search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்து விபத்து"

    • காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
    • நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

    காவேரிபட்டணம்:

    தருமபுரி மாவட்டம், நூலகஅள்ளி அருகேயுள்ள எம்.சவுளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 12 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கொட்டா என்ற இடத்தில் உள்ள கத்தாழை தொழிற்சாலையில் தங்கி பணிபுரிவதற்காக இன்று காலை ஒரு டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    இந்தநிலையில் சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இன்றுகாலை 7 மணி அளவில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்கள் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை நிமிர்த்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து நசுக்கியதில் அதில் அமர்ந்து வந்த தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்து (வயது20), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி என்ற 3 மாத பெண் குழந்தை, வசந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் புஷ்பா (35), காசி (35), அருண் (18), முருகன் (45), சதீஷ் (21), செல்லம்மாள் (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த முனுசாமி மற்றும் 3 மாத பெண்குழந்தை வர்ஷினி ஆகியோரின் உடல்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையிலும், மற்ற உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை நடந்த இந்த கோர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் விபத்தில் சிக்கிய டிராக்டர் மற்றும் பேருந்தை சாலை ஓரமாக போலீசார் அகற்றினர்.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    ×