search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் கார் குண்டு வெடிப்பு"

    • திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?
    • ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இன்று பாரதிய ஜனதாவினர் சிறப்பு பூஜை நடத்தினர். கோவையை காத்த ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி இந்த பூஜையை அவர்கள் நடத்தினர்.

    பூஜையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அவர்கள் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதால் இன்று வழிபாடு நடத்தினோம். நூற்றுக்கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது.

    சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை. கோவைக்கும் வரவில்லை. இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்ந்து வந்திருக்க வேண்டாமா?

    போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசி இருக்க வேண்டாமா?

    இந்த சம்பவம் பற்றி அவர் இதுவரை பேசாதது, மவுனமாக இருப்பது கோவையை பழி வாங்கும் நோக்குடன் இன்னும் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது. உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.

    முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் சரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என களத்தில் இறங்க வேண்டும்.

    திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை?

    ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் காரை வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்-அமைச்சர் கவுரவம் பார்க்க கூடாது.

    சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களை பற்றி தீர விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இன்று பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்துள்ள முபின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளார்.
    • பயங்கரவாத அமைப்பினருடன் முபின் தொடர்பில் இருந்தது அவரது உறவினர்களுக்கே தெரியாது. சாதாரணமாகவே அவர் தன் மீது சந்தேகம் வராதபடி செயல்பட்டு வந்துள்ளார்.

    கோவை:

    கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி பலியானார்.

    கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும். இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே கோவை கோட்டைமேடு, எச்.எம்.பி.ஆர். தெருவில் உள்ள முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது நோட்டு புத்தகம் அமைப்பில் இருந்த ஒரு சிறு டைரியை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த டைரியை ஆய்வு செய்த போது சங்கேத குறியீடுகள், பல ரகசிய தகவல்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக "சுற்றுலா தலங்கள்" என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    கோவை ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி விக்டோரியா ஹால், ரேஸ்கோர்ஸ், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 5 இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. இந்த 5 இடங்களும் சுற்றுலா தலங்கள் அல்ல. பொதுமக்கள் தினமும் அதிக அளவு வந்து செல்லும் இடங்களாகும்.

    எனவே இந்த 5 இடங்களிலும் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தினார்.

    இந்த 5 இடங்களையும் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் தனியாக தொகுத்து தனி பிரிவுடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பல பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்துள்ள முபின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளார். பயங்கரவாத அமைப்பினருடன் அவர் தொடர்பில் இருந்தது அவரது உறவினர்களுக்கே தெரியாது. சாதாரணமாகவே அவர் தன் மீது சந்தேகம் வராதபடி செயல்பட்டு வந்துள்ளார்.

    இதற்காக பழைய புத்தக கடை, பழைய துணி வியாபாரம் என்று அடிக்கடி தனது தொழிலை மாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலால் சதிச்செயலில் ஈடுபட அவர் தயாராகி இருக்கிறார். ஆனால் அவரது கூட்டாளிகள் அனைவரும் தற்போது ஜெயிலில் உள்ளனர்.

    தனி நபராக இருந்து எப்படி தாக்குதல் நடத்துவது என்று அவர் ஒரு கட்டத்தில் யோசித்து உள்ளார். அதற்கும் வெளிநாட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அவருக்கு வழிகாட்டி உள்ளனர். அதன்படி அவர் யூ டியூப்பில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்பதை பார்த்துள்ளார்.

    அதன்மூலமே கோவையில் தாக்குதல் நடத்த அவர் திட்டங்களை வகுத்துள்ளார். யூ டியூப்பில் அவர் தேடுதல் நடத்தி தகவல்கள் சேகரித்ததை தற்போது சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் முபின் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    முபினுக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட 5 இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் முதல் கட்ட விசாரணையில் இந்த 5 பேரும் முபினுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    முபின் சிலிண்டர்களை ஏற்றி வந்த காரை வாங்கி கொடுத்தது முகமது தல்கா என்று தெரியவந்துள்ளது. மற்ற 4 பேரும் வெடி பொருட்களை வாங்கி உள்ளனர். வெடி பொருட்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதற்காக இந்த 4 பேரும் கோவையில் பல்வேறு இடங்களில் வாங்கி இருப்பது தனிப்படை போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் ஆங்காங்கே வாங்கப்பட்ட வெடி பொருட்கள் அனைத்தும் முதலில் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டில்தான் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்குதான் அவர்கள் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான கலவையை செய்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருந்து அதிக அளவு ரசாயன வாடை எழுந்துள்ளது.

