என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கைது"

    • ஷாஜகான் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார்

    கோவை,

    கோவை மரக்கடையை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அந்த பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் அங்கு இருந்த மேலாளரிடம் மரம் வேண்டும் என கேட்டார். மரத்தை காண்பித்த மேலாளர் சாப்பிடுவதற்காக சென்றார்.

    அப்போது அந்த இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார். இது குறித்து அவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்த சமீரா (வயது 32) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2020 -ம் ஆண்டு போத்தனூரை சேர்ந்த அப்துல் மஜித் என்பவரிடம் 5 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்
    • ஷாரோன்ராஜ் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஷாரோன்ராஜ், நண்பர் ஒருவருடன் காதலி வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து திரும்பி வந்தவர், வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். உடனே அவர் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன்ராஜை அவரது காதலி குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக கூறியிருந்தனர்.

    மேலும் ஷாரோ ன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டு கொன்றுவிட்டு, கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் கூறினார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏடிஜிபி அஜித் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் ஷாரோன்ராஜின் காதலி கிரீஸ்மாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் காதலன் ஷாரோன்ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். காதலனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    ஷாரோன் ராஜூம் நானும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அடிக்கடி இருவரும் வெளியூர்களுக்கு சென்று வந்தோம். ஷாரோன் ராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை நான் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கிடையே பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை நான் ஷாரோன் ராஜிடம் தெரிவித்தேன். மேலும் என்னை மறந்து விடும்படியும் கூறினேன்.

    ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்தார். இதனால் நான் அவரை வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி போலீஸ் ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் கூறும்போது, ஷாரோன் ராஜின் தந்தை மூடநம்பிக்கை காரணமாக தனது மகனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

    அதாவது கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறியிருப்பதாகவும், அதற்காக அவருக்கு இன்னொருவருடன் திருமண ஏற்பாடு செய்து விட்டு தனது மகனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

    கேரளாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இப்போது மூடநம்பிக்கை காரணமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார்.
    • கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கணவர் மீது கோகுல ஈஸ்வரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    பின்னர் ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ரங்கனின் தலையில் போட்டார்.

    இதனால் ரங்கன் சத்தம் போட்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கோகுல ஈஸ்வரியை கைது செய்தனர்.

    தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரத்தில் ரங்கனை கொலை செய்ததாக கோகுலஈஸ்வரி தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு பின் கோகுலஈஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    • நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது அபிநயா தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.

    இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

    விசாரணையில் அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது.

    அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர்.

    அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    விசாரணையில் அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.

    அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

    அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்.

    மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    விசாரணையின்போது அபிநயாவுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்.

    இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது.
    • சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மாதேஸ்வரி.‌ இவர்கள் பவானி காமாட்சி அம்மன் கோவில் ரோட்டில் ஜவுளிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்த கடைக்கு நேற்று 3 பெண்கள் வருகை தந்து 9 வயது குழந்தைக்கு துணி வேண்டும் எனக்கூறினர். பின்னர் மாதேஸ்வரி துணியை காண்பித்தார். அந்த பெண்கள் பல வகையான துணியை கலைத்து பார்த்தனர்.

    இந்நிலையில் 2 பெண்கள் வெளியில் இருந்து கொண்டு ஒருவர் உள்ளே துணியை பார்க்க சென்ற நிலையில் நாம் வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் எனக்கூறி 3 பேரும் மள மளவென கடையை விட்டு கிளம்பினர்.

    அப்போது மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.16,500 ஆகும். இதனையடுத்து அந்த 3 பெண்களில் ஒருவரை பிடித்து பவானி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் கோபி செட்டிபாளையம், கணக்கம் பாளையம், பழைய காலனி பாரதி வீதி பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை மனைவி சிவரஞ்சனி (34) என்பதும், சேலைகளை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓட்டம் பிடித்த கார்த்தி மனைவி அபிராமி, வேலுச்சாமி மனைவி தாமரை ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஜவுளிக்கடையில் துணி எடுப்பதாக கூறி உள்ளே புகுந்த 3 பெண்கள் 11 சேலைகளை திருடிய சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் டாக்டர்களிடம் தெரிவித்தார்.
    • மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அக்காயபள்ளியை சேர்ந்தவர் சோனி (வயது 28). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

    இவரது மைத்துனருக்கு திருமணமான ஒரே ஆண்டில் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் சோனியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் எப்படியாவது ஒரு குழந்தையை எடுத்து வந்து தனக்கு பிறந்ததாக கூறி உறவினர்களை ஏமாற்ற வேண்டும் என எண்ணினார்.

