search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படையல் உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.
    • ஐந்து பேருக்கு தானம் கொடுக்க வேண்டும்.

    * ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது.

    * ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவோ, சமையல் அறையை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது.

    * காலையில் நீண்ட நேரம் தூங்கக் கூடாது. காலை 5 முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விட வேண்டும்.

    * நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது. பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    * முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

    * வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.

    * முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.

    * பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.

    * காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.

    * ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது.

    * பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.

    * நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.

    * பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.

    * ஆடி அமாவாசை படையல் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது என்பதால் நைட்டி நோன்ற உடைகள் அணிந்து சமைக்கக் கூடாது. புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.

    தானம் செய்ய வேண்டியவை :

    ஆடி அமாவாசை அன்று 5 பேருக்கு, 5 விதமான பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி ஒருவருக்கு, ஒரு கிலோ பாசிப்பருப்பு ஒருவருக்கு , ஒரு கிலோ வெல்லம் ஒருவருக்கு , அரை கிலோ நெய் ஒருவருக்கு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஒருவருக்கு என ஐந்து பேருக்கு அன்றைய தினம் தானம் கொடுக்க வேண்டும்.

    இந்த ஐந்து தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறினாலும், அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போதும் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பித்ருதோஷமானது ஆடி அமாவாசையில் இந்த ஐந்து தானங்களை கொடுப்பதால் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

    • இன்று மாத சிவராத்திரி.
    • சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆடி 17 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: திரயோதசி மாலை 4.48 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: திருவாதிரை நண்பகல் 12.59 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி. திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் திருவீதியுலா. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-நலம்

    கடகம்- ஜெயம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-நட்பு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- முயற்சி

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-சிறப்பு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறைவனின் திருவடிகளையே திருமுடியாகக் கொண்டவர்.
    • பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும்.

    கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். திருக்களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். போர் புரிகையில் கூற்றுவனைப் போல் மிடுக்குடன் போர் புரிவார். எனவே, இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.

    பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதிய படியே இருப்பார். சிவனடியார்களைக் கண்டால் சிவனாகவே எண்ணி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்.

    குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை.

    கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோயில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக்கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவநாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.

    அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள், "சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களின் மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்." என்று மறுத்து விட்டனர். சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால், அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லை வாழ் அந்தணர்கள் அஞ்சினர்.

    ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழ நாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.

    தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாக சூடிக் கொள்வேன்' என்று எண்ணி அம்பலத்தரசனை, 'நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாக சூட்டி அருள வேண்டும்' என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

    அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார். உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார்.

    தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து 'எதற்கும் அஞ்ச வேண்டாம்' என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர். இறைவனார் கோயில் கொண்டுள்ள பல திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டார்.

    இறுதியில் வீடுபேற்றினை இறையருளால் பெற்றார். கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

    • இன்று பிரதோஷம்.
    • கூற்றுவ நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-16 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி மாலை 5.17 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நண்பகல் 12.47 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசத்துடன் வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்ப உற்சவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஸ்ரீ அனுமார் வாகனத்திலும் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கூற்றுவ நாயனார் குருபூஜை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-சுபம்

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-விருப்பம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-ஆற்றல்

    தனுசு- பெருமை

    மகரம்-வெற்றி

    கும்பம்-நன்மை

    மீனம்-பக்தி

    • ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்பது ஐதீகம்.
    • காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு.

    ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்று ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

    புதிதாக திருமணம் செய்தவர்கள் 'தாலிப் பிரித்து போடுதல்' என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கென்று நீர் பெருகி வருவது போன்று தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.

    அன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்ரம் (சிறிய தேர்) கட்டி இழுப்பதம் கிராமப்புற ஆறுகள் பக்கம் இன்றும் நடைபெறுகிறது.

    கும்பகோணத்தில் நவ கன்னியர்களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு 10 நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர்.

    அவற்றை கும்மிப் பாடல்கள், குரவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

    தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.

    கொடுமுடி - மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக் காப்பு ஆராதனை நடைபெறும்.

    ஈரோடு பவானி - கூடுதுறையில் அதிகாலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.

    ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிக்களும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.

    நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகில் உள்ள கிணறுகளில் போடலாம்.

    ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.

    • ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு.

    சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது.

    ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது.

    இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    • ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள்.
    • வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள். தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

    இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

    அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

    இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது. இந்த சிறப்பான தினம் வருகிற சனிக்கிழமை (3-ந்தேதி) வருகிறது. மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டுகளிப்பர். கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர்.

    ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.

    அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

    ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.

     நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-15 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.01 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பண்பு

    • முருகப்பெருனை `குகன்’ என்றும் அழைப்பார்கள்.
    • சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது.

    கோவில் தோற்றம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த குகநாதீஸ்வரர் கோவில். முருகப்பெருமானை `குகன்' என்றும் அழைப்பார்கள். அந்த குகன் வழிபட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் என்பதால், இது 'குகநாதீஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் இருக்கும் இறைவனுக்கு, `கோனாண்டேஸ்வரன்', `குகனாண்டேஸ்வரன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறை குகை போன்று காணப்படுவதாலும், பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் `குகநாதீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    இந்த கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக்கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே, இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். இவ்வாலய சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது. இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம், 'பார்வதி' என்பதாகும்.

    ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இவ்வாலய இறைவனை, `ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவியபோது, இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு, அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது.

    10-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன.

    கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேக இளநீர், பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜையும் நடக்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சனை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இவ்வாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

    மனமுருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும், இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இவ்வாலயம் திறந்திருக்கும்.

    • பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
    • ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    பழனி:

    பழனியில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடந்தது. இதனையடுத்து காலசந்தி பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    இதனால் படிப்பாதை, யானைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், காவடி சுமந்து வந்தும் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.

    இதனால் பழனி கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது.

    இதே போல் பல்வேறு முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாபிஷேகம் செய்து முருகனுக்கு உகந்த தேன், தினை மாவை படையலிட்டு வழிபட்டனர்.

    இதே போல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்புமுருகன் கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், அபிராமி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, திருமலைக்கேணி உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
    • சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.

    10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும். 

    • வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×