search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாண ராணி"

    • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பணம் சம்பாதிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டார். இதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

    இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சத்யா மீது சந்தேகமடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் கொடிமுடி சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத வாலிபர்கள், தொழிலதிபர்கள் உள்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை-பணம் பறித்தது தெரியவந்தது.


    தனது மோசடி செயல் போலீசாருக்கு தெரியவரவே, சத்யா போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக தப்பி சென்று விட்டார். 53 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மீம்ஸ்களும் வெளியாகின.

    இதையடுத்து தலைமறைவான சத்யாவை பிடிக்க தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை சத்யா தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன் அழகில் அவர்களை மயக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது சத்யா ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்துள்ளார். அவ்வப்போது செலவுக்கு ரூ.10ஆயிரம், 20ஆயிரம் என கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சியை வைத்து மிரட்டியதால் பலர் பயந்து சத்யா கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இவரிடம் திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினர், மானம் போய் விடும் என்று பயந்து கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய சத்யாவிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யவும் உள்ளனர்.

    இதனிடையே சத்யாவின் இந்த செயலுக்கு உறுதுணையாக கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த தமிழ்செல்வி இருந்துள்ளார். அவர்தான் புரோக்கராக செயல்பட்டு சத்யாவுக்கு ஆண்கள் பலரை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமறைவான தமிழ்செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • என்னை போல 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். இதில் கிடைக்கும் பணம் முழுதையும், அவர்களே எடுத்துக் கொள்வர்.
    • திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பேட்டையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி புதுவெங்கரை அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    கடந்த 9-ந்தேதி காலையில் புதுமாப்பிள்ளை தனபால் எழுந்து பார்த்தபோது, சந்தியா மாயமாகி இருப்பதும், வீட்டில் இருந்த துணி, நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்றிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போன் எண் மற்றும் திருமணத்திற்கு அவரது உறவினர்களாக வந்தவர்கள் செல்போன் எண்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சந்தியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் இடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார். சந்தியா திருமணத்திற்கு வந்தபோது அவரையும், அவரது தோழி தனலட்சுமி உள்ளிட்டோரை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில், சந்தியா கடந்த 1½ ஆண்டில் மட்டும் பாண்டமங்கலம் வாத்து வியாபாரி மாரியப்பன் என்பவர் என 6 பேரை திருமணம் செய்து, கைவரிசை காட்டி இருப்பதும், 8-வது திருமணத்திற்கு முயன்றபோது போலீசில் சிக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மேலும் சந்தியா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-

    மதுரையைச் சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

    மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், எனது நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால், நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன்.

    என்னை போல, 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். இதில் கிடைக்கும் பணம் முழுதையும், அவர்களே எடுத்துக் கொள்வர். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவர்.

    மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தருவர். எனக்கு பெற்றோர் இல்லை. எனது உறவினர்களாக ரோஷினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் நடிக்க, என் வீட்டில் விட்டு விடுவர்.

    திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

    திருமணம் முடித்தவுடன் உடனடியாக வீட்டை காலி செய்து விடுவர். எனக்கு திருமணம் நடக்கும் போதெல்லாம், புரோக்கர்கள் திருமண போட்டோவில் கூட எச்சரிக்கையாக விலகி நிற்பர்.

    பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பிடித்து விட்டது எனக்கூறி, உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து, மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றி, என்னை காரில் அழைத்துச் சென்று விடுவர். சில சமயங்களில் மாப்பிள்ளை வீட்டாருக்கு, பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, அங்குள்ள பொருட்களை சுருட்டிக்கொண்டு சென்று விடுவோம்.

    மாப்பிள்ளை வீட்டார், அவமானங்களுக்கு பயந்து, பெரும்பாலும் புகார் கொடுப்பதில்லை. இது புரோக்கர்களுக்கு சாதகமாக அமைந்தது. நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளை அரங்கேற்றி உள்ளோம்.

    கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் மதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணம் என்ற போர்வையில் எனக்கு அவர் பல திருமணங்களை அவர் செய்து வைத்து போலீசில் வசமாக சிக்க வைத்து விட்டார். இவ்வாறு சந்தியா வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    கைதான சந்தியா மற்றும் திருமண மோசடி கும்பல் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தரகர் தனலட்சுமி (45), வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (26), வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    தலைமறைவான திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த போலி திருமண புரோக்கர்கள் பாலமுருகன் (45), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (28), ரோஷினி, மாரிமுத்து ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    ×