    இதையடுத்துதான் அவர்கள் வெடி பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 23-ந் தேதி மதியம் போலீசார் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டுக்கு அதிரடி சோதனை நடத்த சென்ற போது அந்த வீடு முழுக்க தாங்க முடியாத அளவுக்கு ரசாயன வாடை வீசியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது முபின் தனது வீட்டிலேயே வெடி பொருட்கள் கலவையை செய்தது உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சதி வேலைக்கு முபினுக்கு வெளிநாடுகளில் இருந்து பயிற்சி கொடுத்து உதவியவர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

    தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் கோவையில் முபினுக்கு உதவும் வகையில் வேறு யார் யார் உள்ளனர் என்ற பட்டியலை தயார் செய்து உள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவர்கள் முபின் போன்று சிலிண்டர் நிரப்பப்பட்ட கார்களை இயக்க தயாராக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதில் முன்னேற்றம் இல்லாததால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    முபின் கோவையில் மட்டும் தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

    இதற்கிடையே முபினும், அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்ற மர்மபொருள் வெடிபொருட்கள் தானா, அவை தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளதா அல்லது வேறு எங்காவது கடத்திச் சென்று வைக்கப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    வெடிகுண்டு தாக்குதல் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பு என இந்த வழக்கு நீண்டு கொண்டே செல்வதால் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் விசாரணையை தொடங்கினர். சென்னையில் இருந்து நேற்று இரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை வந்தனர். அவர்கள் கார் வெடித்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் விவரங்களை கேட்டு பதிவு செய்து கொண்டனர். பலியான முபின் மற்றும் கைதானவர்களுக்கு ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் அவர்கள் விசாரித்தனர்.

    இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விவரங்களை சேகரித்தாலும் வழக்கு இன்னும் மாற்றப்படவில்லை. எங்கள் வசமே உள்ளது என்றார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நேற்று வெளியிட்டார். முபின் நடத்தியது தற்கொலை தாக்குதல் என்று ஆதாரத்தையும் வெளியிட்டார். ஆனால் விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுபற்றி எதையும் உறுதிப்படுத்தவில்லை.

    • பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.
    • தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது.

    காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை. எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

    இது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும். இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருந்திட வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவுகளாய் பிணைந்து இணைந்து வாழ்ந்து வருகிறோம்.

    இந்நிலையைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது.

    பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.

    தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    பொதுமக்கள் வதந்திகளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்றிட வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முகமது அசாருதீனுடன் தற்போது இந்தியாவில் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அவரது செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பட்டியல் தயாரித்தனர்.
    • கோவையில் தற்போது நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது தெரியவந்தது.

    சென்னை:

    இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இலங்கையையே உலுக்கியது.

    இலங்கையில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஜக்ரன் ஹசீமுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களில் நிறைய பேரிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

    குறிப்பாக முகமதி அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது அசாருதீன் தற்போது கேரளாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    எனவே முகமது அசாருதீனுடன் தற்போது இந்தியாவில் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அவரது செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பட்டியல் தயாரித்தனர்.

    அப்போது கோவையில் தற்போது நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது தெரியவந்தது. 2019-ம் ஆண்டு இதுகுறித்த சந்தேகத்தின் பேரில் ஜமேஷா முபினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரை விடுவித்துள்ளனர். ஆனாலும் அவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தான் ஜமேஷா முபின் கோவையில் கார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது தெரியவந்தது. ஜமேஷா முபின் ஏற்கனவே ஒருமுறை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்தான். அதை செயல்படுத்த முயன்ற போது போலீஸ் கெடுபிடி காரணமாக அவனால் நிறைவேற்ற முடியவில்லை.

    இந்த நிலையில் அவன் 2-வது முறையாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு காரை ஓட்டி வந்தான். ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்தபோதே அது வெடித்து சிதறியதால் அவன் பலியானான். ஆனால் அவனது முயற்சி தோல்வியில் முடிந்தது.

