search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்டேட் அதிபர்கள்"

    • மதுரை ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
    • இந்த சோதனையின்போது அலுவலர்கள் யாரும் வெளியே செல்லமுடியாதபடி கதவு பூட்டப்பட்டது.

    மதுரை 

    மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன்கள் அழகர், முருகன், ஜெயகுமார், சரவணக்குமார், செந்தில்குமார் இவர்கள் கிளாட்வே, ஜெயபாரத், அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய 4 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தவி்ல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்பட 50-க்கும் மேற்பட புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தன. இதையடுத்து மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    காலை 9 மணி முதல் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அண்ணாநகர், கோச்சடை, சிலைமான், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரியல்எஸ்டேட், கட்டுமான அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் ரியல்எஸ்டேட் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மதுரை கோச்சடையை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சரவணபெருமாள், முருகபெருமாள் ஆகியரது வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. மதுரை மாவட்ட கோர்ட்டு எதிரே அமைந்துள்ள இவர்களது நிறுவனத்திலும் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி சாலையில் இதன் கிளை நிறுவனம் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இவர்கள் தற்போது நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும், முன்னாள் அரசு ஒப்ப ந்ததாரர் செய்யாத்துரை என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு ஊர்களில் செய்யாத்துரைக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் முருகபெருமாள், சரவண பெருமாளுக்கு சொந்தமான நத்தம் கட்டுமான நிறுவனத்தில் இன்று காலை 8 மணிமுதல் மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல துவரங்குறிச்சி அருகில் உள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்திலும், ஒட்டன்சத்திரத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த சோதனையின்போது அலுவலர்கள் யாரும் வெளியே செல்லமுடியாதபடி கதவு பூட்டப்பட்டது. அங்குள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×