search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் மழை"

    • மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது.
    • கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு 9.30 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பின்னர் 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியது முதலே இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது. மேலும் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும் விழுந்தன.

    பெரியகுளத்தில் இருந்து 18 கி.மீ தூரத்தில் அடுக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து 12 கி.மீ தூரம் கடந்தால் பெருமாள்மலை வந்தடையும். இப்பகுதி மக்களுக்கு இந்த சாலை மட்டுமே முக்கிய வழித்தடமாக உள்ளது.

    கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதே போல் இன்றும் அடுக்கம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலையின் நடுவே விழுந்த பாறையை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் 27.40, காமாட்சிபுரம் 53, நத்தம் 72.50, நிலக்கோட்டை 25, சத்திரப்பட்டி 10.20, வேடசந்தூர் 49, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 46, பழனி 20, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 16.50, பிரையண்ட் பூங்கா 15 மி.மீ என மாவட்டத்தில் ஒரே நாளில் 335.20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
    • தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று மதியம் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் விடாது பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சத்திரப்பட்டி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் அடிக்கடி நிலவும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் மெயின் ரோட்டில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

    தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்களை தடுக்க மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் 26.9, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 21, பழனி 5.5, சத்திரப்பட்டி 11.6, நத்தம் 11.5, நிலக்கோட்டை 32, வேடசந்தூர் 26.7, காமாட்சிபுரம் 14.8, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 12 என மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×