search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம்"

    • வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது.
    • ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    ராசிபுரம்:

    வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெண்ணந்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 600 ஹெக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளானது. சின்ன வெங்காய பயிர், நடவு செய்து 20 முதல் 30 நாட்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல் அல்லது திருகல் நோய் ஏற்படுகிறது. பயிர் சுழற்சி முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதால் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நல்ல வடிகால் வசதி யுள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 1 1/2 அடி உயரம் உள்ள பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் அற்ற தரமான விதைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு 1 கிலோ விதைக்கு 4 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து 24 மணி நேரம் உலர விட்டு விதைக்க வேண்டும்.

    கடைசி உழவின்போது ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோவிரிடி, 1 கிலோ சூடோமோனாஸ், 5 கிலோ வேம் ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாட்கள் நிழலில் வைத்திருந்து நிலத்தில் இட லாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.

    தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும் ஆகையால் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு கார்பெண்டாசிம் என்ற பூஞ்சான் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
    • குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .

    நாகர்கோவில்:

    சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாகும்.இதனால் பெண்கள் சமையலுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சமீபகாலமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தை உட்பட கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .அங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 30 முதல்ரூ. 40க்கு விற்கப்பட்டது. தற்பொழுது வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ 80 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெங்காயத்தின் விலைரூ. 120 ஆக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டு வருகிறது .

    இதே போல் பீன்ஸ் கேரட் வெள்ளரிக்காய் புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 100 மூட்டை வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 மூட்டை வெங்காயம் மட்டுமே வருகிறது. வரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • ஒரு கிலோ சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு விவசாயிகளுக்கு ரூ.20 வரை செலவு ஆகி வருகிறது.
    • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்ப லூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரத்து அதிகம் காரணமாக சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் படிப்படியாக விலை அதிகரித்து வந்த சின்ன வெங்காயம் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கும், சில்லரை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-ஐ கடந்தும் விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு கிலோ சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு விவசாயிகளுக்கு ரூ.20 வரை செலவு ஆகி வருகிறது.

    இந்த நிலையில் போதிய விலை கிடைக்காததால் மன வேதனை அடைந்த விவசாயிகள் பலர் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதையே நிறுத்தி விட்டனர். இதன் காரணமாகவே தற்போது சின்ன வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாம்பார் உள்ளிட்ட சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 7 முதல் 9 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    இன்று ஒரு லாரி சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பரவலாக மழை பெய்ததன் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
    • இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை 3 மடங்கு உயர்ந்து விட்டது. இதுபோல் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் கம்பம், ஒட்டன்சத்திரம், தாளவாடி, பல்லடம், திருப்பூர், கொடுமுடி போன்ற பகுதிகளில் இருந்து 15 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் பரவலாக மழை பெய்ததன் காரண மாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று காலை மார்க்கெட்டிற்கு 5 டன் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து இருந்தது.

    இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    அதேசமயம் பெரிய வெங்காயத்தின் விலை வழக்கம் போல் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து மீண்டும் விலை உயர்ந்துள்ளது. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகியுள்ளது.

    இதனால் கடந்த வாரம் ரூ.25 முதல் 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.50 வரை விற்பனையானது. இன்று தாளவாடி, ஆந்திரா குப்பம் போன்ற பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆந்திரா தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரையும், தாளவாடி தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    • பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் பயிர் செய்து வருகின்றனர்.
    • சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :-குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி .ஏ. பி .பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

    மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர் .இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 1லட்சம் வரை செலவாகிறது.

    இப்பகுதி விவசாயிகள் விதை மற்றும் காய் நடவு மற்றும் நாற்று நடவு என ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 7 டன் வீதம் கிடைக்கவேண்டிய மகசூல் 3 டன் வரை மட்டுமே கிடைத்தது .மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20முதல் 30 வரை விற்பதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.

    தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும் என்ற நிலையில் உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வழக்கமாக இப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும்
    • வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதி களில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

    இந்த பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக பூ மகசூலான தக்காளி, வெண்டை, சின்ன வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். வழக்கமாக சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் நிலையில், மழை பொய்த்ததால் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடைபெற்றது.

    கடந்த மாதத்தில் இருந்து சின்ன வெங்காயம் எடுக்கும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் அதன் விலை ரூ.35 ஆக இருந்த நிலையில், அதிக சாகுபடி காரணமாக அதன் விலை தற்போது ரூ.15-க்கும் குறைவாக சென்றுவிட்டது.

    மேலும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மிகவும் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

    2 மாத பயி ரான சின்ன வெங்காயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விளைவதற்க்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.

    ஒரு ஏக்கருக்கு உழுவது முதல் களையடுத்தல், அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை செலவாகிறது. தொடக்கத்தில் ரூ.40 வரை கிடைத்ததால் லாபமாக இருந்த நிலையில் தற்போது ரூ.15-க்கு விலை போகிறது.

    கோரிக்கை

    இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வரும் பெரும் நஷ்டத்தால் பெரும்பாலோர் சின்னவெங்காயம் நடவை கைவிட்டு வருகின்றனர். பாடுபட்ட நாங்கள் லாபம் ஈட்ட முடியாத நிலையில் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்கவும், மழைகாலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவிகின்றனர்.

    • சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
    • இலைப்பேன் நோய் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:-

    சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். அப்போது இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும். மேலும் சின்ன வெங்காயத்தில், வெங்காய ஈ தாக்குதலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.

    இதனை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் 25 சி 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அதுபோல் சின்ன வெங்காயத்தில் வெட்டுப்புழு நோய் தாக்குதலும் காணப்படுகிறது. இந்த புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும். இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×