search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் பலி"

    • தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயை அணைப்பதற்குள் அந்த யூனிட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம், பரவாடா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது.

    இதில் ரப்பர் குடோனிலும் தீ பற்றியதால் கரும்புகை சூழ்ந்து, அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

    அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்து அனக்கா பள்ளி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீயை அணைப்பதற்குள் அந்த யூனிட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமானது.

    தீ முழுவதும் அணைந்த பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 4 ஊழியர்கள் அடையாளம் தெரியாத அளவு உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

    காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு, தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டத்தை சேர்ந்த ராம் பாபு (வயது 32), குண்டூரை சேர்ந்த ராஜேஷ் பாபு (36), சவுடு வாடாவை சேர்ந்த ராமகிருஷ்ணா (28) என தெரியவந்தது.

    மற்றொருவரின் உடல் அடையாளம் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் அமர்நாத் தெரிவித்தார்.

    தீ விபத்து குறித்து அனக்கா பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×