search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 283648"

    • இன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. அந்த ஆழ்வார்கள் யார் யாரென்று பார்ப்போமா?

    திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் என்பவர்களே இந்த பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இவர்களில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பதற்காக ரெங்கநாதரால் உருவாக்கப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழா என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து திருவாய்மொழி திருநாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார்.
    • இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தென்திருப்பேரை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார். இரவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்

    மார்கழி- திருஅத்யயன திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நவதிருப்பதி கோவில்களில் பரமபத வாசல் திறப்பு என்று அழைக்கப்படும். சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில், தென்திருப்பேரை மகரநெடுகுழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகியவற்றில் பகல் பத்து திருவிழா, இராப்பத்து திருவிழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நடைபெறும் பகல் பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கம், நவநீத கிருஷ்ணன், நாச்சியார் திருக்கோலம், மாரிசன் வதை, கஜேந்திர மோட்சம், கன்றுகொன்டு விளாகண்ணி எறிதல், கோபியர் துகில் பறித்தல், கோவர்த்தன கிரியை குடைபிடித்தல், வாமானா ஆவதாரம், ஆண்டாள் திருக்கோலங்களில் சுவாமி கள்ளப்பிரான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமி கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    மாலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு பக்தி உலா, படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது. இராப்பத்து திருவிழாவில் 2-ம் நாளில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, பக்தி உலா, 9 மணிக்கு படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை

    இதேபோல் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுவாமி சயனதிருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரவு 10.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோவில் மார்கழி திரு அத்யயன உற்சவம் - திருவாய்மொழி முதல் திருநாள் மூத்த வேலியார் குடும்ப டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட வைகுண்ட ஏகாதசி மண்டகப்படியின் சேஷ சயனம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்க்கு கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் ரா.சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடந்தது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கன்னியாகுமரி விேவகானந்தபுரத்தில் உள்ள விவேகான ந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்பட்ட வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் பூலங்கிசேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை போன்றவை நடந்தது. இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் குமரி மாவட் டத்தில் திருப்பதிசாரம் திருவாழிமார்பன் திருக்கோ வில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், மகாதானபுரம் நவநீத சந்தாண கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    • கள்ளழகர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
    • கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.



    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தார். 

     அலங்காநல்லூர்

    108 வைணவ தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 6.25 மணிக்கு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் வண்ணக்குடை, தீவட்டி பரிகாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார்.

    சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி கும்பிட்டனர். சொர்க்கவாசல் வழியாக சுவாமி -அம்பாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி னர்.

    கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை நகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று காலை முதல் திரளான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கூடலழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.

    இதேபோல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    • தொண்டி, சாத்தூர், தேவகோட்டை கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அலங்க ரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூரில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாத்தூரப்பன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய ரெங்கநாத பெருமாளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 12-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத் தலங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

    பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணி வரை காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான வருகிற 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலுக்கு வெளியே 92 சி.சி.டி.வி. கேமராக்களும் என மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    • பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
    • அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    சென்னை:

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

    இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    அதன்பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பொது தரிசனம் நடக்கிறது.

    • இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

    பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (22-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது.

    இதையொட்டி நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

    இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

    இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1-ந்தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    மறுநாள் (2-ந்தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • 23-ந்தேதி முதல் ஜனவரி 11-ந்தேதி வரை மூலவர் முத்தங்கி சேவை சாதிப்பார்.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

    பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    திருநெடுந்தாண்டகம் திருவிழா நாட்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்யபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின்போது, தினமும் காலையில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் நம்பெருமாள் பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார்.

    வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி அன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து 7-ம் திருநாளான 8-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 9-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ராப்பத்து 10-ம் திருநாளான 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    இதையொட்டி கோவிலில் முக்கிய பகுதிகளில் வர்ணம் தீட்டும் பணி, வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • மூலவர் கருவறை தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் செய்யப்படும்.

    வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதற்காக, திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    ஜனவரி மாதம் 2-ந்தேதி வி.ஐ.பி. பக்தா்களுக்கு (செல்ப் புரோட்டோகால்) மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர் ஜனவரி மாதம் 1-ந்தேதி தொடங்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் கொடுத்துத் தீரும் வரை திறந்திருக்கும். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்லலாம். ஆனால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    வைகுண்ட துவார தரிசனத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆனந்த நிலையம் (மூலவர் கருவறை) தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளது.

    1957, 1958-ம் ஆண்டுகளில் தங்க முலாம் பூசும் பணி நடந்தது. அதேபோல் அடுத்த ஆண்டு தங்க முலாம் பூசும் பணி தொடங்க உள்ளது. பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தங்கம் காணிக்கை வழங்கியதையும், பிரதான உண்டியலில் தங்கம் காணிக்கையாகப் போட்டதையும் வைத்து ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசப்படும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 1,100-க்கும் மேற்பட்ட கோவில்களை விரைவாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி-திருமலை 2-வது மலைப்பாதையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    திருமலையில் உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜி நகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பதி தாதய்யகுண்டா கங்கையம்மன் கோவில் வளர்ச்சிக்கு ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறைகளை நவீனப்படுத்தும் பணிகளுக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக ஆண்கள் விடுதி கட்ட ரூ.3.35 கோடி ஒதுக்கப்படும். நந்தகம் விடுதியில் தளவாடங்கள் வாங்க ரூ.2.95 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்க ரூ.2.56 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் திருத்தப்படாததால், ஒப்பந்தத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பிற வகைகளின் ஊதிய விகிதங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    வழக்கமான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 850-ம் பிரம்மோற்சவ விழா பரிசு வழங்கப்படும்.

    லட்டு கவுண்ட்டர்களில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் லட்டுகளை கூடுதல் விலைக்கு பக்தர்களிடம் விற்பனை செய்கிறார்கள். இதுதொடர்பாக பக்தர்களிடம் இருந்து பறக்கும் படை துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே லட்டு கவுண்ட்டர்களில் லட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×