search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில் மழை"

    • பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
    • தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம் பாளையம் குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது.

    இதனால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியூர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    மேலும் இரவு கனமழை பெய்தால் சேதம் ஏற்படாமல் இருக்க நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. குறிப்பாக காலை முதல் மாலை வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மேலும் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    பின்னர் சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சோலார், நாடார் மேடு, முத்தம்பாளையம், காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடியது. நாடார் மேட்டில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. முத்தம்பாளையத்தில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் வெள்ளம் நிரம்பியதால் சாக்கடை கழிவுகள் சாலையில் மிதந்து சென்றன.

    இதேப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதாவது 7 சென்டிமீட்டர் மழை பதிவு. இதுபோல் கோபியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாய்க்கால் ரோடு பகுதியில் மரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது.

    இதுபோல் சென்னிமலை, அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப் பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-75, கோபி-23.20, ஈரோடு-23, சென்னிமலை-22, அம்மா பேட்டை-17.20, கொடுமுடி-10.20, மொடக்குறிச்சி-7, கவுந்தப்பாடி-7, வரட்டுப்பள்ளம்-6.40, பவானி-3.80, கொடிவேரி-3, பவானிசாகர்-1.20.

    • சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது.
    • திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் மாலையில் குறைந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மாலை 6 மணி அளவில் திடீர் என பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கியது. மழை ஒரு மணி நேரம் நீடித்தது.

    பலத்த சூறைக்காற்றால் சென்னிமலை-அரச்சலூர் ரோடு காளிக்காவலசு பிரிவில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. சென்னிலை மலை அடிவாரப்பகுதி மற்றும் சென்னிமலை-ஈங்கூர் ரோடு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.

    சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது. இதில் வீடுகளும் சேதமடைந்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் கொடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

    இதனால் 9-வது வார்டு பகுதி மற்றும் சென்னிமலை மீதுள்ள முருகன் கோவிலிலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    இன்று காலை முதல் மின் கம்பங்களை அகற்றி புது மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    • அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    • கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரிபள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.

    • ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது.
    • தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென இரவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.

    ஈரோடு மாநகர பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக நீடித்தது. தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மாநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இரவு 10 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரிய வலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலம் மழை நீரில் மூழ்கியது. மேலும் ஈரோடு சத்யா நகரில் கீழ்த்தளத்திலுள்ள 50 வீடுகளில் நள்ளிரவில் மழை நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் அதிகாலை வீடுகளில் புகுந்த மழைநீர் வடிந்தது. மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட மடிக்காரர் காலனியில் வீதி 1, 2, 3, பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் மழை நீர் புகுந்தது.

    இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 3 மாதங்களில் இந்த பகுதிகளில் மட்டும் 5-வது முறையாக வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற சாக்கடை வசதிகள் இல்லை. வீடுகளில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகளில் புகுந்து விடுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதம்பாடி, குருவரெட்டியூர், சித்தார் போன்ற பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்நிலையில் அம்மாபேட்டை காமராஜர் வீதியைச் சேர்ந்த சரசாள் (55) என்பவர் தனது மகள் ரத்னா (30) என்பவருடன் அதே பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தாய்- மகள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 9 மணி அளவில் திடீரென சரசாள் வீட்டை இடி தாக்கியது. இதில் வீடு முடிவதும் இடிந்து விழுந்தது.

    நல்ல வேளையாக இடி சத்தம் கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருந்த சரசாள் மற்றும் அவரது மகள் ரத்னா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஒருசில இடங்களில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாக கடும் குளிரும் நிலவியது.

    ×