search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை"

    • இன்று 3-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணி புறக்கணிப்பில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதால் கிட்டத்தட்ட 210 டன் வரை குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து கடந்த மாதம் 31-ந் தேதி முதல் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 1800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு போராட்டத்தை தொடங்கும் பணியாளர்கள் மாலை 5 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 200-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று பணிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

    ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் இதனை ஏற்காமல் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகர் பகுதியில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.

    குறிப்பாக மாநகர் பகுதியில் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.

    மாநகர பகுதியில் நாளொன்றுக்கு 70 டன் முதல் 75 டன் வரை குப்பைகள் சேரும். தொடர்ந்து 3-வது நாளாக பணி புறக்கணிப்பில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதால் கிட்டத்தட்ட 210 டன் வரை குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. தெருவோரம் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

    குப்பைகளை தெரு நாய்கள் கிளறி விடுவதால் தெரு முழுவதும் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையோரம் நடக்கும் பொது மக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நேற்று இரவு மாநகர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் ஒருவர் திடீரென மாநகராட்சி மேல்மாடிக்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சக ஊழியர்கள் வேண்டுகோளை ஏற்று அவர் கீழே இறங்கி வந்தார். கீழே இறங்கி வந்த அவரை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து இன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேரடியாக போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வேதானந்தம் உடனிருந்தார்.

    ×