search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பாதை பணி"

    • நெல்லை-மதுரை இடையே கடைசி பகுதியாக இரட்டை அகல ரெயில் பாதை பணியானது மதுரை - திருமங்கலம் இடையே முடிவடைந்துள்ளது.
    • நெல்லை ரெயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு வரப்பிரசாதமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்கள் தினமும் சிக்னலுக்காக பல்வேறு ரெயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்துகிடந்து சென்றுவந்ததால் நேரம் விரயமானது. இதனை தொடர்ந்து நேரத்தை குறைக்கும் வகையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    அந்த வகையில் நெல்லை-மதுரை இடையே கடைசி பகுதியாக இரட்டை அகல ரெயில் பாதை பணியானது மதுரை - திருமங்கலம் இடையே முடிவடைந்துள்ளது. இதனை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் நாளை(திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறார்.

    நெல்லை - மதுரை அகல ரெயில் பாதை பணிகளில், நெல்லை - திருமங்கலம் இடையே சுமார் 139 கிலோமீட்டர் பாதை பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், திருமங்கலம் - மதுரை இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள மேம்பாட்டு பணிகள் முடிவடைந்ததும் சில நாட்களில் நெல்லை - மதுரை இடையே இரட்டை அகல ரெயில் பாதையில் ரெயில்கள் இயங்க தொடங்கிவிடும். இந்த 2 பணிகளும் முடிவடைந்த உடன் கிராசிங்கிற்காக ரெயில்கள் நிறுத்தப்படும் நிலை இருக்காது. இரண்டரை மணி நேரத்தில் மதுரையில் இருந்து நெல்லையை அடைந்து விட முடியும்.

    எனவே ஈரோடு - நெல்லை ரெயிலின் வேகத்தை அதிகரித்து இரவு 8.45 மணிக்குள் நெல்லை ரெயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், நெல்லையில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு ஈரோட்டுக்கு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் ரெயிலானது மாலை 5.45 மணிக்கு மதுரை வந்து அங்கிருந்து மணியாச்சி வரை முழு வேகத்துடன் இரவு 8.15 மணிக்கு வந்தடைந்து விடுகிறது.

    மணியாச்சியில் இருந்து நெல்லைக்கு மீதமுள்ள 29 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு 1 மணி 30 நிமிடங்கள் ஆகிறது. தினமும் இரவு 9.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லையை அடைவதால் அங்கிருந்து பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்துள்ளதால் அட்டவணையில் மாற்றம் செய்து இரவு 8.30 மணிக்குள் நெல்லையை சென்றடையும் வகையில் ரெயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    ×