search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிம் பெய்ன்"

    • தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன்.
    • இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது கேப்டவுனில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. பந்து 'ஸ்விங்' ஆவதற்காக ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் உப்புதாள் கொண்டு பந்தை தேய்த்ததும், அதற்கு கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. கேப்டன் பதவியையும் சுமித் இழந்தார். அவருக்கு பதிலாக டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது.

    2021-ம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றிய டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரச்சினையில் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார்.

    இந்த நிலையில் 4 ஆண்டுக்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தும் யுக்தியை கையாண்டதாக டிம் பெய்ன் பரபரப்பான குற்றச்சாட்டை இப்போது கிளறியுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்த விஷயம் குறித்து கூறியிருப்பதாவது:-

    கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த உப்புத்தாளை எடுத்து பந்தை தேய்க்கும் காட்சியை திரையில் பார்த்ததும் ஒருகனம் அதிர்ச்சியில் உறைந்து போனோம். கிரிக்கெட்டில் பந்தின் தன்மையை மாற்ற முயற்சிப்பது நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் உப்புத்தாளை கொண்டு தேய்த்தது வேறு மாதிரி. இது வெட்ககேடான செயல். ஆனால் இது மாதிரி செய்ய வேண்டும் என்று அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையில் சுமித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.

    3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம், வீரர்களுக்கு தடை குறித்து அதிகமாக பேசப்பட்டன. அதன் பிறகு 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியினர் பந்தை சேதப்படுத்தியதை நான் பார்த்தேன். நான் பந்து வீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த போது, 'மிட்ஆப்' திசையில் நின்ற ஒரு தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன். ஆனால் பான்கிராப்ட்டின் செயலை அம்பலப்படுத்திய அந்த டெலிவிஷன் இயக்குனர் இந்த காட்சியை திரையில் இருந்து உடனடியாக நீக்கி விட்டார். இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அந்த வீடியோ காட்சியை மீண்டும் காண்பிக்கவில்லை.

    இவ்வாறு அதில் டிம் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

    ×