    அந்த வகையில் பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பெயர் வாங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒருவரை நியமித்து இருக்கிறதாம்.

    கூட்டணி அடிப்படையில் ஏதாவது ஒன்றிரண்டு சீட்டுகள்தானே கிடைக்கும். இதற்கு தேர்தல் வியூகம் வகுக்க தனியாக ஆள் நியமித்தது ஏன் என்பதற்கு "எல்லாம் தொலைநோக்கு பார்வை "தான் என்கிறார்கள் தம்பிகள். தோகை விரித்தாடிய மயிலை பார்த்து வான்கோழியும் ஆடியதாம்.

    ×