    வெடித்து சிதறிய காரில் 2 சிலிண்டர்கள் இருந்தன. இதேபாணியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தான் இலங்கையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனவே கேவையிலும் 100-க்கும் மேற்பட்டவர்களை கொல்லும் நோக்கத்திலேயே அவன் கார் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜமேஷா முபின் ஓட்டி வந்த கார் முழுக்க முழுக்க பெட்ரோலில் இயங்கக் கூடிய கார். எனவே அதை வெடிக்க வைக்கும் நோக்கத்திலேயே 2 சிலிண்டர்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜமேஷா முபினும், முகமது அசாருதீனும் சேர்ந்து கோவையில் எந்தெந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

    எனவே இப்போது நடந்த தாக்குதலை ஜமேஷா முபின் மட்டும் நடத்தி இருக்க முடியாது. இதன் பின்னணியில் சிலர் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    முகமது அசாருதீன் தற்போது ஜெயிலில் இருக்கிறார். எனவே ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று தீவிர விசாரணை நடத்தி முதல் கட்டமாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இன்னும் பலர் அவருடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் அவர்கள் கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் ஜமேஷா முபின் பழகி உள்ள நிலையில் அவனது பின்னணி பற்றியும் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும், துணை நிலை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

    • கோவில்கள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கோவையில் கார் வெடித்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    கார் வெடிப்பு சம்பவம் கோவில்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையடுத்து சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவில்கள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதே போன்று கோவில்களின் அருகில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • பலியானவர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • உடனடியாக ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

    கோவை:

    கோவையின் முக்கிய பகுதியான டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் முன்பு நேற்றுமுன்தினம் அதிகாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 2 துண்டாக வெடித்து சிதறியதுடன் கார் தீப்பற்றி எரிந்தது. தீயில் கருகி ஒரு நபர் பிணமாக கிடந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் 2 கியாஸ் சிலிண்டர்கள் கிடந்ததால் இது விபத்தாக இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் கோவில் முன்பு என்பதாலும், கார் தீப்பிடித்ததில் கோவிலின் முன்பகுதி சேதம் அடைந்திருந்ததாலும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது.

    தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் என்பதால் பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் யாராவது சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவை விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கடந்த 2 நாட்களாகவே அவர் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் இரும்பு குண்டுகள் கிடந்தன. இதனால் சந்தேகம் மேலும் வலுத்தது.

    இதற்கிடையே காரில் இறந்து கிடந்தவர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். அவரது பெயர் ஜமேஷா முபின் (வயது 25). கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் ஜமேஷா முபினின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பலியானவர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக ஜமேஷா முபின் வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

    கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் திடுக்கிடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உள்பட 5 பேர் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறார்கள். அந்த மூட்டை மிகவும் கனமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் தூக்க முடியாமல் 5 பேரும் சேர்ந்து தூக்கி காரில் ஏற்றுகிறார்கள். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

    அந்த மூட்டையில் அவர்கள் என்ன எடுத்துச் சென்றார்கள்? ஜமேஷா முபின் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியதால் மூட்டையில் இருந்தது அனைத்தும் வெடிபொருளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் ஜமேஷா முபின் உடன் மர்ம பொருளை ஏற்றிச் சென்றவர்களை பிடித்தால் அடுத்தக்கட்ட விபரீதத்தை தடுக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கிறார்கள். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மர்ம பொருட்கள் என்ன? சதிச்செயலுக்கு பயன்படுத்த அந்த பொருளை எடுத்துச் சென்றார்களா? தாக்குதல் என்றால் எந்தவிதமான தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்? என பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் வீட்டில் இருந்து காரில் கொண்டு சென்ற பொருட்களை எங்கு வைத்துள்ளனர்? என்பது பற்றியும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைதானவர்கள் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தங்களை அழைத்ததாகவும், அவருக்கு உதவி செய்ய சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் அதனை ஏற்காமல் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

    கைதான 5 பேர் அளிக்கும் தகவலை கொண்டே ஜமேஷா முபின் இறந்தது எப்படி, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது? என்ற விவரங்கள் தெரியவரும். மேலும் இந்த வழக்கை தமிழக போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கவும் வாய்ப்பு உள்ளது.

    • கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா?.
    • காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் கோவில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. மேலும், விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறை தலைவர், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

    காவல்துறை தலைவர் நேற்றைய பேட்டியின்போது, சம்பவ இடத்தை தடய அறிவியல்துறை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு பிரிவினரும் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், காரின் உரிமையாளர் யார்? சிலிண்டர் வாங்கப்பட்டது பற்றிய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் இச்சம்பவம் விபத்தா? தற்செயலா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக பேட்டி அளித்துள்ளார்.

    இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

    கோவையில் கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள், கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

    எனவே, இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்றும், அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×