search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெசிந்தா ஆர்டர்ன்"

    • உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார்.
    • நியூசிலாந்தில் அக்டோபர் 14-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.

    வெலிங்டன் :

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 42). இவர்தான் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரும் ஆவார். 37 வயதில் ஜெசிந்தா, அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது உலகத்தலைவர் என்ற பெயரைப் பெற்றார்.

    இவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும், கிறைஸ்ட் சர்ச் நகர் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவ காலத்திலும், நெருக்கடியான தருணங்களில் நாட்டை வழிநடத்திய தலைவர் ஆவார். இந்த நிலையை அவர் பச்சாதாபமாகக் கையாண்டு, அவர் ஒரு சர்வதேச அடையாளமாக மாறினார். ஆனால் சமீப காலத்தில் நடந்த கருத்துகணிப்புகளில் அவரது செல்வாக்கு மிக மோசமாக குறைந்திருப்பது அம்பலத்துக்கு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நேப்பியர் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கண்களில் வழியத் தயாராக இருந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு தனது பதவி திடீர் ராஜினாமாவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் எனது 6-வது ஆண்டு பதவிக்காலத்தில் நுழைகிறேன். இந்த ஆண்டுகளில் எல்லாம் நான் எனது முழுமையான அனைத்தையும் தந்துள்ளேன். நான் இந்தப் பிரதமர் பதவிக்கு வந்தது எனது பாக்கியம். ஆனால் இது ஒரு சவாலான பணி ஆகும். நான் தொழிலாளர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து (பிரதமர் பதவி) பிப்ரவரி 7-ந் தேதி விலகுகிறேன். நியூசிலாந்தில் அக்டோபர் 14-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.

    கோடை விடுமுறை காலத்தில் எனது எதிர்காலம் குறித்து கவனிக்க நேரம் எடுத்துக்கொள்கிறேன். அதுவரை நான் பதவியில் தொடரலாம் என்று நம்பினேன். துரதிர்ஷ்டவசமாக அதை நான் செய்ய வில்லை. அப்படி தொடர்ந்திருந்தால் அது நாட்டுக்கு அவமதிப்பாக அமைந்து விடும். ஆனால் எம்.பி. பதவியில் தொடருவேன். நாட்டை அமைதியான சூழலில் ஒரு பக்கமும், நெருக்கடியான தருணத்தில் மற்றொரு பக்கமும் வழி நடத்த வேண்டியதாயிற்று. பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறாது என்பதற்காக நான் பதவி விலகவில்லை. வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். ஆனால் அந்த சவாலை சந்திப்பதற்கு புதிய தோள்கள் தேவை என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது பதவிக்கால சாதனைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்ற விவகாரத்தில் அடைந்துள்ள சாதனை, சமுதாய வீட்டு வசதி, குழந்தைகளின் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் தான் பெருமைப்படக்கூடிய அளவில் சாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜெசிந்தாவின் பதவி விலகல் முடிவு, நியூசிலாந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.

    ×