என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணசாமி"
- அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
- போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். காவல்துறையினர் அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.
இதனால் காவல்துறையினருடன் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு ஆயிரக்கணக்கானோர் வந்தபின் அனுமதி மறுப்பது ஏன்? என போலீசாரிடம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். பின்னர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.
- நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
- தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வலுவான கொள்கை கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான போராட்ட அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் துவங்கப்பட் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.! தமிழ்நாட்டில் டரு 75 வருடத்தில் வந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்டபொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நான் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல் ஆட்சியிலும் அதிகாரந்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய புகாரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
- முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்க்கலாம்'' என்று தமிழக அரசுக்கு சீமான் சவால் விட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் ரிலீசாகி உள்ளார்.
சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கருணாநிதி பற்றிய அவதூறான பாடலை சீமானும் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடியதோடு, ‛‛முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்க்கலாம்'' என்று தமிழக அரசுக்கு சவால் விட்டார்.
இந்நிலையில் கலைஞர் பற்றி அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை, சாதாரண மனிதர்களின் தொனி அல்ல. அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான், சட்டை துரைமுருகன் பெயரை குறிப்பிடாமல் அவர்களை விமர்சித்து கண்டன அறிக்கை ஒன்றை கிருஷணசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், "கலைஞர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவே புனயைப்பட்டதாக கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது அநாகரிக்கத்தின் உச்சக்கட்டம்; முழுக்க முழுக்க அடாவடி சாதிய மனப்பான்மையோடு எழுப்பப்பட்ட முழக்கம் அது.
இதுபோன்று பயன்படுத்தப்படும் சொல்லாடர்களுக்கு பல்வேறு விதமான மோசமான எதிர் கருத்துகளும், விமர்சனங்களும் தொடர் சங்கிலியாக மாறும். மொழியை பயன்படுத்தி கொண்டு இளைஞர்கள் மத்தியில் சாதிய ஆணவ மேலதிக்க உணர்வுகளுக்கு தூபமிடுவதும், அதை வளர்த்தெடுப்பதுமே கொள்கை - கோட்பாடு, பண்பாடாக கொண்ட இளைஞர் சமுதாயம் ஒன்று உருவாவது தமிழ் சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தை சீரழித்து வரும் சமூக வலைதளங்கள் எனும் நவீன தளங்களை பயன்படுத்தி , நாகரிகம் அடைய வேண்டிய ஒரு சமுதாயத்தை பின்னோக்கி தள்ளும் சிலரின் தீய எண்ணங்களும் மேலும் தளைத்திட அனுமதிக்க கூடாது. தற்போது நடைபெறுவது சட்டசபை இடைத்தேர்தல்; இன்று முதல்வராக இருக்க கூடியவர் முக ஸ்டாலின். கருணாநிதி காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கும்,இடைத்தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. தனது 44வது வயதில் 1969ம் ஆண்டில் தமிழகத்தில் முதலமைச்சாராக முதல் முறையாக பதியற்றவர்.அதற்கு பிறகு ஐந்து முறை முதலமைச்சர் பதவியிலிருந்திருக்கிறார்.
அவருடைய கொள்கைகள் அல்லது செயல்பாடுகளோடு நூற்றுக்கு நூறு எல்லோருக்கும் உடன்பாடு இருந்திருக்காது. தேர்தல் காலங்களில் கூட்டணிக்காக பல கட்சிகள் அவரிடம் நெருங்குவார்கள்; பின் விலகுவார்கள். இது அவருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. 1967ல் அண்ணா தலைமையில் ஏழு கட்சி கூட்டணி உருவாகி, தேர்தல் முடிந்த பின் கூட்டணியில் அங்கம் பெற்ற பல கட்சிகள் எதிர்நிலை எடுத்தன. 1967இல் யாரை வீழ்த்தினார்களோ, நான்காண்டு கழித்து 1971இல் அவர்களுடனே கூட்டணி சேரும் நிலை உருவாகிற்று. தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இதேபோன்ற அசரியல் நிலைப்பாடு தான் நிலவுகிறது.
கொள்கை, கோட்பாடு, செயல்பாடுகளில் அவரோடு முரண்பட்டு கொண்டே பயணித்தவர்களும் உண்டு; எதிர்த்து வெளியேறியவர்களும் உண்டு. அவருடைய எல்லா கருத்துகளிலும், எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் உடன்படவும் முடியாது; முரண்படவும் முடியாது. அவருடன் ஒத்துப்போகக்கூடிய கொள்கை, கோட்பாடுகளும் உண்டு; சிறிதும் ஒத்துப்போக முடியாத பல்வேறு அசம்ங்களும் உண்டு. ஜனநாயகத்தில் இதுவே எதார்த்தமாக இருக்கிறது.
