என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குட ஊர்வலம்"

    • முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.
    • இரவு 8.10 மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழி பாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜ லட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு அன்று மாலை 4.10 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம், 108சங்காபிஷேகம், 108கலாசாபிஷேகம், இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, இரவு 8.30மணிக்கு வில்லிசை, இரவு 12மணிக்கு கற்பூர ஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடக்கிறது.

    ஜனவரி 1-ந் தேதி காலை 6மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், காலை 6.20மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, காலை 6.30மணிக்கு 108கலச பூஜை, உலக நன்மை வேண்டிய தீபாராதனை, காலை 6.45மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகாதீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8.10மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனை, காலை 8.30மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க 1008பால்குட பவனி முக்கியவீதிகள் வழியாக வருதல், பகல் 12.20மணிக்கு விவசாயம் தழைக்க, மழைவேண்டி 1008பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.10மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு 1008மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8.10மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடை மாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகி கள் செய்து வருகின்றன.

    • கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.
    • அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்ஷாபேட்டையில் உள்ள ஓம் சக்தி மன்றம் சார்பில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும் விழாவின் முக்கிய நாளான நேற்று ஓம் சக்தி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு பாட்ஷாபேட்டையில் உள்ள வீதிகளின் வழியாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓம் சக்தி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க தாலாட்டுப்பாடி அம்மனை தூங்க வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, ஊஞ்சல் உற்சவத்தை கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து இரவு இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    • சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • இதை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவிலில் தை மாத திருவிழா  நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாரியம்மன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாளை மாலை சக்தி அழைத்தல் மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல், 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி வண்டி வேடிக்கையும், 10-ந் தேதி மாரியம்மன் கோவில் திடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    11-ந் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சிறப்பிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.

    • பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு
    • பிரம்மோற்சவ விழா நடந்தது

    செய்யாறு:

    செய்யாறு டவுன், காமராஜர் நகர், மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று 10-ம் நாள் திருவிழா முன்னிட்டு 2000 பெண் பக்தர்கள் ஞான முருகன் பூண்டி, முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் ஊர்வலத்தின் போது அலகு குத்தியும், வாகனங்கள் இழுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இரவு 7 மணி அளவில் சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவதற்காக, காப்பு கட்டி, விரதம் இருந்து, ஞான முருகன் பூண்டி, முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தீச்சட்டி ஏந்தியும், அங்காளம்மன் வேடம் தரித்தும், கிரகம் சுமந்த படியும், ஓம் சக்தி, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

    இவ்விழாவைக் காண செய்யாறு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாக விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். செய்யார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையின் கீழ் விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வருடம் தோறும் 22 நாட்கள் வெகு சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • விநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்தக் கோவிலில் வருடம் தோறும் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்தநிலையில் நேற்று கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் உபயத்தில் பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடங்களை தங்கள் தலையில் சுமந்தவாறு ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று காலை 11 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு கோத்தகிரி மகளிர் மன்றம் நடத்தும் திருவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அக்கினி கம்பம் பூச்சாட்டுதல் நடைபெறுகிறது.

    • ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
    • சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது, இதனையொட்டி காலை கோபூஜை, சண்டி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வந்து அங்காளம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர், இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய நாயகி உடனுரை ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதி வேண்டி 9ம் ஆண்டு பால்குடம் ஆரணி டவுன் பழைய காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ அரியாத்தமன் ஆலயத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பால்குடம் ஏந்தி காந்தி ரோடு பழைய பஸ் நிலையம் பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வர் ஆலயத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

    இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆலய நிர்வாகி நடராஜன், மற்றும பக்தர்கள் பங்கேற்றனர்.

    • உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 30-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.

    நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தினர் இங்குள்ள அவர்களுக்கு சொந்தமான அன்னதான மண்டப வளாகத்தில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளுடன், விரதம் இருந்த பக்தர்கள் பால்குடங்களை ஏந்தியவண்ணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. 

    உற்சவர் பிரகார புறப்பாடு

    உற்சவர் பிரகார புறப்பாடு

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் செயல் அலுவலர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கத்தின் நிர்வாகிகளும், விழா குழுவினரும் செய்திருந்தனர். மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி மற்றும் நரசிம்ம ஜெயந்தி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யநாராயண பூஜை நடைபெற்றது. பின்னர், கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, அகரம் கிராமத்தில் உள்ள வில்லியர் காலனியில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர்,

    சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ரோஜா மற்றும் தேவன் ஆகியோர் முன்னிலையில் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
    • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று பக்தர்கள் 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடி வாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று, மலைக்குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது.

    மலை அடிவாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்து. வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட் டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இரவு சுமார் 7 மணி அளவில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆறுமுகசாமிக்கு விபூதி காப்பு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    • ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. முதல்முறையாக செல்லியம்மனுக்கு 108 பால்குட வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை பெண்கள், ஓடைப்பகுதியில் இருந்து சக்தி கரகத்தின் பின்னால் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்று 108 பால்குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலால் செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.
    • பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.

    இந்த மண்டல பூஜையை முன்னிட்டு வெண்ணாம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து 12 வகையான பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் எல்லயம்மனுக்கு புஷ்பங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×