search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
    • அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.

    * திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

    * சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    * அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.

    * சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

    * எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.

    * 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    * அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.

    * எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.

    • 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
    • நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

    இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.

    ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
    • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

    தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

    தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

    அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

    அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

    கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
    • இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.

    இன்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

     

    நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

     

    இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    • பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முந்திய மழை பெய்யும்.
    • வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முன்னரே மழை பெய்யத்துவங்கும்.

    இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது.
    • பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை (700மி.மி), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை (300 மி.மி), ஏப்ரல்-மே மாதங்களில் கோடை மழை (250 மி.மி) வீதம் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    மேலும் அக்னி நட்சத்தி ரம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக வழிந்தோடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீலகிரியில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அனல் வெப்பம் தணிந்து தற்போது மீண்டும் குளுகுளு காலநிலை திரும்பி உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கொட்டும் மழைக்கு மத்தி யில் பூங்காவில் குழந்தை களுடன் சேர்ந்து விளையாடி யதை காண முடிந்தது. ஊட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காற்றில் 73 சதவீதம் ஈரப்பதமும் நிலவியது.

    கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநில ங்கள் இணையும் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் வெயில்-புழுக்க த்தால் தவித்துவந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆகியோரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    பருவமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து காக்கவும், அடுத்த 2 மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவ மழைகாலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அதன்படி மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அத்தகைய கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால், ஆஸ்பத்திரி வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

    குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதும் முக்கியம். புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சை குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

    அதேபோன்று கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு சுகாதார குழுக்களையும் அமைக்க வேண்டும்.

    மருத்துவக் கட் டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற் கொள்ள வேண்டும்.

    பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

    காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவகால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களும் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கழிவுநீர், செப்டிங் டேங்க் தூய்மை படுத்துபவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதனை சிலர் முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் உபகரணங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடையை ரோபோ மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஜே.சி.பி. எந்திரங்கள், ஆட்டோ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 7598016621 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் புதிய திட்டப்பணிகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான மழைநீர் வடிகால் வசதி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

    குறிப்பாக, 12.90 சதுர கீலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 20,498 மக்கள் தொகை கொண்டதாகும். பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஆத்தூர் - நகரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 1.552 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 76 லிட்டர் தினசதி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சாலை வசதிகளைப் பொறுத்தவரை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2022-2023 நிதியாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வி.ஐ.பி நகர் பகுதியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும், பாலாண்டியூர் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், முத்து ஹேவே நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 15.402 கிலோ மீட்டர் நீளத்தில், ரூபாய் 11.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் மழைநீர்வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குப்பைகள் சேகரித்து தரம் பிரித்தல் என பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்ட துடன், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பணிகளை செய்து முடித்திட வேண்டுமென அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியளார் துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகா விஷ்ணு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×