search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை விமான நிலையம்"

    • ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
    • பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

    அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்தபோது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
    • இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.

    மதுரை :

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.

    வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது. தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.

    இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
    • பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மதுரை வருகிறார்.

    அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 2 மணி அளவில் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ் சேகர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.

    பின்பு பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு பிறகு வருகிறார்.

    அங்கு அவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைக்கிறார்கள். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி மதுரை மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி மதுரையிலிருந்து காந்தி கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தபடி இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் வகையில் பிரதமரின் பயணம் மாற்றப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் கட்டைகளை வைத்து கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை வழியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனைத்துவித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி காந்தி கிராமம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கடவுப்பாதை உள்ளது. இதனால் பிரதமர் செல்லும் நேரத்தில் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

    மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில்வே போக்குவரத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாற்றம் செய்யுமாறு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களின் இயக்கத்தில் பயண நேரம் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக மதுரை வருகிறார்.

    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள் என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த சரவணன், திடீரென்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசினார். அவரை பா.ஜ.க. மேலிடம் பதவி நீக்கம் செய்தது. மதுரை மாநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. தலைவராக உள்ள மகா சுசீந்திரன் நியமிக்கப்பட்டடார்.

    இந்த நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் "நான் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு, மாஸ் ஆக-கிராண்ட் ஆக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை எப்படி அரசியல் பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அரசியல் பண்ணி விடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள்" என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    எனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதான செருப்பு வீச்சு தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவுக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் பேசுவது போல யாரோ சிலர் போலியான ஆடியோவை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    இந்த விஷயத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் பணியில் இருந்தபோது துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கீழ் உள்ள மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக 100-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் இரவு பணியை முடித்துவிட்டு 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

    துப்பாக்கி வெடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதாகவும், இதன் காரணமாக துப்பாக்கி வெடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள சி.ஐ.எஸ்.எப்.டி. ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

    ×