என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"
- கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.
- திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஹார்விப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 38). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், "நான் ஆதீஸ்வரன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் அவர்கள் "எங்களுக்கு படப்பாடி தெருவில் ஒரு வீடு உள்ளது. அதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.
இதனைத் தொடர்ந்து ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகும் அவர்கள் எனக்கு வீட்டை பத்திர பதிவு செய்து தர முன்வரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
- இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது.
கடலூர்:
வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்தார். இதையடுத்து இவரது பிள்ளைகள் ராதிகாவின் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் பணி செய்து வந்த ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அது முதல் இங்கேயே தனியாக வசித்து வருகிறார்.
இவரது தந்தை கருப்பையாவிற்கு 2 மனைவிகள், முதல் மனைவியின் மகன் ரமேஷ். தற்போது இவரது தந்தை 2-வது மனைவி, 2 பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக வசித்து வரும் ரமேஷ், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவார் என்று தெரிகிறது. இவர் 2 முறை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ், இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ரமேஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராமச்ச ந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அதில் ரமேஷின் மார்பு பகுதியிலும், தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.
மேலும், அவரின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரையில் இரத்தம் சிந்தி இருந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களையும், கடலூரில் இருந்து மோப்ப நாயினையும் வரவழைத்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியாக வசித்து வந்த ரமேஷினை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தனரா? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரை மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், பகுதியில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வாலிபர் "டிப்டாப்" உடையில் நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதியிடம் சென்று "சார் யாருக்காகவோ காத்து நிற்பதாக தெரிகிறது" என்றபடி நைசாக பேச்சுக் கொடுத்தார். மேலும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் 2பேர் தங்கி உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கட்டணம் என்று கூறினார். உடனடியாக ஒ.கே என்று கூறிய சப்-இன்ஸ்பெக்டர் அழகிகளை நேரில் பார்த்த பின்னர் கட்டண தொகையை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
இதையடுத்து வாடிக்கையாளர் கிடைத்து விட்டார் என்று நினைத்த வாலிபர் உடன் வருவது போலீஸ் என்று தெரியாமல் சப்- இன்ஸ்பெக்டர் இளம் வழுதியை அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மற்ற போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வருவது சரவணன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
- ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியில் மயிலை ரயில் நிலையம் எதிரே உள்ள கூவம் ஆற்றில் ஒருவர் மது போதையில் இறங்கி தரையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்.
இதுபற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, கள்ளகுறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரை சேர்ந்த அமோஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் மந்தைவெளி ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் இது போன்று நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து பின்பு அந்த நபரை அனுப்பி வைத்தனர்.
- கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.
போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
- விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில் 53½ மணி நேரத்தில் 35 ரெயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை அடைகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான இது கடந்த 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த இந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.
இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார்.
சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.
ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரெயில்வே ஊழியர்களிடம் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்போது கிடைத்த தகவலின் படி, விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றபட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
- பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
- பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.
அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.
இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.
மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.
மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 38). இவர் பி.எம்.சி. மார்க்கெட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இதற்காக மணலிவிளை எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்த வீட்டில் இருந்து பிணவாடை வீசுவதாக அப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தரையில் அழுகிய நிலையில் மார்ட்டின் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி பியூலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பியூலா ஆஸ்பத்திரியில் தங்கி மகளை கவனித்து வருகிறார். இதனால் மார்ட்டின் திசையன்விளையில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது35) விவசாயி. இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10). இந்த சிறுமி தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்து இருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.