search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை.
    • இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை.

    உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.

    உலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.

    இதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.

    ஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.

    இறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்பட்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

    சரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது? என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.

    எனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.

    அதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.

    செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.

    ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு.

    எனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது.

    ஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.

    மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    முதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன.

    இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை. எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.

    நாமும் இதே பாதையில் செல்கிறோமா? ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா? இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா? மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா? அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன? இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம்? தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.

    • அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    • சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

    ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    மேலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில் முதல் ராட்சத குடில் வரை அமைக்கப்பட்டிருந்தது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் வாசித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, நாகை, கோவை போன்ற நகரங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தேவாலங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி அவர்கள் மகிழ்ந்தனர். 

    • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்.
    • எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இயேசு பெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார். ஆட்சியாளர்களின் மக்கள்விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இயேசுபெருமானை சிலுவையில் அறைந்து மரண தண்டனை அளித்தனர். அதனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார் இயேசுபெருமான்.

    எளியோருக்காக குருதி சிந்திய - தனது உயிரைக் கொடுத்த இயேசுபெருமான் சகோதரத்துவத்தையே உலக மாந்தருக்கான நற்செய்தியாக அளித்துச் சென்றார். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளாக மாறியிருப்பதற்கு அது போதிக்கும் சகோதரத்துவமே அடிப்படையாகும்.

    அத்தகைய சகோதரத்துவத்தை இந்திய மண்ணிலும் மலரச்செய்யவும் நிலைபெற வைக்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம். சனாதனப் பாகுபாடு அரசியலை- மதவழி சிறுபான்மையினருக்கான வெறுப்பு அரசியலை மேலும் வலுப்பெறவிடாமல் தடுத்து வீழ்த்தவும் மதசார்பற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் இப்பெருநாளில் உறுதியேற்போம்.

    சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை:

    சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு களைகட்டி உள்ளது.

    நாளை (25-ந்தேதி) இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.

    கிறிஸ்தவர் வீடுகளில் வண்ண அலங்கார தோரண மின் விளக்குகள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கார சீரியல் விளக்குகள் ஜொலித்து வருகின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நண்பர்கள், உறவினர்கள், கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னையில் ராயப்பேட்டை 'எக்ஸ்பிரஸ் அவென்யூமால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், அண்ணாசாலை 'ஸ்பென்சர் பிளாசா, வடபழனி 'போரம்' மால், அமைந்தகரை 'ஸ்கை வாக்' அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி இன்று நள்ளிரவு சென்னை சந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம் சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தேவாலயம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம், கிறிஸ்துமஸ் குடில், கலை நிகழ்ச்சி ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பெசன்ட் நகர் வேளாங்கன்னி ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், உள்ளிட்ட ஆலயங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

    • காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

    நாகர்கோவில், டிச. 24-

    உலகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே கிறிஸ்தவ மக்கள் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண வண்ண ஸ்டார்களை பறக்க விட்டும், மின் அலங்காரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து உள்ளனர்.

    நாகர்கோவில் கடை வீதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜவுளி ரகங்களை தேர்வு செய்யவும், ஸ்டார்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நாகர்கோவிலுக்கு தினமும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நாளை பண்டிகை என்பதால், இன்று கடை வீதிகளில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.ஆயத்த ஆடை கடைகள், சாலையோர வியாபாரிகள் போன்றோரை மக்கள் முற்றுகையிட்டு உடைகளை வாங்கினர். இதன் காரணமாக பல பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கேக் கடைகளிலும் இன்று மக்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் பல வகை கேக்குகளை வாங்குவதில் போட்டி போட்டனர். அதற்கேற்றார் போல் அனைத்து கேக் கடைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பண்டிைகயை கொண்டாட குமரி மாவட்டம் வந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நாகர் கோவிலுக்கு ஏராளமா னோர் வந்ததால், பஸ் மற்றும் ரெயில் நிலையங்க ளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி பொது மக்களின் பாதுகாப்புக்காக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் சாலைகளில் மப்டி உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.
    • சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற மலர் சந்தைகளில் ஒன்று குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை ஆகும்.

    இந்தச் சந்தைக்கு ஆரல்வாய்மொழி குமாரபுரம், புதியம்புத்தூர், ராதாபுரம், மாடநாடார் குடியிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், திண்டுக்கல், மதுரை, மானா மதுரை, கொடை ரோடு, வத்தலகுண்டு, ராஜபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன. பெங்களூருவில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ், தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, துளசி, கோழிபூ போன்ற பல பூக்கள் வந்து விற்பனையாகிறது.

    இந்த சந்தையில் இருந்து தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கேரள வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விலையேற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்துக்கும் பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் இன்று விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்தே காணப்பட்டது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனையானது.
    • கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    மதுரை

    உலகம் முழுவதும் வெகுவி மரிசையாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மதுரையிலும் நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கடந்த மூன்று நாட்களை ஒப்பிடு கையில் கிலோ 1500 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

    இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய் என்று விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை 2500 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. அது போல பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 1200 ரூபாய்க்கும், அரளி, சம்பங்கி மலர்கள் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இது தொடர்பாக மலர் வியாபாரிகள் கூறுகையில் தற்போது பனி அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இந்த விலை வருகிற புத்தாண்டு வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பூக்களின் விலை வழக்கம்போல இருப்பதால் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருகிறார்கள்.

    • சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
    • சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பண்டிகையைக் கொண்டாட மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நகை பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பாரிமுனை அந்தோணியார் ஆலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கதீட்ரல்) ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை ஆலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வரும் கிறிஸ்தவ ஆலயங்களில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.

    போலீஸ் ரோந்து வாகனங்கள் முக்கியமான பகுதிகளில் தொடர் ரோந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், 'டிரோன்' கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கிறிஸ்தவ மக்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இன்று இரவு தொடங்கி 2 நாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காதவாறு தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும் போலீசார் அங்கு ரோந்து செல்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.

    சென்னையில் உள்ள 350 கிறிஸ்தவ ஆலயங்களில் போலீசார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    • இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.
    • போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அன்பின் திருஉருவம், கருணையின் மறுவடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பு காட்டி, இறைவனின் தூதுவராக, கருணையின் வடிவமாக விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து சமூக சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது.

    மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, உலகில் அன்பு மட்டுமே அனைவரையும் ஆட்சி செய்வதை உறுதி செய்வோம். இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம், தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் உறுதி கொள்வோம். உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. வின் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையானது ஒற்றுமையை, அமைதியை வலியுறுத்துகிறது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் அனைவரிடமும் அன்போடு, ஒற்றுமையாக நட்புறவோடு பழகுவது தனிச்சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும், இயேசுவை வரவேற்கும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    அன்பையும், பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு போதனைகளை பின்பற்றி, உலக மக்களிடையே சகோதரத்துவமும், சமாதானமும் கருணை எண்ணமும் தழைத்தோங்கட்டும். கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    இயேசுவின் போதைகளை ஏற்று அமைதியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு பாராட்டி, பிறருக்கு உதவி செய்து, மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து தனிமனித ஆசையை அடக்கி வாழ்ந்தால் உலகில் மனித குலம் செழிக்கும். இயேசுவின் போதைகளை ஏற்று நாமும் கடைபிடித்து வாழ்ந்திட அவர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    தமிழகத்திலே சிறுபான்மையினரால இருக்கக் கூடிய கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக அரசு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொண்டிருக்கிறது. அனைவரும் இயேசு போதித்த அன்பை மனதில் கொண்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    இயேசு நாதர் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் நாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த காலம் அன்பின் காலம், கிருபையின் காலம் என்று அழைக்கப்படுகிறது. இயேசுவானவரின் பிறப்பின்போது வான தூதா்கள் "பூமியிலே சமாதானமும், மனுஷா்மேல் பிரியமும் உண்டாவதாக"-என்று கூறி கடவுளைத் துதித்தார்கள். அந்த வாழ்த்துக்கள் இன்றும் உலக மக்களுக்கு ஆசீா்வாதமாக அமைந்துள்ளது. இந்த இனிமையான கிறிஸ்துமஸ் காலத்தின் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்:-

    நம் பொருளாலும் ஞானத்தினாலும் இவ்வுலகில் இருக்கும் எல்லோரையும் சுமக்க இந்த கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவராக இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.

    இவ்வாறு அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மேலும் வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம்:-

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ.,

    • கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் வழங்கட்டும்.
    • பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவருடைய மன்னிப்புச் செய்தி மனிதகுலத்திற்கான விலைமதிப்பற்ற பரிசாகும். மேலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் வழங்கட்டும். பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக்கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான்.
    • அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழி காட்டட்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக்கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். "உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்றும், "மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்" என்றும், "அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.

    இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது. 1989-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தையும், 1999-ம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும், 2007-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்தார். அவரது அடியொற்றி நடக்கும் நமது திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது கிறிஸ்தவ மக்களின் சமூக-பொருளாதார-கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது.

    அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழி காட்டட்டும்.

    இவ்வாறு அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
    • கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

    போரூர்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து உள்ளது.

    தென் மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டது. ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பெரும்பாலான மக்கள் தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்யவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் தலா 300 பஸ்கள் வீதம் கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மக்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு படை எடுத்தனர்.

    தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.

    பெரும்பாலான சென்னை மக்கள் கார்கள் மற்றும் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று மதியத்துக்கு பிறகு தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. ஒரே நேரத்தில் பஸ்கள் கிளம்பியதால் இந்த பகுதிகளில் வாகனங்கள் மிகவும் ஊர்ந்தே சென்றன. இரும்புலியூரில் ராஜகரை முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட்டில் நேற்று மாலை 4-மணியில் இருந்து சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாட செல்லும் பொதுமக்கள் கார், பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி.பரத் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், நேற்று அமாவாசையையொட்டி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    ×