search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவை காய்ச்சல்"

    • ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது.
    • நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன.

    இங்கு வளர்க்கப்படும் பறவைகளுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனை கால்நடைதுறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துக்களுக்கு ஏவியன் புளூ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அந்த பண்ணைகளில் சுகாதார துறையினர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் நோய் பாதிப்புக்கு ஆளான பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு நடந்த பரிசோதனையில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி சுமார் 20,471 வாத்துக்கள், கோழிகள் கொல்லப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை ஆலப்புழா மாவட்ட நிர்வாகமும், ஹரிபாடு பேரூராட்சியும் மேற்கொண்டுள்ளன.

    ×