    இதற்காக அவர் அமேசானில் ரூ.16 ஆயிரம் கொடுத்து பிளாஸ்டிக் தொப்பையை வாங்கி தனது வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக உள்ளதாக கூறி வலம் வந்தார்.

    மாதங்கள் செல்ல செல்ல குழந்தை எப்படியாவது வேண்டுமே என்று எண்ணிய அவர் எங்கிருந்தாவது குழந்தையை கடத்தி வரவேண்டும் என்று திட்டமிட்டார்.

    கடப்பா மாவட்டம் சின்ன தெனாலியை சேர்ந்தவர் மகபுஜான் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மறுநாள் ஆபரேஷன் மூலம் மெஹபூப் ஜானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார். பின்னர் தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருப்பதாகவும் குழந்தையை அவரிடம் காண்பித்து விட்டு வருவதாக குழந்தையை வாங்கிச் சென்றார்.

    குழந்தையை வாங்கிச்சென்ற பெண் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மெஹபூப் ஜான் இது குறித்து தனது உறவினர்கள் மற்றும் அங்குள்ள காவலாளிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர்.

    ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடப்பா ஐ.டி.ஐ சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் வந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் சோனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெல்லி அசோக் நகர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அசோக்நகர் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

    இதில் ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து டெல்லி அசோக் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு குடியிருப்பில் உள்ள குப்பை தொட்டியில் இரத்த கறை படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டியது அதே குடியிருப்பின் 3-வ து மாடியில் வசித்து வந்த இளம்பெண் என தெரியவந்தது.

    போலீசார் 3-வது மாடிக்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருமணமாகாமல் கர்ப்பம் ஆனதும், வீட்டில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

    திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அக்கம் பக்கத்தினர் கேலி செய்வார்கள் என்பதால் குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக அந்த பெண் கூறினார்.

    அந்த பெண் குழந்தை பெற்று ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்ததும், அந்த பெண் கைது செய்யப்படுவார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    • ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன் குமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதில் உடன்பாடு இல்லாத ராஜு இது தவறான உறவு என கூறி வந்தார். இருப்பினும் ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் ராஜு கள்ளத்தொடர்புக்கு மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்ற மறுக்கும் மைத்துனரை கொலை செய்ய குமாரி முடிவு செய்தார்.

    இதையடுத்து 2 வாலிபர்களை அழைத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தார்.

    ராஜு திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டி குமாரியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார்.

    ஆசைக்கு இணங்க மறுத்ததால் மைத்துனரை வாலிபர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்தனர்.

    பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர்.

    மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
    • இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அலங்காநல்லூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

    தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

    இதன் காரணமாக ராம்பாலாஜி, வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்துள்ளார்.

    பின்னர் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ராம் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ.50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோவை கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.

    முன் பகை காரணமாக இந்த 2 கொலை சம்பவங்களும் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர் கொலைகளை அடுத்து கோவை மாநகரில் உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இதுவரை சுமார் 56-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் "பிரண்ட்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்குமாறும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    அதில் "எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்" என்ற வன்முறையை தூண்டும் பாடல் வரிகளுடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

    மேலும் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின் தொடர்ந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா என்பதும், இவர் ஏற்கனவே கோவையில் கஞ்சா வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

    கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் திருப்பூர், விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டு வினோதினி என்ற தமன்னாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடி வரும் நிலையிலும் கூட தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிகிற்காக செய்யப்பட்டது தான் இந்த வீடியோக்கள். தற்போது நான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. நான் 6 மாத கர்ப்பிணியாக, எனது கணவருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்றிரவு சேலம் சங்ககிரி விரைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த தமன்னாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
    • அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குற்றால மடுகு பகுதியை சேர்ந்தவர் மனைவி அனுஷா. தம்பதிக்கு கிருத்திகா என்ற 4 வயது மகளும், லட்சுமி ஹாரிகா என்ற 18 மாத குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஓட்டல் நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்.

    அனுஷா தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கணவர் ஓட்டல் நடத்தி வருவதால் அவமானமாக கருதிய அனுஷா கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஐதராபாத் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணினார். இதனால் தனது மூத்த மகள் கிருத்திகாவை கணவரிடம் ஒப்படைத்து விட்டார். 1½ வயது குழந்தையை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசினார்.

    பின்னர் அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.

    பொழுது விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த அனுஷா தொட்டிலில் இருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தைக்கு பதிலாக கரடி பொம்மைகளை வைத்து சென்றதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முதலில் குழந்தை திருடு போனதாக போலீசாரிடம் தெரிவித்த அனுஷா பின்னர் போலீசார் அவர்களது பாணியில் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கால்வாயில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் மீட்டனர். அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×