என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புலி"
- குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும்.
- சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலம் கின்வாட் வனபகுதியில் ஜானி என்ற 7 வயது ஆண் புலி சுற்றி திரிகிறது. இதை வனத்துறையினர் அடிக்கடி கண்காணித்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஜானி புலி தனது துணைக்காக பெண் புலியை தேட ஆரம்பித்தது.
அந்த புலி நேற்று வரை 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் வனப்பகுதிக்கு வந்தது. ஆனாலும் இதுவரை ஜானி புலிக்கு துணையாக பெண் புலி கிடைக்கவில்லை. தனியாக தவித்தபடி தொடர்ந்து அதன் பயணத்தை நீடித்து வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும். சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும். கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு முன்பே பெண் புலிகள் சிறப்பு வாசனையை வெளியிடும். ஆண் புலிகள் வாசனை மூலம் பெண் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து ஒன்று சேரும்.
ஜானி புலி கடந்த 30 நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் அதன் ஜோடியை தேடி அலைகிறது. அதற்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. இந்த பயணத்தின் போது 4 மாடுகளை அடித்து கொன்று சாப்பிட்டது. 3 மாடுகளை வேட்டையாட முயற்சி செய்துள்ளது.
காடுகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளிலும் நடமாட்டம் உள்ளது. சில இடங்களில் ஜானி புலி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. துணையை தேடும் புலிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனாலும் பொதுமக்கள் புலியை கண்டால் தொந்தரவு செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
- தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.
இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
- எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
எச்5என்1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் ‘புலி...புலி...' என்று எச்சரித்தார்.
- சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்கள் பற்றி சங்க இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். கோடரியால் புலியை வெட்டிச் சாய்த்த வீரப் பழங்குடியின பெண்ணை பற்றி இங்கே படிக்கப் போகிறோம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர், லால் சாடிங்கி. 26 வயதான அந்த ஏழைப் பெண், காடுகளுக்கு சென்று விறகு வெட்டி பிழைத்து வந்தார்.
ஒருநாள் அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் விறகு வெட்டுவதற்காக, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றார்கள். காய்ந்த விறகுகளைத் தேடிப் பிடித்து, வெட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஓர் உறுமல் சத்தம் கேட்டது. லால் சாடிங்கி திரும்பிப் பார்த்தார். எந்த அசைவும் இல்லை. அது காட்டுப்பன்றியாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். மறுபடியும் உறுமல் சத்தம் ஓங்கிக் கேட்கவே அவர் அதிர்ந்து போனார். புதருக்குள் இருந்து வருவது புலி என்பதை உணர்ந்தார்.
அருகில் விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் 'புலி...புலி...' என்று எச்சரித்தார். அவர்கள் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.
புலி அதற்குள்ளாக மிக அருகில் வந்து விட்டது. எப்படி தப்பிப்பது? அந்தப் பெண்ணுக்கு வழி தெரியவில்லை. ஒரே பாய்ச்சலில் அவர் உயிரைப் பறிக்க புலிக்கு ஒரு வினாடிகூட ஆகாது. அந்த அளவில் அருகில் நெருங்கிவந்தது.
கையில் விறகு வெட்டும் கோடரி மட்டும் அவரிடம் இருந்தது. வாழ்வா? சாவா? என்ற கேள்வி மனதில் எழுந்தது. மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு, ஓங்கி ஆக்ரோஷத்தில் ஒரே வெட்டாக புலியை தலையில் வெட்டிச் சாய்த்தார். நல்ல வேளையாக ஒரே வெட்டில் கதை முடிந்தது. அந்தப் பெண்ணுக்கு வாழ்வும், புலிக்கு சாவும் உறுதியானது.
விறகு வெட்டப்போன இடத்தில் புலியை வெட்டிக்கொன்ற இளம்பெண் லால் சாடிங்கி பற்றி ஊரெல்லாம் பேசியது. அவர் வீரப் பெண்மணியாக போற்றப்பட்டார். அவர் வெட்டி சாய்த்த புலி 'மம்மி'யாக பாடம் செய்யப்பட்டு மிசோரம் தலைநகர் ஐசால், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இன்னமும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
அந்த வங்கப் புலியை வெட்டிச் சாய்த்த வீரப்பெண் லால் சாடிங்கி 72 வயதை எட்டி இருந்தார். சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் கடந்த நிலையில், சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.
புலியை அதன் வாழ்விடத்துக்கே சென்று தன்னந்தனியாக வீழ்த்திய அந்த பெண்மணிக்கு மிசோரமே வீரவணக்கம் செலுத்தியது.
- மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதியது
- கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.
வன விலங்குகள் ஊருக்குள் வரும் வீடியோக்களும், காட்டு சாலைகளில் உலா வரும் வீடியோக்களும் இணையத்தளத்தில் அவ்வப்போது வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். சில சமயங்களில் வாகனங்களில் அந்த விலங்குகள் அடிபடும் துரஷிஷ்டவசமான சம்பவங்களும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதி, புலி படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
X தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், வயது முதிர்ந்த ஆண் புலியின் மீது கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. காயமடைந்த புலியை மீட்டுபகுழுவினர் மீட்டு அவசர சிகிச்சைக்காக நாக்பூருக்கு கொண்டுசென்றனர். ஆனால் படுகாயமடைந்த புலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த சரணாலயப் பகுதியில் 40 கிமீ மேல் செல்லக்கூடாது என்ற வேக வரம்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வன சாலைகளில் விலங்குகளை பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது.
- கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அங்குள்ள மானந்தவாடி பகுதியில் புகுந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட காட்டுயானை ஒன்று சிக்கிய நிலையில், மையம்பள்ளியை சேர்ந்த அஜிஷ் என்பவர் நேற்றுமுன்தினம் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த யானையும் ரேடியோ காலர் பொருத்திய யானை என்பது கண்டறியப்பட்டது.
வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு சென்று அஜிசை காட்டு யானை கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். யானை தாக்கி பலியான ஜிசின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.
வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவும், அஜிசை கொன்ற யானையை பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் கண்ணூர் கோட்டியூர் பன்னியமலை பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் இன்று புலி ஒன்று சிக்கியது. அதனை தொழிலாளி ஒருவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த புலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புலியை அமைதிப்படுத்தி மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,
பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த மூடக் கொல்லி பகுதியை சேர்ந்த பிரஜீஷ்(வயது36) என்ற விவசாயி கடந்த 9-ந்தேதி, புல் அறுப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்துக்கொன்றது.
மேலும் அவரது உடலை புலி தின்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க 80பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் துப்பாக்கியுடன் புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகளும் வைக்கப்பட்டன. அது மட்டுமின்றி புலியை கண்டுபிடிக்க 2 கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று புலியை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆனால் ஆட்கொல்லி புலி தொடர்ந்து சிக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் விவசாயியை கொன்ற இடத்துக்கு சற்று தொலைவில் கூடலூர் காபி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஆட்கொல்லி புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை சுல்தான்பத்தேரி அருகே பச்சடியில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த புலியை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த புலிக்கு சிறிய அளவில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அந்த புலியை திருச்சூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
விவசாயியை கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கிய தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த புலியை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனை சுட்டுக்கொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த புலியை திருச்சூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.
புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
- பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.
இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர்.
- புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன் கூடு தாலுகா பல்லூர் ஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்னம்மா (50). இவர் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பதுக்கி இருந்த ஒரு புலி திடீரென ரத்னம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் புலியிடம் இருந்து ரத்னம்மா தப்பிக்க முயன்றார். ஆனாலும் புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரத்னம்மாளின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஹெடியாலாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.மேலும் அந்த புலியை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.
- புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது.
- புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை முடிஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
வனத்துறையினர் விரைந்து சென்று அந்த புலிக்குட்டியை மீட்டு, சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அதை, வனத்துறையினர், மானாம்பள்ளி வனசரகத்திற்குட்பட்ட மந்திரி மட்டம் என்ற பகுதிக்கு கொண்டு சென்று அதனை பராமரித்து வந்தனர்.
மேலும் புலிக்குட்டிக்கு வேட்டையாடும் திறனை கொடுப்பதற்காக, அதற்கு பயிற்சி கொடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக மந்திரிமட்டம் என்ற இடத்தில் 10 ஆயிரம் சதுரடியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புலிக்குட்டியை வனத்தில் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது. கூட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் துணை இயக்குனர் பார்கவதேசா, ஏ.சி.எப் செல்வம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுநாதன், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புலியின் உடல் நலம் மற்றும் அவற்றின் தற்போதைய மனம் சார்ந்த நிலை குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் புலியின் நடவடிக்கைகள், அதன் வேட்டையாடும் திறன், புலியை வனப்பகுதியில் விடுவதற்கான இடம் தேர்வு, ரேடியோ காலர் பொருத்தும் பணியினை செயல்படுத்துதல், புலியை வனப்பகுதியில் விடப்பட்ட பின்னர் தொடர்ந்து தனி குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்தல் போன்றவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்