என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பால் கொள்முதல்"
- பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.
மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.
தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பல்வேறு தரங்களாக பிரிக்கப்பட்டு ஆவின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆவினுக்கு வழங்கி வந்த பாலை கூடுதல் விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:-
தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 14½ லட்சம் லிட்டர் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மீதமுள்ள 14½ லட்சம் லிட்டர் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் 43 லட்சம் லிட்டராக இருந்தது.
பால் கொள்முதல் விலை குறைவு, தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறுவது, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு பணம் வினியோகம் செய்வதில் தாமதம், பாலில் உள்ள கொழுப்பு சத்தை முறையாக ஆய்வு செய்யாமல் குறைவான தொகையை வழங்குவது போன்ற பல்வேறு காரணங்களால்தான் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது.
தற்போதைய ஒரு நாள் பால் தேவை 29 லட்சம் லிட்டர் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும்.
ஆவினில் தற்போதுள்ள கட்டமைப்பின்படி ஒரு நாளில் கொள்முதல் செய்யும் 29 லட்சம் லிட்டர் பாலை அன்றைய தினமே பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகிக்கும்போது தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு நாள் தேவையான 29 லட்சம் லிட்டர் பால் தவிர்த்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி மறுநாள் வினியோகத்திற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்தால் மட்டுமே பால் வினியோகத்தில் தாமதத்தை தவிர்க்க முடியும்.
தற்போது காலை 7.30 மணிக்குதான் ஆவினில் இருந்து பால் வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் 9.30 மணி வரை ஆகி விடுகிறது. இதன்பின்பு பால் முகவர்கள் இந்த பாலை பெற்று சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகிக்கும் போது மிகவும் தாமதமாகி விடுகிறது.
பால் தாமதமாக வினியோகிக்கும்போது, பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் டப்பாக்களை திரும்ப ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினாலும் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
என்னென்ன காரணங்களுக்காக பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது? என்பதை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை. சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி ஆவின் பால் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.
- ஆவின் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
- அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
சென்னை:
தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ் நாட்டிலும் 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆவின் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்.
எனவே, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி:
பால் கொள்முதல் விலையை ரூ.31-ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 11-ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடுரோட்டில் பாலை கொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த கிராமத்தின் பால்பண்ணை தலைவர்கள் சண்முகம், ஞானபிரகாசம், தமிழ், பாண்டி, சின்னச்சாமி, முருகன், விக்கி, அர்ஜுனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
ஆகவே பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
- உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த 11-ந்தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைவில் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வருகிற 17-ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதற்கிடையே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து குறிப்பிட்டபடி மதுரை மாவட்டத்தில் இன்று (17-ந்தேதி) ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகத்தை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் பணியாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.
மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் அங்கத்தினராக உள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1.60 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1.36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு உற்பத்தியா ளர்கள் நலச்சங்கம் முழு அளவில் பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர மதுரையில் உற்பத்தியாளர்களிடம் பேசுவதற்காக, ஆவின் சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் சங்க பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கமாவட்டத்தலைவர் பெரிய கருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பம் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.
- பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம்.
குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.
பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.
தற்போது தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.
இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த போராட்டம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.
தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும்.
தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது.
ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை கொடுத்து விடுவோம்.
பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம்.
தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பால் ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகிப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
- அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
- 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.
அவிநாசி:
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம், சேவூர் அருகேயுள்ள மங்கரசவளையபாளையம் பகுதியில் நடந்தது.மாநில தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவிநாசி தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையாக, மாட்டுப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய், எருமைப்பால், லிட்டருக்கு 80 ரூபாய் உயர்த்த வேண்டும்.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
- கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததால் பால் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. பூச்சி மருந்து, உரம் விலையும், தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்து விட்டது.நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளோர் நிலையான வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.கூடுதல் வருமானத்திற்காக பெரும்பாலான தோட்டங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தி கட்டுப்படியாவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.
தமிழக அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இத்துடன் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது.தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் பலரும் கறவை மாடுகளை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவசாயிகள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்