search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ நாய்"

    • பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.
    • பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன் 'ஜூம்' என்று அழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றது.

    அப்போது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    இதில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.

    இதற்கிடையே ஜூம் நாய் உதவியால் அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் காயம் அடைந்த ஜூம் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    எனினும் அந்த நாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூம் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறியதாவது:-

    ராணுவ நாய் ஜூம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை உடல்நிலை நன்றாக முன்னேறி வந்த நிலையில் நாய், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

    தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜூமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சம்பவத்தன்று பயங்கரவாதிகள் சுட்டதில் 4 குண்டுகள் ஜூம் மீது பாய்ந்தது. இருப்பினும் ஜூம் 2 பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியதோடு பயங்கரவாதிகளை தாக்கி பாதுகாப்பு படையினருக்கு உதவியது.

    இதனால் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயம் அடைந்த ஜூம் நாய்க்கு 2½ வயதாகும். இந்த நாய் கடந்த 10 மாதங்களாக ராணுவத்தின் 15 கார்ப்பிசின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×