search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா ரசிகர்கள்"

    • கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.
    • மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போதெல்லாம் கேரளாவில் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் குழுவாக பிரிந்து தங்கள் ஆதரவு அணிகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் அமைப்பது என கேரளாவையே களைகட்ட வைப்பார்கள்.

    அந்த வகையில் இப்போது நடந்த உலக கோப்பை போட்டிக்காக கோட்டயம், திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட் அவுட்வைத்து அசத்தினர். இதற்கு போட்டியாக பிரேசில் வீரர் நெய்மருக்கும் ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதனை கேரளாவில் உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஒரு கட்டத்தில் இந்த உற்சாகம் வன்முறையாக வெடித்தது.நள்ளிரவு 12.30 மணி அளவில் கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.

    இதில் கால்பந்து ரசிகர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×