என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நர்சுகள் போராட்டம்"
- கொரோனா தொற்றின் போது அரசு எங்களை மிரட்டி வேலை வாங்கியது.
- பணியில் சேராதவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இட ஒதுக்கீடு பற்றி கணக்கெடுத்தனர்.
சென்னை:
கொரோனா காலத்தில் செவிலியர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களின் ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அவர்கள் தற்போது பணியில்லாமல் உள்ளனர். மீண்டும் வேலையில் சேர்க்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர் சங்க பிரதிநிதி உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றின் போது அரசு எங்களை மிரட்டி வேலை வாங்கியது. நாங்கள் யாரால் பாதிக்கப்படுகிறோமோ அவர்களை வைத்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
2570 பேர் அழைக்கப்பட்டதில் 1506 பேர் பணியில் சேர்ந்தனர். அப்போது இதில் இடஒதுக்கீடு பின் பற்றப்பட்டது. இதில் பணியில் சேராதவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இட ஒதுக்கீடு பற்றி கணக்கெடுத்தனர்.
எனவே இதில் விதிமீறல் நடைபெறவில்லை. இதில் எப்படி விதிமீறல் வர முடியும்? இது எங்களின் வாதம். இந்த பிரச்சினை 2021-ம் ஆண்டு வரும்போது ஏற்கனவே கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் ஒத்துக் கொண்டது. அதற்கான உத்தரவும் இருக்கிறது.
அந்த கமிட்டி பொய்யா? அல்லது நேற்று நடந்த பேச்சு வார்த்தை பொய்யா? அல்லது நாங்கள் சொல்வது பொய்யா? என்பதை அரசு தரப்பில்தான் சொல்ல வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் மட்டுமே மாறி மாறி பேசினார்களே தவிர எங்களை பேச விடவில்லை.
கொரோனாவின்போது மக்கள் உயிரை காப்பாற்றியதற்கு தண்டனையாக எங்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினீர்கள். பின்னர் எதிர்காலத்தில் வரக்கூடாது என்று உத்தரவும் போட்டுள்ளீர்கள்.
2½ வருடம் வேலை வாங்கியதில் 6 மாதம் சம்பளம் தரவில்லை. பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் எங்களை மிரட்டும் தொனியிலேயே பேசினார்கள்.
அது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
எங்களை வேலையை விட்டு நீக்கியது தவறு. முதல்-அமைச்சர் இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.
அதன்மூலம் எங்கு தவறு நடந்துள்ளது? விதிமீறல் செய்தது நர்சுகளா? அல்லது அதிகாரிகளா? என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட இருக்கும் 708 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் பணி வழங்கப்படும்.
- சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நடத்தப்பட்டே பணியில் சேர்த்தனர் என்று நர்சுகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை:
கொரோனா நெருக்கடி காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2300 செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட இருக்கும் 708 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் பணி வழங்கப்படும். சம்பளமும் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
இதற்கிடையில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நடத்தப்பட்டே பணியில் சேர்த்தனர் என்று நர்சுகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இன்று மாலையில் நர்சுகள் சங்கத்தினருடன் டி.எம்.எஸ்.சில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரியவரும்.
- நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
- அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தின் போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 2,500 தற்காலிக நர்சுகள் பணியமர்த்தப்பட்டனர்.
அவர்களின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அவர்களுக்கு இனிமேல் பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது.
இதையடுத்து நர்சுகளுக்கு தங்களுக்கு நிரந்தர பணி வழங்க கோரி போராட்டத்தில் குதித்தனர். எம்.ஆர்.வி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 5-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்று நர்சுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 நர்சுகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த அமலடைகோ கூறியதாவது:-
நர்சுகளின் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. ஆனாலும் இந்த போராட்டத்தை அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் போராட்டம் தொடரும். அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒப்பந்த நர்சுகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
- போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின்போது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2000-க்கும் மேற்பட்ட நர்சுகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதை அடுத்து தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 1-ந் தேதி முதல் சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் நாளில் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2-ம் நாள் போராட்டத்திற்கு கூடுதல் நர்சுகள் பங்கேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
3-ம் நாளான நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டனர். நர்சுகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புற வாசல் அருகே சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தின் போது அனைவரும் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று இரவு நாட்டாமை கட்டிடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 131 நர்சுகளை போலீசார் கைது செய்து கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர் இன்று அதிகாலை அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு போலீசார் கூறினார். ஆனால் நர்சுகள் வெளியேற மறுத்ததால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் மீண்டும் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்ததால் அவர்களை போலீசார் வேன்களில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் போலீசாரின் வேன்களில் ஏற மறுத்த நர்சுகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது, போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தற்போது சேலத்தில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் மாற்று வழியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியபடி 5 கிலோமீட்டர் தூரம் நடந்தபடியே சென்றனர். இதனால் அவர்கள் மீண்டும் வேறு வழியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கருதி, போலீசார் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சேலம்:
கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
- கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம்.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.
இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிகமாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்களில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்