search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகல் விளக்குகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்"

    • சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
    • பல்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருள், பரிசு பொருட்கள், கார்த்திகை விளக்குகளை களி மண்ணால் செய்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    இங்கு கார்த்திகை தீப திருநாளுக்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.

    வெளி மாவட்டம், மாநில விற்பனையாளர்கள் தேவையான விளக்குகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.


    சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு உள்ளிட்ட வெவ்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

    களி மண்ணால் செய்யப்பட்ட மனை விளக்கு, பெரிய மனை விளக்கு, உருளி விளக்கு, சாமி சிலை வைத்த உருளி விளக்கு, 5 விளக்குகள் கொண்ட தாமரை விளக்கு என புதிய டிசைன்களில் ரூ.200 முதல் ரூ.1000 வரை விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

    இதுகுறித்து கலைடெரகோட்டா உரிமையாளர் கஜேந்திரன் கூறியதாவது:-

    மண்ணால் செய்யப்படும் பொருட்களின் செய்கூலி, விற்கும் விலையை விட அதிகம். ஆனாலும், மக்கள் மத்தியில் மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.

    இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருச்சி, தஞ்சை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கும் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    மண் பாண்ட கலையும், தொழிலும் அழியாமல் இருக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • திருக்கார்த்திகை தீபவிழா அடுத்த மாதம் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம்.

    தருமபுரி,

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபவிழா அடுத்த மாதம் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம்.

    இதுபோல் கோவில்களி லும், பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவர். அகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களி மண்ணால் செய்யப்பட்டு, பருத்தி திரியால், நெய் அல்லது நல்லெண்ணை கொண்டு எரியூட்டப்படும். விளக்கேற்றுவதால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகா லட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

    அகல்விளக்கு தீபம் ஏற்றுவது குறித்து கோவில் குருக்கள் தெரிவிக்கையில், அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு ஆகும். விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது உகந்தது. அதற்கு காரணமும் உண்டு. அகல் விளக்கு என்பது ஐம்பூதங்களான அதாவது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

    களிமண்ணில் நீரை ஊற்றி, ஒளியில் காயவைத்து, காற்றின் உதவிக்கொண்டு, நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை ஏழை தொழிலாளி உற்பத்தி செய்கிறார். இன்னுமொரு காரணம், அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பம் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயலை செய்கிறோம். அகல் விளக்கை ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள் என்றார்.

    இப்படி சிறப்பு வாய்ந்த தீபத்திருவிழாவையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகல்விளக்கு கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்துள்ளனர் என்று கூறும் விளக்கு உற்பத்தியாளர்கள் மேலும் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சிறு வியாபாரிகளும் அகல் விளக்குகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

    50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு முகம், பஞ்சமுகம், பாவை விளக்கு என பல்வேறு வகையான அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு விளக்கு அளவுக்கு ஏற்றார் போல் ரூ.3 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வியாபாரிகள் வாங்கி சென்று லாபம் மற்றும் போக்குவரத்து செலவு சேர்த்து விற்பனை செய்கிறார்கள்.

    சமீபத்தில் பெய்த மழையால் விளக்குகள் உற்பத்தி சற்று பாதித்தது. ஆனாலும் அவ்வப்போது அடித்த வெயிலை பயன்படுத்தி அகல்விளக்கு பணியை துரிதப்படுத்தி வருகிறோம். இன்று பிளாஸ்டிக், பீங்கான், மெழுகால் ஆன விளக்குகளை சிலர் பயன் படுத்தினாலும், பாரம்பரியமான அகல் விளக்குகளுக்கு என்றும் மவுசு குறையாது.

    இவ்வாறு அகல் விளக்கு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×