search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம் காதலன்"

    • வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
    • சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார்.

    வேடசந்தூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    தனியாக வசித்து வந்த சிந்துவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித், தான் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கணவர் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து தனது காதலன் சொல்வதை உண்மை என நினைத்து அவரை நேரில் சந்திக்க விரும்பினார். இதனையடுத்து தனது வீட்டில் யாருக்கும் சொல்லாமல் திண்டுக்கல் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது காதலன் சொன்ன இடமான வேடசந்தூரில் சமித்தை தேடியுள்ளார்.

    அவர் எங்கும் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அந்த பெண்ணும் அவரின் நிலை அறிந்து வேதனைப்பட்டார். மேலும் காதலனை கண்டுபிடிக்கும்வரை தன்னுடன் இருக்குமாறு அடைக்கலம் கொடுத்துள்ளார். வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுகொண்டே காதலித்த சமித் பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமித் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதும், அவர் சாதாரண கொத்தனார் வேலை பார்த்து வந்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    தனது காதலன் சொன்ன விபரங்கள் அனைத்தும் போலியானது என அறிந்து வேதனையடைந்த அவர் யாரிடமும் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தார்.

    இதனிடையே சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் சிந்துவை தேடி வந்தனர்.

    3 மாதமாக சிந்து மாயமான நிலையில் கேரள போலீசார் அவரது புகைப்படத்தை தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிந்துவின் குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். உடல்நிலை சரியில்லாமல் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிந்து வந்தபோது அங்கு டி.எஸ்.பி துர்க்காதேவி தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மோகத்தில் போலியான காதலனை நம்பி உள்ளூரில் வசிக்க முடியாமலும், தனது கணவர் வீட்டிற்கு செல்லமுடியாமலும் இருப்பதாக சிந்து கதறி அழுதார். இதனையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை வரவழைத்து வேடசந்தூர் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சமூகவலைதளங்களில் ஏற்படும் காதலால் உண்டாகும் விபரீதங்களை குறித்து அறியாமல் இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வந்தாலும் வழிதவறி செல்லும் நபர்களை வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×