search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Trade Center"

    • நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வர்த்தக மையத்தில் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் அவை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டன.

    வர்த்தக மையம்

    அந்த வகையில் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் நெல்லை மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரே கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்த இடமானது திறந்த வெளியாக இருந்த நிலையில், அங்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 45 நாட்கள் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. இதனை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் சென்று கண்டுகளித்து செல்வது வழக்கம்.

    ரூ.56.71 கோடி மதிப்பு

    இந்நிலையில் அந்த இடத்தில் ரூ.56.71 கோடியில் வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் முன்பு இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் முழுமையாக இடித்து தள்ளப்பட்டு அங்கு கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது அந்த பணிகள் சுமார் 80 சதவீதத்தை எட்டி உள்ளது.

    இந்த மையத்தில் அரசு, தனியார் நிறுவன கருத்தரங்குகள், உணவு கண்காட்சி, புத்தக திருவிழா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு 2 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அரங்குகளுக்கு இடையே நடந்து செல்ல பாதை, அமர்ந்து உணவு சாப்பிடும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    குளிர்சாதன வசதி

    இதில் ஒரு அரங்கம் குளிர்சாதன வசதி கொண்டதாக வும், மற்றொன்று குளிர்சாதன வசதி இல்லாததாகவும் கட்டப்பட்டு உள்ளது. இங்கு நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கண்ணாடிகள் பொருத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலையில் இருந்து உள்ளே செல்பவர்களை வரவேற்கும் விதமாக பொதுமக்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் நுழைவு வாயில் ஆர்ச் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    விசாலமான கார் பார்க்கிங்

    இந்த வர்த்தக மையத்தின் கீழ்தளத்தில் சுமார் 370 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு விழாக்கள் நடத்துவதற்கும் இந்த கட்டிடம் பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் இதுபோன்ற விழாக்களுக்கு தனியார் மண்டபங்களை நாடி செல்லவேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

    வர்த்தக மையத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு வர்த்தக மையம் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×