search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1.08 கோடி"

    • முதற்கட்டமாக தற்காலிக மேற்கூரைகள் அகற்றம்
    • பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவறைக்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14-ந் தேதி தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்யவேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 24-ந்தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அன்று தேவ பிரசன்னத்தில் கூறியபடி வாஸ்துப்படி திருப்பணிகள் நடத்த வேண்டும் என இந்து இயக்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதை தொடர்ந்து கோவில் தந்திரி தலைமையில் இந்து இயக்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முதலில் செய்யப்பட்ட பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய கடந்த டிசம்பர் 22-ந் தேதி ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயர் ஜோதிட பிரசன்னம் பார்த்தார். அதில் அம்மன் கோபம் தணியவில்லை. அம்மனின் தீக்காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனம் அரைத்து பூச வேண்டும்.உடனே இதை செய்யாவிட்டால் நாட்டிற்கு கேடு விளையும். குரு சன்னதியில் முறையாக பூஜை நடக்கவில்லை.காலம் காலமாக ஆச்சார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜனவரி 8-ந் தேதி குரு சன்னதியில் பரிகார பூஜை நடந்தது. தொடர்ந்து மார்ச் மாதம் மாசிக்கொடை 10 நாட்கள் நடந்தது. பின்னர் கடந்த ஆவணி மாதத்தில் அசுவதி பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. இன்னும் 5 மாதத்தில் மாசிக்கொடை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கோவில் திருப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருவட்டார் வந்த அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு வந்து திருப்பணிக்காக நடந்து வந்த மர வேலைகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மர வேலைகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று கோவில் மேற்கூரையில் அமைக் கப்பட்ட தற்காலிக கொட் டகை அகற்றும் பணி தொடங்கியது. தற்காலிக கொட்டகை அகற்றப்பட்ட தும் ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழிக்கோல் அமைத்து மேற் கூரை அமைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5.30 க்கு அபிஷேகம், 6.30-க்கு தீபாராதனை, நண்பகல் 12.30 க்கு உச்ச தீபாராதனை மற்றும் மாலை 6.30 க்கு தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கும்.

    நேற்று திருப்பணிகளுக்கு தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கிய தால் உச்ச தீபாராதனை முன்னதாக முற்பகல் 11.30 மணிக்கு நடத்தப்பட்டது. புதிய கொட்டகை அமைக் கும் பணி நிறைவுறும் வரை உச்ச தீபாராதனை மட்டும் முன்னதாக 11.30 மணிக்கு நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×