அவர் பல அபார தனித்திறமைகள் கொண்ட அபூர்வ அரசியல்வாதி, கண்மூடி கண் திறப்பதற்குள் பலரையும் ஒன்றும் சேர்ப்பார்; பிரிக்கவும் செய்வார். இது அவரிடம் இருந்த பலரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் தனித்திறமை ஆகும். அவரோடு பழகுகின்ற காலத்தில் ஒரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப்போவார்; இன்னொரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு எதிர்நிலை எடுப்பார். இந்த திறமைகளால் தான், அற்ப சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஒரு சமுதாயத்தில் அதுவும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் தமிழகத்தில் அவரால் அரசியல் செய்ய முடிந்தது; ஆட்சியில் இருக்க முடிந்தது.
நமக்கு மாணவ பருவத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு தருணங்கள் உண்டு. அவரோடு பயணித்த காலங்கள் இனிமையானவதாகவும் இருந்திருக்கிறது; மிக மிக கசப்பானதாகவும் இருந்திருக்கிறது. சமூக, அரசியல் சூழலை கணக்கில் கொண்டு நெருங்கியும் இருந்திருப்போம்; வெகுதூரம் விலகியும் சென்றிருப்போம். சட்டசபைக்கு உள்ளேயே ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து மோதல்கள் கூட நடைபெற்றது உண்டு. ஜனநாயகத்தில் பொதுவாழ்வில் இந்த இரண்டுமே சம கூறானவை. இரண்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்குமே்பாது அல்லது ஒன்றின் தலைமையில் இன்னொன்று செயல்படுகின்ற பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும் பிரிய நேரிடுகின்ற பொழுது கருத்தியல் ரீதியாக தாக்கி கொள்வதும் உலக அளவிலும் உண்டு; இந்தியாவில் அதிக அளவிலும் உண்டு. அதிலும் தமிழகத்தில் மிக மிக அதிக அளவில் உண்டு.
கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல் மேடைகளை அரைமணிநேரம் கூட நின்று பார்க்க முடியாது. கேளிக்கைபடுத்துவது என்ற பெயரில் ஆபாசமும் அருவருப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கும். இடைப்பட்ட காலத்தில் அவைகளுக்கு விடை கொடுக்கப்பட்டன. 1996க்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டு காலம் ஓரளவிற்கு மேடைப்பேச்சுக்கள், விமர்சனங்கள் நாகரீகமாகவே அமைந்தன. அண்மைக்காலமாக இன்றைய ஆளுங்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் மேடைகள் பொது இலக்கணங்களிலிருந்து விலகி, தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கான முன்னுதாரணங்களை அரங்கேற்றி வருகின்றன. பல நேரங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட சாதி ரீதியான சமூகங்களை குறிப்பிட்டு ஒப்பிடக்கூடிய போக்குகள் அதிகரித்து வந்துள்ளன. மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் வரம்பு மீறி பேசிய உதாரணங்களும் உண்டு. ஆனால் அவையெல்லாம் அவ்வப்போது உயர் பொறுப்பில் இருக்கூடியவர்களால் கண்டிக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் என்றே ஒருநாள் ஒரு நாகரிகமாக சூழ்நிலைகள் உருவாகி இருக்கும்.
அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல பேருடைய பேச்சுக்கள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க கூடியதாகவும், ஆத்திரமூட்டக்கூடியதாகவும் பெரும் கலவரங்களையே உருவாக்க கூடியதாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக யூடியூப், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற தொழில்நுட்பங்கள் மிக மிக மோசமானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன. பல்வேறு முகவரிகளிலும் தங்களது முகங்களை வெளிப்படுத்தாமல் அநாகரிகமாக கருத்துகளை உமிழும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.
இன்னும் பலபேர் ரூபாய் 200க்கும், 300க்கும் கூலிக்காக கூட சில அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஏவல்களாக செயல்படுகின்றனர். சமூக வலைளங்கள் இப்பொழுது இருபக்கமும் கூர்மையடைந்த ஆயுதம் போல் ஆகிவிட்டது. தங்களுடைய முகங்களையும், முகவரிகளையும் மறைத்து கொண்டு சாதிய, மத ரீதியான வன்மத்தோடு கருத்துகளை பதிவிடுதவதை ‛கருத்துரிமை' என்ற பெயரில் காலச்சாரமாக்க முற்படுகிறார்கள்; அவர்களே ஒரு இயக்கமாகவும் திரளுகிறார்கள். அவர்களுக்கோ இந்த மண்ணுக்கோ மொழிக்கோ எவ்வித உண்மையான பந்தமும் பற்றும் கிடையாது. இதுபோன்ற தான் தோற்றித்தனமாக ‛கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் தமிழ் கலச்சாரத்தை கெடுக்க கூடியவர்களுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது.
