search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நீக்க நோட்டீஸ்"

    • அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் உழவர் சந்தை அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பணி புரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மாலை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினர். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அம்மா உணவகம் சாவியை வழங்க வேண்டும் என அதிரடியாக  உத்தரவிட்டனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் காரணமின்றி எங்களை பணி நீக்கம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரனை நேரில் சந்தித்தனர். அப்போது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர்களை அரசியல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சார்பில் அம்மா உணவகத்தில் பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்தபோது மதியம் விற்பனைக்காக சமைக்கப்பட்ட உணவு அதிகாலையில் சமைத்து சூடான முறையில் இல்லாமலும், தரமற்றதாகவும் இருந்தது. மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தினமும் அதிகளவில் அம்மா உணவகத்தில் உணவு உண்டு வருகின்றனர். ஆனால் முழு அளவில் கணக்கில் காட்டாமல் மாநகராட்சி கருவூலத்தில் விற்பனையாகும் தொகையை குறைவாக செலுத்தி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகத்தில் தினசரி 3600 ரூபாய் செலுத்தி உள்ளார்கள். ஆனால் தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 1000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். விதிமுறைகளின் படி அம்மா உணவகங்களில் மதியம் உணவில் கட்டாயமாக தயிர் சாதம் சமைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தெரிவித்தும் தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.

    மேலும் சமையல் செய்யும்போது பணியாளர்கள் கட்டாயம் தலையில் தொப்பி அணிந்து, கையுறைகள் அணிந்தும் பணி புரிய வேண்டும். சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அம்மா உணவகம் விதிமுறைகளுக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் இது போன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் 3 தினங்களுக்குள் எழுத்து மூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடலூரில் அம்மா உணவகத்தின் நீக்கப்பட்ட பெண் பணியாளர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற உணவு சமைத்திருப்பதாகவும், சரியான முறையில் விற்பனை செய்யப்பட்ட பணம் செலுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பதாகவும் தெரிவித்து அதற்கு விளக்க கடிதம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×