search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ஆம்புலன்ஸ்"

    • வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
    • 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.

    இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு 7397724811 , 8925506308 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மருத்துவ கல்லுாரியில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை நடை பெறுகிறது
    • அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், மயிலா டுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இதில், ஓட்டுநருக்கான பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.

    இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

    அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

    இதே போல மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎஸ்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.

    இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
    • பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-

    பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.

    இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

    இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.

    கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

    மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர் (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார். போகும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ஜெனிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயையும், குழந்தையையும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 95 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

    சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை சென்னை-திருவள்ளூர் ஆம்புலன்சு சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திப்குமார் தெரிவித்து உள்ளார்.

    • பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
    • 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

     திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் மட்டும் இருந்தன. தற்போது 25 உயிர் காக்கும் வாகனம், 3 அதிநவீன உடனடி உயிர் பாதுகாப்பு கருவிகள் கொண்ட வாகனம், பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ், ஒரு பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து, 550 பேர் ஆம்புலன்ைஸ அழைத்து பயன்பெற்றுள்ளனர்.

    பிரசவத்துக்காக 75 ஆயிரத்து 296 பேரும், சாலை விபத்துக்காக 92 ஆயிரத்து, 21 பேரும், பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உதயநிதி கூறியதாவது:- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

    நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் தேவையான அவசர, பிரசவ உதவிகளை, கண்விழித்து தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகிறோம். அதன் வாயிலாக, 13 ஆண்டுகளில், 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்கு அடுத்தப்படியாக பிரசவத்துக்கு 108 ஆம்புலன்சை அதிகளவில் மக்கள் தேடுகின்றனர். காரணம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்ப்பது, வரும் வழியில் தேவையான சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் தான்.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்சில் 361 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் வாயிலாக வீடுகளில் 535 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 17 வாகனம் இயக்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்

    2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 15-ம், அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றும், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 800 பேர் பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 36 ஆயிரத்து 904 பேரும், சாலை விபத்துகளில் 28 ஆயிரத்து 324 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 572 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 308 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 318 கர்ப்பிணி தாய்மார்கள், அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளார் அறிவுக்கரசு தெரிவித்தார்."

    • அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார்.
    • பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    ×