search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மறுவாழ்வு மையம்"

    • போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது.
    • போதை மறுவாழ்வு மைய உரிமையாளர், கணக்காளர், பணியாளர் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் திடீரென உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது. மேலும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தப்பி ஓடிய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமுல்லைவாயல்:

    ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற 'லைப் லைன்' என்னும் போதை மறுவாழ்வு சிறார் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு 13 சிறார்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இங்கு தங்கியிருக்க விருப்பமில்லாமல் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த மணலி, கொருக்குப்பேட்டை, எம்.கே.பி. நகர், விருகம்பாக்கம், சர்மா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து தங்கி இருந்த 7 சிறுவர்கள் நேற்று முன்தினம் மையத்தின் காவலாளியிடமிருந்து சாவியை பறித்து கேட்டை திறந்து மையத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மையத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காலை 7 பேரில் 5 சிறுவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றதால் மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு பெற்றோர் மூலம் வந்து விட்டனர். இந்நிலையில் தப்பி ஓடிய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான்.
    • கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று முன்தினம் கழிவறையில் சிறுவன் மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான். பிரேத பரிசோதனையில், சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. சிறுவனை கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×