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நல்லதும் நடக்கிருக்கிறது; மேசமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது;. அவருடைய பங்களிப்பு தமிழுக்கோ, தமிழ் சமுதாயத்திற்கோ எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆட்சியாளராக இருந்தபோது அவருடய அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. அதேபோன்று அவருடயை ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு சாதகமாக நடவடிக்கைகளையும் குறிப்பிட்டால் மட்டுமே அவருடன் ஆட்சிக்கால குறைபாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உண்டான அருகதையும் தகுதியும் பெற முடியும்.
தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடயை பிரச்சனைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அதுகுறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலேயே இருந்தது. அதுதான் ஜாதி வெறியும், மதவெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப்போய் இருக்ககூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் இருந்திருக்கிறார்; 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார்.
அவருடய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்தற்கு எத்தனையோ தளங்கள் உண்டு. எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்கு பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவே புனையப்பட்ட அவதூறு பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரை கொச்சைப்படுத்தி வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நவடிக்கைகள் பாயும் பொழுது, அதை நாகரீகமாக சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, ‛‛அதே வர்த்தையை திரும்ப சொல்லி முடிந்தா நடவடிக்கை எடுத்து பார்'' என்று சொல்வதெல்லாம் அரசியலாக தெரியவில்லை. சாதிய ஆவணத்தின் இன்னொரு வடிவாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.
ஒருவர் மறைந்து விட்டால் அவரை விமர்சனம் செய்யககூடாதே என்ற கேள்வியோ, அதற்காக அனுதாபமோ காட்ட வேண்டும் என்பதில்லை. அதேசமயம் பாடிக் காட்டியவர்களின் மனோ நிலை; அந்த பாடல் வரிகளின் பொருள்; பாடியவர்களின் தொனி; அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை; அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம்; கடந்த செல்லக்கூடியவர்கள் கடந்து செல்லலாம்; ஆனால் நியாயப்படுத்த மட்டும் முயல்வது , நியாயமாகாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'' என தெரிவித்துள்ளார்.
- ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
- தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.
மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.
முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.
ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஏற்கனவே தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலையின்றியும், ஊதியம் இல்லாமலும் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது கட்சியினர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினர் உரிய அனுமதி இல்லாமல் அதிகமான வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ளன.
- டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.
தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.
இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் தோல்வியையே சந்தித்தார்.
எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று முழுவீச்சில் களப்பணியாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ள நிலையில், இந்த தேர்தலில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 976 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது 67.72 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்க தொடங்கினார். அவர் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கடைசி சுற்று வரையிலும் முதல் இடத்திலேயே நீடித்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.
முடிவில் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்றார். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 3 லட்சத்து 55 ஆயிரத்து 870 ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
- வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நெல்லை:
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.
இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
- கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களை பேச்சு வார்த்தை குழு நேரில் சந்தித்து வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் குழுவினர் அ.தி.மு.க. இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர்.
அ.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பா.பென்ஜமின், டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து கிருஷ்ணசாமிக்கு சால்வை அணிவித்தனர். சிறிது நேரம் அவருடன் ஆலோசனை நடந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது" என்றார். பேச்சுவார்த்தை குறித்து எஸ்.பி.வேலுமணி கூறும் போது, "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
- கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது.
- நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம்.
குனியமுத்தூர்:
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு செய்யாமல் இருந்து வருகிறது.
நேற்று பிரதமர் மோடி திருச்சி வருகை தந்தார். அவரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்க செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.
இதனால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கியது.
ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நான் நட்பு ரீதியாகவே பழகி வருகிறேன்.
கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் எடப்பாடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்கூட்டணி பலமாக உள்ளது. நமது கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் தமிழகம் வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது கூட்டணியும் பலப்படும் என தெரிவித்தார். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.
மேலும் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி நீடித்தது. அவர் நடைபயணம் ஆரம்பித்த பின்னர் தான் கூட்டணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அ.தி.மு.கவினர் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.
பொதுவாக மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு மாநிலத்தில் இருக்க கூடிய கட்சி தான் தலைமை தாங்கும்.
நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம். கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரியப்படுத்துவோம்.
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எளிதாக தி.மு.கவை வென்று விட முடியும்.
தி.மு.க தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதிபாதியாகவே நிற்கிறது. மேலும் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி ஏற்ற 4 மாதங்களிலேயே இது தெரிந்து விட்டது.
இதனை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் முதலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு.
- தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி , மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது என்னுடையது நிலைபாடு. கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்.
எனக்கு கிடைத்த தகவல்படி பா.ஜ.க. மேலிடம் 5 மாநில தேர்தலுக்கு பிறகு கூட மீண்டும் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்கலாம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலையற்ற தன்மை நிகழ்கிறது.
தி.மு.க.வை 40 தொகுதியிலும் வீழ்த்தி, மாவட்ட செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
- பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.
நெல்லை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
- புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.
இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.
மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்