search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசும்பொன் நினைவிடம்"

    • தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.

    அந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் அ.தி.மு.க. மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

    பின்பு குருபூஜை விழா முடிந்ததும் தங்க கவசம் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும். லாக்கரில் உள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. பொருளாளரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்று செல்வார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேவர் தங்க கவசத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனித்தனியாக கேட்டுக்கொண்டனர். ஆனால் தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அ.தி.மு.க.வின் 'ஏ' மற்றும் 'பி' தரப்பில் பல்வேறு பிரச்சினை இருப்பதால் தங்ககவசத்தை அவர்களிடம் வழங்க உத்தரவிட முடியாது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகளும், தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்து போட்டு தங்க கவசத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து மதுரை வங்கியில் இருந்த தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரிகள், தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவர் நினைவிட கும்பாபிஷேகம் மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன்னில் நாளை தொடங்குகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பசும்பொன் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×