search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையான் நோய்"

    • வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
    • மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜப்பன் (பயிர் நோயியல்), ஆனந்தி (பூச்சியியல்) குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேலன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சேத்திரபாலபுரம், பழையகூடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர், இது குறித்து குழுவினர் தரப்பில் கூறியதாகவது:-

    சுவர்ணா சப்-1, ஆடுதுறை-51 மற்றும் பிபிடி 5204 போன்ற நெல் ரகங்களில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

    பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும் எனத் தெரிவித்தனர்.

    மேலும், இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஆடுதுறை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரைகள் வழங்கினர்.

    விவசாயிகள் தழைச்சத்து உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி பட்டம் வீட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும்.

    புகையான் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் புகையான் பூச்சிக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை நடவு செய்ய வேண்டும்.

    நெல் நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். புகையான் பாதித்த பகுதிகளில் பட்டங்களுக்கு இடையே உள்ள நெற்குத்துக்களை நன்கு விலக்கிவிட்டு சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் பெற வசதி செய்ய வேண்டும். வயலில் நீர் தேங்காமல் உடன் நீரை வடியச்செய்ய வேண்டும். நீர் வடிந்த வயல்களில் மருந்துகளை நன்கு அடியில் உள்ள தூர்களில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

    மருந்து தெளிக்கும் போது மருந்தினை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்- 40 மிலி அல்லது ப்யூப்ரோ பெசின் 25 எஸ்.சி., 300 மிலி, அல்லது பிப்ரோனில் 5எஎப்சி -400 மிலி அல்லது கார்போசல்பான் 25 ஈ.சி., 300 மிலி, தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×